நீர் நிலை ஆக்கிரமிப்பு; நீதிமன்றத்திடம் மறைப்பு! கோவையில் கால்வாய்கள் பெருமளவு மறிப்பு:அகற்ற வேண்டியது அதிகாரிகளின் பொறுப்பு!| Dinamalar

நீர் நிலை ஆக்கிரமிப்பு; நீதிமன்றத்திடம் மறைப்பு! கோவையில் கால்வாய்கள் பெருமளவு மறிப்பு:அகற்ற வேண்டியது அதிகாரிகளின் பொறுப்பு!

Updated : செப் 14, 2022 | Added : செப் 13, 2022 | |
கோவையில் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக, குறிப்பிட்ட கால இடைவெளியில் நீதிமன்றத்தில், மாவட்ட நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்ற உத்தரவு மதிக்கப்படாததால், கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவேயில்லை.தமிழகத்திலேயே, கோவையில் இருப்பது போன்று வேறு எந்த நகரிலும் நீர் நிலைகளுக்காக குரல் கொடுக்கும் அமைப்புகளும், அவற்றைக் காப்பதற்காகப்
நீர் நிலை ஆக்கிரமிப்பு; நீதிமன்றத்திடம் மறைப்பு! கோவையில் கால்வாய்கள் பெருமளவு மறிப்பு:அகற்ற வேண்டியது அதிகாரிகளின் பொறுப்பு!

கோவையில் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக, குறிப்பிட்ட கால இடைவெளியில் நீதிமன்றத்தில், மாவட்ட நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்ற உத்தரவு மதிக்கப்படாததால், கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவேயில்லை.தமிழகத்திலேயே, கோவையில் இருப்பது போன்று வேறு எந்த நகரிலும் நீர் நிலைகளுக்காக குரல் கொடுக்கும் அமைப்புகளும், அவற்றைக் காப்பதற்காகப் பாடுபடும் களப்பணியாளர்களும் இல்லை.

பல ஆண்டுகளுக்கு முன்பாக, 'சிறுதுளி' துவக்கி வைத்த இந்த பணி, இப்போது மாபெரும் இயக்கமாக மாறியுள்ளது. கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு, குறிச்சி குளம் பாதுகாப்பு அமைப்பு, கவுசிகா நீர்க்கரங்கள், சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்புக்குழு என, ஏராளமான நீர் நிலை பாதுகாப்பு அமைப்புகள் இங்குள்ளன. அதனால்தான், பல ஆண்டுகளுக்கு முன்பு, அழிவின் விளிம்பில் இருந்த நொய்யல் நதி, இப்போது புத்துயிர் பெற்று, கோவையிலுள்ள அனைத்து குளங்களையும் கடந்த சில ஆண்டுகளாக நிறைத்து வருகிறது.


நிலத்தடி நீர் உயர்வு


நகரின் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது; நீரின் தரம் அதிகரித்துள்ளது. மத்திய அரசின் உதவியுடன் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், குளங்களில் பல நுாறு கோடி ரூபாய் மதிப்பில், மேம்பாட்டுப்பணிகளை மேற்கொள்ளமுடிகிறது.ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, வாலாங்குளம், முத்தண்ணன் குளம் உள்ளிட்ட பல்வேறு நொய்யல் குளங்களிலும் இருந்த, பல்லாயிரக்கணக்கான ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற முடியாத நிலை இருந்தது.அந்த சூழ்நிலையில்தான், நொய்யலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, கோவையைச் சேர்ந்த ஓர் அமைப்பு சார்பில், பொதுநலமனு (W.P.No.11612 of 2016) தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட், 'நொய்யல் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் அகற்ற வேண்டும்; புதிதாக எந்த மேம்பாட்டுப் பணியையும் மேற்கொள்ளக்கூடாது; கோவையில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, கோவை மாவட்ட நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என்று உத்தரவிட்டது.அதன்பின்பே, வாலாங்குளம், முத்தண்ணன் குளம் உள்ளிட்ட குளங்களில் இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டன. ஆனால் அதற்குப்பின், பல ஆண்டுகளாக எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


ஆனாலும் அடங்காத ஆக்கிரமிப்பு


இதே குளங்களில் உள்ள அரசு கட்டடங்களையும், நொய்யல், சங்கனுார் பள்ளம், கவுசிகா நதி ஆகியவற்றின் கால்வாய்களில் உள்ள, பல நுாறு ஆக்கிரமிப்பு வீடுகள் உள்ளிட்ட கட்டடங்களை அகற்றவும், வேறெந்த முயற்சிகளும் நடக்கவில்லை. தடாகம் பள்ளத்தாக்குப் பகுதியிலிருந்து, கோவை நகரம் வரையுள்ள சங்கனுார் பள்ளம் மற்றும் அதற்கான ஓடைகளை ஒட்டியும், பல இடங்களில் ரோடுகளாலும், வீடுகளாலும் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அன்னுார் பகுதியில் கரியாம்பாளையம், காரேகவுண்டம்பாளையம் ஊராட்சிகளில் குளங்களில் மயானம், திடக்கழிவு மேலாண்மை கிடங்கு, வழிபாட்டுதளம், குடியிருப்புகள் அமைத்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. விரைவில் அத்திக்கடவு திட்ட நீர் வரவுள்ள நிலையில், ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டியது அவசியம்.

மாவட்ட நிர்வாகமே பொறுப்பு

இவற்றை அகற்றும் பொறுப்பு, பொதுப்பணித்துறை, கோவை மாநகராட்சி அதிகாரிகளுக்கும், இவர்களை ஒருங்கிணைக்கும் பொறுப்பு, மாவட்ட நிர்வாகத்துக்கும் உள்ளது.இந்த ஆண்டில், தென்மேற்குப் பருவமழை வழக்கத்தை விட, 17 சதவீதம் அதிகமாகப் பெய்தும் பல குளங்கள் நிரம்பவில்லை. கோதவாடி குளம், சின்னவேடம்பட்டி ஏரி, அக்ரஹார சாமக்குளம் ஏரி உள்ளிட்ட பல்வேறு நீர் நிலைகளுக்கும், நீர் வரும் பாதைகள் புதர் மண்டிக்கிடக்கின்றன; அல்லது ஆக்கிரமிப்பால் மறிக்கப்பட்டுள்ளன.இவற்றை அகற்றி, நீர்நிலை கால்வாய்களை மீட்டெடுத்தால், கோவை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள குளங்கள், ஏரிகள் அனைத்தும் எளிதில் நிரம்பிவிடும்.அப்படிச் செய்தால் விவசாயப்பரப்பைஇரட்டிப்பாக்க முடியும்; நீதித்துறையின் உத்தரவுக்காக இல்லாவிட்டாலும், விவசாயத்துக்கான நீதிக்காவது இவற்றை மீட்க வேண்டியது கலெக்டரின் கடமை!-நமது நிருபர்-

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X