கிரைம் ரவுண்ட் அப்: 25ம் ஆண்டு திருமண நாளில் மனைவியை கொன்றவர் கைது| Dinamalar

கிரைம் ரவுண்ட் அப்: 25ம் ஆண்டு திருமண நாளில் மனைவியை கொன்றவர் கைது

Added : செப் 14, 2022 | |
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் பிரிந்து வாழ்ந்த மனைவியை, திருமண நாளன்று கத்தியால் குத்தி கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.மயிலாடுதுறை, காமராஜர் சாலை, அக்பர் காலனியைச் சேர்ந்தவர் அருள், 48; வியாபாரி. 1997ம் ஆண்டு கூறைநாடு, விஸ்வநாதபுரத்தைச் சேர்ந்த ரேவதி, 45, என்பவரை காதல் திருமணம் செய்துள்ளார்.இவர்களது மகன் தீபன்ராஜ், 24; சென்னையில் சாப்ட்வேர் இன்ஜினியராக
crime, police, arrest

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் பிரிந்து வாழ்ந்த மனைவியை, திருமண நாளன்று கத்தியால் குத்தி கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.


மயிலாடுதுறை, காமராஜர் சாலை, அக்பர் காலனியைச் சேர்ந்தவர் அருள், 48; வியாபாரி. 1997ம் ஆண்டு கூறைநாடு, விஸ்வநாதபுரத்தைச் சேர்ந்த ரேவதி, 45, என்பவரை காதல் திருமணம் செய்துள்ளார்.இவர்களது மகன் தீபன்ராஜ், 24; சென்னையில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். மகள் மகா கிருத்திகா, 18, கல்லுாரி மாணவி.


குடி போதைக்கு அடிமையான அருள், மனைவி ரேவதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. எட்டு மாதங்களாக, கணவரை பிரிந்த ரேவதி, விஸ்வநாதபுரத்தில் உள்ள தாய் மல்லிகா வீட்டில் வசித்து வந்தார். அவர் மயிலாடுதுறையில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் கணக்கராக பணியாற்றி வந்த நிலையில், திருமண நாளான நேற்று முன்தினம் இரவு ஜவுளி கடைக்கு சென்று ரேவதியை தன்னுடன் வருமாறு அருள் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.


பின், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ரேவதியின் தாய் மல்லிகா, அருள் வீட்டிற்கு சென்று, மகள் ரேவதியை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆத்திரமடைந்த அருள், காமராஜர் சாலையில் தாய் மல்லிகாவுடன் நடந்து சென்று கொண்டிருந்த ரேவதியை கத்தியால் குத்தியுள்ளார். தடுத்த மல்லிகாவையும் தாக்கி தப்பி ஓடிவிட்டார். மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ரேவதி சேர்க்கப்பட்டு, நேற்று முன்தினம் அதிகாலை, 2:00 மணிக்கு உயிரிழந்தார். மயிலாடுதுறை போலீசார் அருளை கைது செய்தனர்.ஓய்வு ஐ.ஜி., வீட்டில் கைவரிசை: 'கவரிங்' நகையை திருடிய நபர்


ஓசூர்: ஓய்வுபெற்ற போலீஸ் ஐ.ஜி., பண்ணை வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர், தங்கம் என நினைத்து, கவரிங் நகையை திருடிச் சென்றார்.


கர்நாடகா மாநிலம், பெங்களூரு அருகே மார்கொண்டனஹள்ளியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன், 66; ஓய்வுபெற்ற போலீஸ் ஐ.ஜி.,யான இவருக்கு, கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே, கோட்டயங்கிரியில் பண்ணை வீடு உள்ளது. அவ்வப்போது விடுமுறை நாட்களில், தன் குடும்பத்துடன் அங்கு தங்கிச் செல்வது வழக்கம். தேவராஜ், 45, காவலாளியாக உள்ளார்.


கடந்த, 11ல் பாலசுப்பிரமணியன் குடும்பத்துடன் பண்ணை வீட்டிற்கு வந்து சென்றார். நேற்று முன்தினம் காலை பணிக்கு வந்த காவலாளி தேவராஜ், பண்ணை வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடப்பதை பார்த்தார். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, கதவின் பூட்டு மற்றும் வீட்டிற்குள் இரும்பு பீரோ உடைக்கப்பட்டு இருந்ததை கண்டார்.


பாலசுப்பிரமணியன் சென்று பார்த்தபோது, தங்க நகை என நினைத்து, வீட்டிலிருந்த, 5,000 ரூபாய் மதிப்புள்ள கவரிங் நகையை, மர்ம நபர் திருடிச் சென்றது தெரிந்தது. வீட்டிலிருந்த ஏழு, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை பார்த்தபோது, மர்ம நபர் ஒருவர் திருட்டில் ஈடுபட்டது பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை வைத்து, அந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.மாணவிக்கு தொல்லை; உதவி பேராசிரியர் 'சஸ்பெண்ட்'


தர்மபுரி: ''மருத்துவக்கல்லுாரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உதவி பேராசிரியர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்,'' என, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிர மணியன் கூறினார்.


தர்மபுரி அடுத்த நல்லம்பள்ளியில், புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட, 4.23 கோடி ரூபாய் மதிப்பிலான, 11 புதிய கட்டடங்களை திறந்து வைத்த அவர் கூறியதாவது:தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மாணவிக்கு, பேராசிரியர் சதீஷ்குமார், பாலியல் தொல்லை கொடுத்தது விசாரணையில் தெரிந்துள்ளது. அவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார். மேலும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.சிவகாசியில் காதல் தம்பதி தற்கொலை


சிவகாசி: சிவகாசி அருகே கங்காகுளத்தில் குடும்ப தகராறில் காதல் திருமணம் செய்த தம்பதி ஜெயமுருகன் 27, மாலதி 24, தற்கொலை செய்து கொண்டனர்.


விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கங்காகுளம் வடக்கு தெருவை சேர்ந்த கருப்பசாமி மகன் ஜெயமுருகன். ஸ்ரீவில்லிபுத்துார் கம்மாபட்டியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகள் மாலதி. இருவரும் ஸ்ரீவில்லிபுத்துாரில் தனியார் மில்லில் வேலை பார்த்த போது காதலித்து 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். மாலதி 6 மாத கர்ப்பிணி. ஜெயமுருகன் ஏற்கனவே தனது உறவினர் பெண்ணையும் காதலித்து வந்துள்ளார். அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில் கணவன், மனைவி இருவரும் விஷம் குடித்து இறந்தனர். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.2 மகள்களுடன் தாய் தீக்குளிக்க முயற்சி


ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த ஐயம்பேட்டையைச் சேர்ந்தவர் ராஜசேகர், 40; கூலித்தொழிலாளி. இவர் மனைவி ஜெயந்தி, 35; இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.கடந்த, 9ல் அதே பகுதியில், ராஜசேகர் புதிதாக வீடு கட்டி குடியேறினார்.


அப்போது, வீட்டில் சுவாமி படம் முன், 9 சவரன் நகை, 1 லட்சம் ரூபாய் வைத்திருந்தார். மறுநாள் பார்த்தபோது நகை, பணம் திருடு போனது. சோளிங்கர் போலீசில் ராஜசேகர் புகார் செய்து, நான்கு பேர் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தவில்லை, நகை, பணத்தை இதுவரை மீட்டுத்தரவில்லை.


விரக்தியடைந்த ஜெயந்தி, தன் இரண்டு மகள்களுடன் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். மூவர் மீதும் போலீசார் தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர்.எஸ்.பி., தீபாசத்யன், உரிய நடவடிக்கை எடுப்ப தாக உறுதி கூறினார்.ரூ.10 லட்சம் கடல் அட்டைகள் பறிமுதல்


தேவிபட்டினம்: ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தயிருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ கடல் அட்டைகளை மரைன் போலீசார் பறிமுதல் செய்தனர்.


தேவிபட்டினம் இப்ராஹிம் சேட் நகர் முகமது அலி மகன் முகமது அலி ஜின்னா 43. இவர் அரசால் தடை செய்யப்பட்ட பச்சைக்கடல் அட்டைகளை மொத்தமாக வாங்கி கடற்கரை ஓரத்தில் மணலில் புதைத்து வைத்து இலங்கைக்கு கொண்டு செல்ல இருப்பதாக தகவல் வெளியானது. தேவிபட்டினம் கடற்கரையில் மரைன் எஸ்.ஐ., அய்யனார் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். கடற்கரையில் ஏழு சாக்கு பைகளிலும், மூன்று பிளாஸ்டிக் கேன்களிலும் 400 கிலோ கடல் அட்டைகள் புதைத்து வைக்கப்பட்டிருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.latest tamil newsதேசிய நிகழ்வுகள்:மேற்கு வங்கத்தில் போலீசாருடன் பா.ஜ., மோதல்


கோல்கட்டா : மேற்கு வங்கத்தில் தலைமைச் செயலகம் நோக்கி பா.ஜ.,வினர் நடத்திய பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீஸ் வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில் ஏராளமான போலீசார் மற்றும் பா.ஜ., நிர்வாகிகள் காயம் அடைந்தனர்.செகந்திராபாதில் தீ விபத்து: எட்டு பேர் பலி


செகந்திராபாத்: தெலுங்கானாவின் செகந்திராபாதில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் இரவில் ஏற்பட்ட தீ விபத்தில், மூச்சுத் திணறல் ஏற்பட்டு எட்டு பேர் உயிரிழந்தனர். தரைதளத்தில் உள்ள மின்சார 'ஸ்கூட்டர்' விற்பனை மையத்தில் மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.எல்.கே.ஜி., சிறுமி பலாத்காரம்; பள்ளி பஸ் டிரைவர் கைது


போபால்: மத்திய பிரதேசத்தில் பள்ளி பஸ்சில் வைத்து எல்.கே.ஜி., படிக்கும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த டிரைவர் கைது செய்யப்பட்டார்.


ம.பி., மாநிலம் போபாலில் செயல்படும் பிரபல தனியார் பள்ளியில் எல்.கே.ஜி., படித்து வரும், மூன்றரை வயது சிறுமி, சமீபத்தில் பள்ளி முடிந்து வீடு திரும்பினாள். அப்போது சிறுமி, காலையில் அணிந்திருந்த சீருடை அணியாமல், பையில் வைத்திருந்த மாற்று உடையை அணிந்திருந்தாள். பெற்றோர் விசாரித்தபோது, பள்ளியின் பஸ் டிரைவரும், உடன் இருந்த பெண் உதவியாளரும் தனக்கு அந்த உடையை அணிவித்ததாக சிறுமி கூறினாள்.


மேலும், தன் உடல் முழுதும் கடுமையாக வலிப்பதாகவும் தெரிவித்தாள். தொடர்ந்து விசாரித்ததில், சிறுமியை, பஸ் டிரைவர் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தபோது, அவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை. இதையடுத்து, போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், அந்த சிறுமியை பஸ் டிரைவர் பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டது.


போலீசார் கூறியதாவது: பள்ளி முடிந்ததும், பஸ்சில் வந்தபோது இந்த கொடூர செயலை டிரைவர் அரங்கேற்றியுள்ளார். அப்போது பஸ்சில் சிறுமி, டிரைவர், உதவியாளராக இருந்த பெண் ஆகியோர் மட்டுமே இருந்துள்ளனர். இந்த விவகாரம் வெளியில் தெரியாமல் இருப்பதற்காக சிறுமிக்கு மாற்று உடையை அணிவித்து உள்ளனர். இதையடுத்து டிரைவரும், அந்த பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரித்து வருகிறோம். இந்த குற்றத்தை மறைக்க பள்ளி நிர்வாகம் உடந்தையாக இருந்தது தெரியவந்தால், அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
உலக நிகழ்வுகள்:ஆஸி.,யில் கங்காரு தாக்கி உரிமையாளர் பரிதாப பலி


சிட்னி : ஆஸ்திரேலியாவில், 77 வயது முதியவர் ஒருவர், அவர் செல்லமாக வளர்த்த கங்காரு தாக்கி உயிரிழந்தார்.


ஆஸ்திரேலியாவின் ரெட்மாண்ட் நகரில் வசித்த முதியவர் ஒருவர், தன் வீட்டு தோட்டத்தில், கங்காரு ஒன்றை வளர்த்து வந்தார். சமீபத்தில், இவர் தன் வீட்டில் இருந்தபோது, இவரை கங்காரு தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அவர், அங்கேயே ரத்த காயங்களுடன் தரையில் விழுந்து கிடந்தார். அங்கு, எதிர்பாராத விதமாக சென்ற இவரது உறவினர், உடனே போலீசுக்கும், மருத்துவமனைக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.


சம்பவ இடத்துக்கு ஆம்புலன்சுடன் வந்த மருத்துவ ஊழியர்களை கங்காரு வழிமறித்து, உள்ளே செல்ல விடாமல் தடுத்துள்ளது. இதையடுத்து, போலீசார் கங்காருவை சுட்டுக் கொன்றனர். பின், மருத்துவ ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்த போது, முதியவர் உயிரிழந்து கிடந்தார். அவரது உடல், பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்லப்பட்டது.


ஆஸ்திரேலியாவில், 86 ஆண்டுகளுக்குப் பின், தற்போது, கங்காரு தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.கனடாவில் போலீசை கொன்ற மர்ம நபர் சுட்டுக் கொலை


டொரன்டோ : கனடாவில், போலீஸ்காரர் ஒருவரையும், இன்னொருவரையும் சுட்டுக்கொன்ற மர்ம நபர், மேலும் மூவரை சுட்டுவிட்டு தப்பியபோது, போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.


வட அமெரிக்க நாடான கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில், போக்குவரத்து போலீஸ்காரர் ஆண்ட்ரூ ஹாங் என்பவர், நேற்று மதிய உணவு சாப்பிட ஹோட்டல் ஒன்றுக்கு வந்துள்ளார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், திடீரென ஆண்ட்ரூ ஹாங்கை சுட்டார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அந்த நபர், மில்டன் பகுதியில் இன்னொருவரை சுட்டுக் கொன்றுவிட்டு, மேலும் மூவரை சுட்டதில், அவர்கள் பலத்த காயமடைந்தனர். பின், காரில் தப்பிச் சென்ற அந்த மர்ம நபரை, போலீசார் இடைமறித்து சுட்டுக்கொன்றனர். மர்ம நபர் யார் என்பது பற்றி, போலீசார் விசாரித்து வருகின்றனர்.கத்தாரில் பள்ளி பேருந்து உள்ளே கேரள சிறுமி மூச்சு திணறி பலி


தோஹா: கத்தாரில், ஆரம்ப பள்ளியில் படித்து வந்த கேரளாவை சேர்ந்த 4 வயது சிறுமியை பள்ளி பேருந்துக்குள் வைத்து தவறுதலாக பூட்டியதை அடுத்து சிறுமி மூச்சுத் திணறி உயிரிழந்தார்.


கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள செங்கனசேரியை சேர்ந்த அபிலாஷ் சாக்கோ, சவும்யா தம்பதியினர், மேற்காசிய நாடான கத்தாரில் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு, 4 வயதில் மின்ஸா மரியம் ஜேகப் என்ற மகள் இருந்தார். கத்தாரின் அல் வாக்ராவில் உள்ள ஆரம்ப பள்ளியில் படித்து வந்த இவர், 11ம் தேதி காலை பேருந்தில் பள்ளிக்குச் சென்றார். செல்லும் வழியில் பேருந்திலேயே துாங்கிவிட்டார்.


பள்ளி வந்ததும் மற்ற மாணவ - மாணவியர் இறங்கி சென்றனர். ஆனால் மின்ஸா பேருந்திலேயே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். இதை கவனிக்காத பேருந்து ஊழியர்கள், கதவுகளை அடைத்துவிட்டு சென்றனர். பள்ளி முடிந்து புறப்படும் போது, பேருந்துக்குள் மாணவி மின்ஸா மயக்க நிலையில் இருந்ததை பேருந்து ஊழியர்கள் கண்டனர்.


உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். பேருந்து கதவுகளை அடைத்ததால் அதிக வெப்பம் மற்றும் மூச்சு திணறல் காரணமாக சிறுமி இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். சிறுமியின் உடலை கேரளா எடுத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 'இந்த விவகாரம் தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்படும்' என, கத்தார் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X