வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: 'நான்காவது வந்தே பாரத் அதிவிரைவு ரயில், இந்த மாதம் இறுதிக்குள் தயாராகி விடும்' என, சென்னை ஐ.சி.எப்., அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதுடில்லி -- வாரணாசி, புதுடில்லி -- வைஷ்ணவ தேவி இடையே இயக்கப்பட்டு வரும் 'வந்தே பாரத்' ரயில்களுக்கு, பயணியரிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதையடுத்து, நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில், வந்தே பாரத் ரயில்களை இயக்க, ரயில்வே திட்டமிட்டுள்ளது.
அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள், 75 வந்தே பாரத் ரயில்களை, நாடு முழுதும் இயக்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. சென்னை ஐ.சி.எப்., தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட, மூன்றாவது வந்தே பாரத் ரயில், குஜராத் மாநிலம் ஆமதாபாத், மகாராஷ்டிரா மாநிலம் மும்பை இடையே மணிக்கு, 180 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி, சோதனை செய்யப்பட்டுள்ளது. விரைவில் பயணியர் பயன்பாட்டிற்கு கொண்டு வர, ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. அடுத்தகட்டமாக, நான்காவது வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணிகள், முழு வீச்சில் நடந்து வருகின்றன.
![]()
|
ஐ.சி.எப்., அதிகாரிகள் கூறியதாவது:சிறிய தொழில்நுட்ப மாற்றங்களோடு தயாரிக்கப்பட்ட மூன்றாவது வந்தே பாரத் ரயில், மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு, சோதனை ஓட்டம் நிறைவு செய்துள்ளது.அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் 400 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்க, ரயில்வே இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கிடையே, ஐ.சி.எப்., ஆலையில் நான்காவது வந்தே பாரத் தயாரிப்பு பணியில், தற்போது 90 சதவீத பணிகள் முடிந்துள்ளன.
இந்த மாதம் இறுதிக்குள், இந்த ரயில் தயாரிப்பு பணி முடிந்து விடும். இந்த ரயிலை எந்த தடத்தில் இயக்குவது என்பது குறித்து, ரயில்வே வாரியம் முடிவு செய்யும். இவ்வாறு அவர்கள் கூறினர்.