வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு வழக்கில், பதில் மனு தாக்கல் செய்யும் வரை லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் என அ.தி.மு.க., இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் ரூ.4,800 கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி திமுக.,வின் ஆர்எஸ் பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து பழனிசாமி தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சிபிஐ விசாரணை என்ற உத்தரவை ரத்து செய்து, வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டது.

இந்நிலையில், டெண்டர் முறைகேடு வழக்கில், பதில் மனு தாக்கல் செய்யும் வரை லஞ்ச ஒழிப்புத்துறை மேல் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் என பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், முறைகேடு வழக்கில் ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கை, கமிஷனரிடம் உள்ளதாக கூறினார்.
இதனையடுத்து, பழனிசாமியின் கோரிக்கையை நிராகரித்த உயர்நீதிமன்றம், லஞ்ச ஒழிப்புத்துறை கமிஷனர் மேல் நடவடிக்கை எடுக்க தடையில்லை எனக்கூறியுள்ளது.