செய்திகள் சில வரிகளில் தர்மபுரி| Dinamalar

செய்திகள் சில வரிகளில் தர்மபுரி

Added : செப் 15, 2022 | |
ஓசூர் ஒன்றியக்குழு கூட்டம்ஓசூர்: ஓசூர் ஒன்றிய அலுவலகத்தில், 15வது ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று நடந்தது. ஒன்றியக்குழு தலைவர் சசிவெங்கடசாமி தலைமை வகித்தார். துணைத்தலைவர் நாராயணசாமி, பி.டி.ஓ.,க்கள் பூபதி, பாலாஜி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், ஓசூரில் பெய்த மழையால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து, கவுன்சிலர்கள் மூலம் விவாதிக்கப்பட்டது. மேலும், மக்களுக்கு தேவையான

ஓசூர் ஒன்றியக்குழு கூட்டம்
ஓசூர்: ஓசூர் ஒன்றிய அலுவலகத்தில், 15வது ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று நடந்தது. ஒன்றியக்குழு தலைவர் சசிவெங்கடசாமி தலைமை வகித்தார். துணைத்தலைவர் நாராயணசாமி, பி.டி.ஓ.,க்கள் பூபதி, பாலாஜி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், ஓசூரில் பெய்த மழையால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து, கவுன்சிலர்கள் மூலம் விவாதிக்கப்பட்டது. மேலும், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வாகனம் மோதி மூதாட்டி பலி
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மேல்சோமார்பேட்டை வெங்கடாபுரத்தை சேர்ந்தவர் கெம்பம்மா, 62; இவர், கடந்த 13ல், கிருஷ்ணகிரியில், சேலம் தேசிய நெடுஞ்சாலை, காந்தி நகர் அருகே நடந்து சென்றார். அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி இறந்தார். கிருஷ்ணகிரி தாலுகா போலீசார்
விசாரிக்கின்றனர்.
முதியவர் மாயம்
ஓசூர்: ஓசூர் மூக்கண்டப்பள்ளி வேணுகோபால் சுவாமி தெருவை சேர்ந்தவர் அய்யாக்கண்ணு, 68; கடந்த, 11ல் நண்பகல் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாயமானார். மருமகன் தமிழரசன், 43, புகார்படி, சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.
முட்செடிகள் அகற்றம்
அரூர்: அரூர் டவுன் பஞ்., 15வது வார்டுக்கு உட்பட்ட பெரிய மண்டி தெருவில் உள்ள குடியிருப்பு பகுதியில் பாம்புகள் நடமாட்டம் அதிகரித்தது. இதையடுத்து நேற்று அப்பகுதியில் இருந்த முட்செடிகளை பொக்லைன் வாகனம் மூலம் அகற்றும் பணி நடந்தது.
சாலை சீரமைப்பு பணி
பாலக்கோடு: பாலக்கோடு டவுன் பஞ்.,ல் கடந்தாண்டு ஜல்ஜீவன் திட்டத்தில், குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடந்தது. இதற்கு ரோடுகளிலும், தெருக்களிலும் பள்ளம் தோண்டப்பட்டது. பணி முடிந்த பிறகும் சீரமைக்காததால், தக்காளி மார்க்கெட் முதல், போலீஸ் ஸ்டேஷன் வரை மற்றும் பெல்ரம்பட்டி ரோடு ஆகிய பகுதிகள் சேதமானது. இந்நிலையில் நெடுஞ்சாலைதுறையினர் குண்டும் குழியுமான பகுதிகளில் தார் ஊற்றி சீரமைத்தனர்.
வாணியாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
அரூர்: அரூர், பாப்பிரெட்டிப்பட்டி சுற்று வட்டாரத்தில் சமீபத்தில் பெய்த தொடர்மழையால், வாணியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால், அணையின் மொத்த கொள்ளளவான, 65.27 அடியில், தற்போது, 63 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணை பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், வாணியாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
சாராயம் கடத்தியவருக்கு காப்பு
போச்சம்பள்ளி: மத்துார் அடுத்த, சாணிப்பட்டி அருகே, மத்துார் இன்ஸ்பெக்டர் முருகன் நேற்று முன்தினம் வாகன சோதனை நடத்தினார். அப்போது திருப்பத்துார் மாவட்டம், கிருஷ்ணாவரம், நாடார் வட்டத்தை சேர்ந்த ராமசாமி, 57, தன் ஹோண்டா சைன் பைக்கில் எட்டு லிட்டர் சாராயத்தை கேனில் எடுத்து சென்றார். அவரை மத்துார் போலீசார் கைது செய்தனர்.
2 மாணவியர் மாயம்
காரிமங்கலம்: காரிமங்கலத்தில், 15 வயது மாணவி, தன் பாட்டி வீட்டில் தங்கி, அதே பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் படித்து வந்தார். இரு நாட்களுக்கு முன் பள்ளி சென்றவர் வீடு திரும்பவில்லை. மாணவி குடும்பத்தினர் காரிமங்கலம் போலீசில் புகார் அளித்தனர்.
அதேபோல் பந்தாரஹள்ளியில், 16 வயது மாணவி, அதே பகுதியில் பிளஸ் 2 படித்து வந்த நிலையில் மாயமானார். பெற்றோர் புகார்படி,
காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து
இரு மாணவியரையும் தேடி வருகின்றனர்.
நீரில் மூழ்கி பெயின்டர் பலி
ஓசூர்: கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர் மாதேஷ், 30, பெயின்டர்; பேரிகை அடுத்த தோரிப்பள்ளியில் தங்கி பணியாற்றி வந்தார். குடிப்பழக்கமுடைய அவர், நேற்று முன்தினம் பேரிகை அண்ணா நகரிலுள்ள தண்ணீர் தொட்டியில், மது போதையில் தவறி விழுந்து பலியானார். பேரிகை போலீசார் விசாரிக்கின்றனர்.
விலையில்லா சைக்கிள் வழங்கல்
கம்பைநல்லுார்: கம்பைநல்லுார் மற்றும் மொரப்பூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆர்.கோபிநாதம்பட்டி, நவலை அரசு மேல்நிலைப்பள்ளி, மாணவ, மாணவியருக்கு, தர்மபுரி, தி.மு.க., - எம்.பி., செந்தில்குமார் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
* அரூர் அடுத்த நரிப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு, அரூர், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார் நேற்று விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். நிகழ்ச்சியில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முருகன், பொருளாளர் சிற்றரசு உள்பட, பலர் கலந்து கொண்டனர்.
கூலித்தொழிலாளி தற்கொலை
அரூர்: அரூர் அடுத்த கீரைப்பட்டி இந்திரா நகரை சேர்ந்தவர் முருகன், 55, கூலித்தொழிலாளி; நீண்ட நாட்களாக நெஞ்சுவலியால் அவதிப்பட்ட அவர், கடந்த, 11ல் ஒட்டன் தழையை அரைத்து குடித்துள்ளார். தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று இறந்தார். அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
சாராயம் பதுக்கிய 4 பேருக்கு காப்பு
அரூர்: அரூர் அடுத்த பாலக்குட்டை கூட்டாறு அருகில், விற்பனை செய்ய சாராயத்தை பதுக்கிய அதே பகுதியை சேர்ந்த செந்தில், 30, கோவிந்தராஜ், 35, மாணிக்கம், 32, மற்றும் பொரிச்சுமரத்துவளவு மணி, 52, ஆகிய நான்கு பேரை கோட்டப்பட்டி போலீசார் நேற்று கைது செய்தனர்.
அனுமதியின்றி இயக்கிய
2 வாகனங்கள் பறிமுதல்
பாலக்கோடு, செப். 15-
பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி மற்றும் தர்மபுரி பறக்கும் படை மோட்டார் வாகன ஆய்வாளர் கதிர்வேல் ஆகியோர், பாலக்கோடு பைபாஸ் ரோட்டில், வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அவ்வழியாக பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த தனியார் சுற்றுலா வேனை தணிக்கை செய்தபோது, உரிய அனுமதியின்றி இயக்கியது தெரிந்தது. அதே போன்று உரிய அனுமதியின்றி தனியார் பஸ்சில் கம்பெனி பணியாளர்களை அழைத்து வந்த மற்றொரு பஸ் என, 2 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து, அபராதம் விதிக்க, தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலருக்கு பரிந்துரைக்கப்பட்டது.
மாரியம்மன்
கோவில் திருவிழா
ஓசூர், செப். 15-
தேன்கனிக்கோட்டை அருகே திம்மசந்திரம் கிராமத்திலுள்ள கிராம தேவதை மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடந்தன.
தொடர்ந்து, அம்மனுக்கு விரதம் இருந்த பக்தர்கள், உடலில் அலகு குத்தியும், முதுகில் அலகு குத்தி கிரேனில் தொங்கியபடியும் ஊர்வலமாக கோவிலுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
மகளிர் பள்ளியில் பாம்பு
கிருஷ்ணகிரி, செப். 15-
கிருஷ்ணகிரி கோட்டை பகுதியில் நகராட்சி உருது பெண்கள் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, 100க்கும் மேற்பட்ட
மாணவியர் படிக்கின்றனர்.
இங்குள்ள ஒரு வகுப்பறையில் சுமார்,
3 அடி நீள கொம்பேறிமூக்கன் பாம்பு புகுந்துள்ளது. இதை பார்த்த மாணவியர் மற்றும்
ஆசிரியை அந்த வகுப்பறையை விட்டு வெளியே ஓடினர். தகவலின்படி வந்த தீயணைப்புத் துறையினர், வகுப்பறையிலிருந்த பாம்பை பிடித்து
சென்றனர்.
இது குறித்து ஆசிரியைகள் கூறுகையில், 'அடிக்கடி பாம்புகள் வகுப்பறைக்கு வருவது வாடிக்கையாகிவிட்டது. எனவே, பள்ளியின் வெளிபுறத்தில் உள்ள புதர்களை அகற்றிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
ஏரி நீர் கசிவு அடைப்பு
ஓசூர், செப். 15-
ஓசூர் மாநகராட்சி, 36 மற்றும் 37வது வார்டுகளுக்கு உட்பட்ட அந்திவாடி ஏரி, கன மழை காரணமாக நிரம்பியுள்ளது. இதனால், ஏரிக்கரையில் போடப்பட்டுள்ள போர்வெல்களில், நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், ஏரிக்கரையின் ஒரு பகுதியில், கசிவு ஏற்பட்டு நீர் வேகமாக வெளியேறி வந்தது. இதனால், ஏரியின் தண்ணீர் முழுவதும் வெளியேறி, மீண்டும் வறண்டு விடும் நிலை உருவானது.
இதையறிந்த, ஓசூர் மாநகராட்சி வரி விதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா ஏற்பாட்டின்படி, ஏரியில் தண்ணீர் வெளியேறி வந்த பகுதியில், மண் மற்றும் ஜல்லி மூட்டைகளை போட்டு, நீர் கசிவு அடைக்கப்பட்டது. இதனால், அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.
உணவு தேடி வந்த யானைகள்
பாலக்கோடு: பாலக்கோடு அடுத்த கூலன்கொட்டாயில் நேற்று முன்தினம் இரவு, உணவு மற்றும் தண்ணீர் தேடி, 20 வயது கொண்ட ஒரு பெண் யானை உட்பட மூன்று யானைகள், அங்கிருந்த விளைநிலங்களுக்குள் நுழைந்து நெல், வாழை, மா, வாழை, தக்காளி உள்ளிட்ட பயிர்களை மிதித்து சேதப்படுத்தின. யானையின் பிளிறல் சத்தம் கேட்டு, கிராம மக்கள் பாலக்கோடு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்ட மூன்று யானைகளை, அருகிலுள்ள போலுமலை காப்புக்காட்டிற்கு விரட்டினர்.
பி.‍ஹெச்.,ல் அமைச்சர் ஆய்வு
பென்னாகரம்: ஊட்டமலை அரசு ஆரம்ப சுகதார நிலையத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியம் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பென்னாகரம், பா.ம.க., - எம்.எல்.ஏ.,வான ஜி.கே.மணி, மாவட்ட பொறுப்பாளர்கள் இன்பசேகரன், ஒன்றிய செயலார் முருகேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பணம் திருடிய சகோதரர்கள் கைது
போச்சம்பள்ளி: மத்துார் அடுத்த, பிச்சனம்பட்டியை சேர்ந்தவர் ராஜா, 55, ஆட்டு வியாபாரி; இவர் தன் வீட்டிலுள்ள சுவாமி அறையில் இரண்டு லட்சம் ரூபாய் வைத்திருந்தார். இவரின் அண்ணன் சுருட்டையன் என்பவரின் மகன்களான ரமேஷ், 37, காந்தி, 36, ஆகியோர், சித்தப்பா ராஜா வீட்டிலிருந்த பணத்தை திருடினர். ராஜா புகார்படி, மத்துார் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
மாணவியர் விடுதி திறப்பு
ஓசூர்: அஞ்செட்டி வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் இருந்து, பள்ளிக்கு வந்து செல்லும் மாணவியர் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பள்ளி இடை நிற்றலை தடுக்கவும், உயர் கல்வி கிடைப்பதை உறுதிப்படுத்தவும், அஞ்செட்டியில் புதிய மாணவியர் விடுதி அமைக்க, பெற்றோர் கோரிக்கை விடுத்தனர். இதன்படி, அஞ்செட்டியில் மாணவியர், 50 பேர் தங்கி படிக்கும் வகையில் விடுதி கட்டப்பட்டுள்ளது. இதை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். மாவட்ட உதவி திட்ட அலுவலர் வடிவேல், தேன்கனிக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலர் அமுதா, தலைமையாசிரியர்கள் நாகராஜ், சீனிவாசன், மாவட்ட துணை ஆய்வாளர் சுரேஷ்பாபு உட்பட பலர் பங்கேற்றனர்.
நுாதன முறையில் நகை திருட்டு
ஓசூர்: ஓசூர் அருகே சொக்கநாதபுரத்தை சேர்ந்த பெருமாள் மனைவி விமலா, 30; இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்தபோது, இரு வாலிபர்கள் வந்து, நகைகளை பாலீஸ் போட்டு தருவதாக கூறி, விமலாவிடம், கால் கொலுசுவை வாங்கி பாலீஸ் போட்டு கொடுத்தனர். அதன்பின் விமலா ஒன்றரை பவுன் நகையை கொடுத்தார். அதை பாலீஸ் போடுவது போல் நடித்த வாலிபர்கள், ஒரு காகிதத்தில் மஞ்சள் துாளுடன் நகையை வைத்து, சிறிது நேரம் கழித்து திறந்து பார்க்குமாறு கூறிச்சென்றனர். சிறிது நேரம் கழித்து விமலா திறந்து பார்த்தபோது, பல துண்டுகளாக உடைந்த கவரிங் நகை இருந்தது. அதிர்ச்சியடைந்த அவர் புகார்படி, பாகலுார் போலீசார் அப்பகுதி, 'சிசிடிவி' கேமரா காட்சிகளை வைத்து, வாலிபர்களை தேடி வருகின்றனர்.
நெருப்பூரில் மக்கள் தொடர்பு முகாம்
ஏரியூர்: ஏரியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நெருப்பூரில் நேற்று, மக்கள் தொடர்பு முகாம் நேற்று, நடந்தது. இதில், 257 பயனாளிகளுக்கு, 1.16 கோடி ரூபாய் மதிப்பீலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வழங்கினார். இதில், பென்னாகரம், பா.ம.க., - எம்.எல்.ஏ.,வான ஜி.கே.மணி, ஏரியூர் சேர்மேன் பழனிசாமி, டி.எஸ்.ஓ., ஜெயக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அரசு பட்டுக்கூடு அங்காடிக்கு
விவசாயிகள் வருகை அதிகரிப்பு
தர்மபுரி, செப். 15-
தர்மபுரி, அரசு பட்டுக்கூடு அங்காடியில் நேற்று நடந்த பட்டுக்கூடு ஏலத்துக்கு
விவசாயிகளின் வருகை அதிகரித்தது.
தர்மபுரி, அரசு பட்டுக்கூடு அங்காடியில் நடந்த தினசரி ஏலத்தில் நேற்று, விவசாயிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. அதன்படி கடந்த வாரத்தில், 10க்கும் குறைவான விவசாயிகள் ஏலத்தில் பங்கேற்றனர். பின் விவசாயிகள் வருகை அதிகரித்து, முன்தினம், 14 நேற்று, 37 பேர் ஏலத்துக்கு வந்திருந்தனர். இவர்கள், 65 குவியல்களாக, 2,331 கிலோ வெண்பட்டுக்கூடுகளை கொண்டு வந்தனர்.
இது, 375 முதல், 735 ரூபாய் வரை சராசரியாக, 596 ரூபாய்க்கு ஏலம் போனது. இவற்றின் மொத்த மதிப்பு, 13 லட்சத்து, 90 ஆயிரத்து, 614 ரூபாய். நேற்று ஒரு நாள் நடந்த இந்த ஏலத்தால், 20 ஆயிரத்து, 860 ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது.
உரக்கடையில் வேளாண்
அதிகாரிகள் திடீர் ஆய்வு
பாலக்கோடு, செப். 15-
பாலக்கோடு, வெள்ளிசந்தை, பஞ்சப்பள்ளி, மாரண்டஹள்ளி பகுதி உரக்கடைகளில் வேளாண் உதவி இயக்குனர் தாம்சன் தலைமையில், பூச்சி மருந்து ஆய்வாளர் மணிவண்ணன், வேளாண் அலுவலர் தரக்கட்டுபாடு ருத்ரமூர்த்தி உள்ளிட்ட குழுவினர் பூச்சி மருந்து விற்பனை தொடர்பாக திடீர் ஆய்வு செய்தனர்.
அப்போது பூச்சி மருந்து உரிமம் பெற்று விற்பனை நடக்கிறதா, அனுமதி பெற்ற பூச்சி மருந்துகள், பூஞ்சான் மருந்துகள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறதா, பூச்சி மருந்து விற்பனை செய்யும்போது, விவசாயிகளுக்கு ரொக்க ரசீது வழங்கப்படுகிறதா, காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகள் இருப்பு மற்றும் விற்பனை செய்யப்படுகிறதா என அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில், இரண்டு
பூச்சி மருந்து விற்பனையாளர்கள்
சட்டவிதியை மீறியதாக நடவடிக்கை எடுத்துள்ளனர்.
படவட்டம்மன் கோவில் திருவிழா
பென்னாகரம், செப். 15-
பென்னாகரம் அடுத்த அஞ்சேஅள்ளி சின்னபெரமனுாரிலுள்ள படவட்டம்மன் கோவில் திருவிழா கடந்த, 12ல் துவங்கியது.
நேற்று காலை, கங்கை பூஜை, பூங்கரகம் அழைக்கப்பட்டது. பின், கோவில் வளாகத்தில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பக்தர்கள் மாவிளக்கு எடுத்து அம்மனுக்கு படைக்கும் நிகழ்ச்சியும், அம்மனுக்கு பால் அபிஷேகமும் நடந்தது.
தனியார் பள்ளி - கல்லுாரி பஸ் மோதல்
10க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம்
ஊத்தங்கரை, செப். 15-
ஊத்தங்கரையிலிருந்து, அரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், தண்ணீர்பந்தல் அருகே, அரூர் பகுதியிலிருந்து தனியார் பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த பஸ், ஊத்தங்கரை பகுதியிலிருந்து, கல்லுாரி மாணவர்களை ஏற்றிக்கொண்டு, அரூர் நோக்கிச்சென்ற தனியார் கல்லுாரி பஸ்சும், நேற்று காலை நேருக்கு நேர் மோதின. இதில், 10க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் சிறு காயங்களுடன் தப்பினர். விபத்தில், கல்லுாரி பஸ் டிரைவருக்கு கால்முறிவு ஏற்பட்டது. ஊத்தங்கரை போலீசார், பள்ளி குழந்தைகளை மீட்டு, ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஊத்தங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
ஸ்ரீராம் சில்க்ஸ் 2ம் ஆண்டு துவக்க விழா
பாலக்கோடு, செப். 15-
-தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு எம்.ஜி.,ரோட்டிலுள்ள ஸ்ரீராம் சில்க்ஸின், 2-ம் ஆண்டு துவக்க விழா கடந்த, 11ல் நடந்தது. இதை, ஸ்ரீவித்யா மந்திர் மற்றும் மூகாம்பிகை கல்வி நிறுவனங்களின் தாளாளர் கோவிந்தராஜூ துவக்கி வைத்தார்.
தர்மபுரி ஸ்ரீவிஜய் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் தாளாளர் இளங்கோவன், தர்மபுரி, பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன், டவுன் பஞ்., தலைவர் முரளி ஆகியோர் வாழ்த்திப்பேசினர். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாதையன், ஸ்ரீராம் சில்க்ஸ் உரிமையாளர் டாக்டர் பாலகிருஷ்ணன், மருத்துவர் மோகனப்பிரியா ஆகியோர் குத்துவிளக்‍கேற்றினர்.
கடைக்கு வந்த வாடிக்கையாளர்களில் குலுக்கல் முறையில், 10 அதிர்ஷ்டசாலிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு, எல்.இ.டி., 'டிவி', பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ராஜா - ராணி பீரோ, சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தொழிலாதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும்
ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X