பாதியில் இறக்கி விட்ட ஆம்புலன்ஸ்: பச்சிளம் குழந்தையுடன் பரிதவித்த தாய்| Dinamalar

பாதியில் இறக்கி விட்ட ஆம்புலன்ஸ்: பச்சிளம் குழந்தையுடன் பரிதவித்த தாய்

Added : செப் 15, 2022 | |
ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே, குழந்தை பிரசவித்த பெண்ணை, ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்து, பாதியில் இறக்கி விட்டு சென்றுள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே, கொடகரை மலை கிராமத்தை சேர்ந்த மாதன் மனைவி புட்டம்மா, 25; இவருக்கு, மூன்று குழந்தைகள். நிறைமாத கர்ப்பிணியான அவர், ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் கடந்த, 8ல் சுக பிரசவத்தில் பெண் குழந்தை


ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே, குழந்தை பிரசவித்த பெண்ணை, ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்து, பாதியில் இறக்கி விட்டு சென்றுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே, கொடகரை மலை கிராமத்தை சேர்ந்த மாதன் மனைவி புட்டம்மா, 25; இவருக்கு, மூன்று குழந்தைகள். நிறைமாத கர்ப்பிணியான அவர், ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் கடந்த, 8ல் சுக பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது.
அவருக்கு கடந்த, 10ல் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, நேற்று முன்தினம் மதியம் டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டார். அதனால், தாய், சேய் வாகனத்தில், கொடகரை கிராமத்திற்கு குழந்தையுடன் அனுப்பி வைக்கப்பட்டார்.
அவருடன் வயதான உறவினர் ஒருவரும் சென்றார். கொடகரை கிராமத்தில் இறக்கி விட வேண்டிய வாகன டிரைவர், உனிசெட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இறக்கி விட்டு சென்றார்.
அங்கிருந்து கொடகரை கிராமத்திற்கு செல்ல, 20 கி.மீ., வனப்பகுதியை ஒட்டிய சாலையில் பயணிக்க வேண்டும். பஸ் வசதியும் கிடையாது. வனத்துறை சார்பில், இருமுறை சென்று வரும் வாகனமும், 3:00 மணிக்குள் கொடகரை சென்று விட்டது. அதனால், 3:30 முதல், இரண்டு மணி நேரத்திற்கு மேல், குழந்தையுடன் புட்டம்மா அவதிப்பட்டார். மருத்துவமனையில் தங்கி கொள்ள அனுமதி கேட்டார்.
தகவலறிந்த மாவட்ட மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் பரமசிவம், அதே வாகனத்தை மீண்டும் வரவழைத்து இரவு, 7:00 மணிக்கு, புட்டம்மாவை அவரது குழந்தை மற்றும் வயதான முதியவருடன், ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X