நகராட்சி குப்பை கிடங்கில் சுகாதாரமில்லை வெத்து விளம்பரம்! கேள்விக்குறியான திடக்கழிவு மேலாண்மை| Dinamalar

நகராட்சி குப்பை கிடங்கில் சுகாதாரமில்லை வெத்து விளம்பரம்! கேள்விக்குறியான திடக்கழிவு மேலாண்மை

Added : செப் 16, 2022 | |
பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகராட்சி குப்பைக்கிடங்கில், குப்பை தரம் பிரிக்காமல் மலை போல குவிந்து கிடக்கிறது. மக்காத கழிவு தேங்கி கிடப்பதால், சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.பொள்ளாச்சி நகராட்சியில், 36 வார்டுகளில், 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பகுதிகளில், தினமும், ஒன்பது டன் மக்காத மற்றும், 19 டன் மக்கும்
  நகராட்சி குப்பை கிடங்கில் சுகாதாரமில்லை வெத்து விளம்பரம்!   கேள்விக்குறியான திடக்கழிவு மேலாண்மை

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகராட்சி குப்பைக்கிடங்கில், குப்பை தரம் பிரிக்காமல் மலை போல குவிந்து கிடக்கிறது. மக்காத கழிவு தேங்கி கிடப்பதால், சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.பொள்ளாச்சி நகராட்சியில், 36 வார்டுகளில், 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பகுதிகளில், தினமும், ஒன்பது டன் மக்காத மற்றும், 19 டன் மக்கும் குப்பை சேகரமாகின்றன.நகரம் முழுவதும் சேகரிக்கப்படும் குப்பை, நல்லுார் குப்பைக்கிடங்குக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அவ்வப்போது தீ வைப்பதால், காற்றில் கலக்கும் புகையால், அப்பகுதி மக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன.

இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், அங்கு இயந்திரங்கள் அமைத்து, உரமாக தயாரிக்கப்பட்டன. நகரில் சேகரமாகும் மக்கும் குப்பையை கொண்டு, இயற்கை உரம் தயாரிக்க, ஐந்து இடங்களில் நுண் உரமாக்கல் மையங்கள் அமைக்கப்பட்டன.அங்கு தயாரிக்கப்படும் உரம் விவசாயிகளுக்கு இலவசமாகவும்; பொதுமக்களுக்கு ஒரு டன், ஆயிரம் ரூபாய் வீதமும் விற்பனை செய்யப்பட்டது.இந்நிலையில், நகரில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்பாட்டில் உள்ளதா என்பதே கேள்விக்குறியாகி உள்ளது. குப்பை கிடங்கில் தேங்கி கிடக்கும் குப்பை கழிவே இதற்கு சாட்சியாகும்.


குவிந்து கிடக்குது


நல்லுார் குப்பை கிடங்கில், மக்காத குப்பையான பிளாஸ்டிக் கழிவு தரம் பிரித்து, அரசு வழிகாட்டுதலின் படி அரியலுார் சிமென்ட் நிறுவனத்துக்கு அனுப்ப வேண்டும். ஆனால், அரசின் அறிவிப்பு, பொள்ளாச்சி நகராட்சிக்கு பொருந்தாது போன்று, இங்குள்ள நிலை உள்ளது.குப்பை கிடங்கில், தரம் பிரிக்காமல் அப்படியே மலை போன்று குவிந்து கிடக்கிறது. நல்லுார் குப்பைக்கிடங்கு முகப்பு பகுதியில் இருந்து, நீண்ட துாரத்துக்கு மலைக்க வைக்கும் அளவுக்கு, கழிவு மலை போன்று குவிந்து கிடக்கிறது.அங்குள்ள இயந்திரங்களும் பழுதடைந்துள்ளதால், பணிகள் முழு அளவில் மேற்கொள்ள முடியாத சூழல் உள்ளது. மலைபோல குவிந்து கிடக்கும் கழிவை அகற்றவே பல மாதங்களாகும் அவல நிலை நீடிக்கிறது.


செயல்படாத மையம்


நகரில் மக்கும் குப்பையை தரம் பிரித்து உரமாக்கல் மையங்களில் உள்ள இயந்திரங்கள் பராமரிப்பின்றி வீணாகியுள்ளன. இதனால், உரம் தயாரிக்கும் பணிகளும் முடங்கி கிடக்கின்றன.இங்கு, கழிவு தேக்கத்தால், சிறு பூச்சிகள் தொல்லையால் சில பகுதிகளில் மக்கள் அவதிப்படுகின்றனர். இதுபோன்ற பிரச்னைகளால், பொள்ளாச்சி நகரில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


ஊருக்கு உபதேசம்


பொள்ளாச்சி நகரில் 'என் குப்பை என் பொறுப்பு' என விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஆனால், அதே நேரத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் முடங்கிய பணிகளை வேகப்படுத்த, நகராட்சி நிர்வாகம் அக்கறை காட்டவில்லை.விழிப்புணர்வு, விளம்பரம் மட்டும் அக்கறை காட்டும் நகராட்சி நிர்வாகம், குப்பைகளை தரம் பிரித்து நகரின் துாய்மை காக்க நடவடிக்கை எடுத்தால் பயனாக இருக்கும்.


அரசுக்கு கருத்துரு


நகராட்சி கமிஷனர் தாணுமூர்த்தி கூறுகையில், ''பொள்ளாச்சியில் குப்பை தரம் பிரித்து வழங்குவதில், விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது. தற்போது, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.நல்லுார் குப்பை கிடங்கில் தேங்கியுள்ள குப்பையை அகற்றவும், பழுதான இயந்திரங்களை சீரமைக்க அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளோம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X