சென்னை : மின் மயானம் மற்றும் கல்லறை தோட்டங்களுக்கு மின் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த, மின் கட்டண உயர்வால் ஏற்படும் கூடுதல் சுமையில் இருந்து உயிருள்ளவர்கள் மட்டுமின்றி, இறந்தவர்களும் தப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழக மின் வாரியம், மின் பயன்பாட்டை பொறுத்து தாழ்வழுத்தம், உயரழுத்தம் ஆகிய பிரிவுகளில் மின் இணைப்பு வழங்குகிறது. அதன்படி, 150 கிலோ வாட் கீழ் வரை தாழ்வழுத்தம்; அதற்கு மேல் உயரழுத்த பிரிவு.உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக, மின் மயானங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
* உயரழுத்த பிரிவில் இடம்பெறும், 'எலக்ட்ரிக் கிரிமடோரியம்' எனப்படும் மின் மயானங்களுக்கான மின் கட்டணம் 1 யூனிட், 6.35 ரூபாயாகவும்; 'டிமாண்ட் சார்ஜ்' 1 கிலோ வாட்டிற்கு மாதம், 350 ரூபாயாகவும் இருந்தது
* தாழ்வழுத்த பிரிவில் இடம்பெறும், உடல் தகனம் செய்யும் மின் மயானங்களுக்கான மின் கட்டணம் வீட்டு பிரிவில் வசூலிக்கப்பட்டது. இதனால், 100 யூனிட் இலவச மின்சாரம், 500 யூனிட் வரை மானிய விலை மின் கட்டணம் ஆகிய சலுகைகள் கிடைத்தன. அதற்கு மேல் சென்றால் யூனிட்டிற்கு, 6.60 ரூபாய் கட்டணம்வசூலிக்கப்பட்டது
* மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இம்மாதம், 10ம்தேதி முதல் மின் கட்டணங்களை உயர்த்தி புதிய ஆணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, உயரழுத்த பிரிவில் இடம்பெறும் மின் மயானங்கள், உடல் அடக்கம் செய்யப்படும் இடங்களுகளுக்கு மின் கட்டணம் யூனிட்டிற்கு, 7 ரூபாயாகவும்; டிமாண்ட் சார்ஜ் கிலோ வாட்டிற்கு மாதம் 550 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது

* தாழ்வழுத்த பிரிவில், மின் மயானங்களுக்கான மின் கட்டணம், வீட்டு பிரிவில் இருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கான விகிதத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 1 யூனிட்டிற்கு 8 ரூபாயாகவும்; நிரந்தர கட்டணம் கிலோ வாட்டிற்கு மாதம் 100 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் மின் மயானங்களை பராமரித்து வருவோர், மின் கட்டண உயர்வால் ஏற்படும் கூடுதல் செலவை சமாளிக்க, உடல் தகனம் செய்ய வரும் உறவினர்களிடம், கூடுதல் கட்டணம் வசூலிப்பர்.எனவே, உயிரிழந்தவர் கூட, மின் கட்டண உயர்வில் இருந்து தப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.