மதுரை: தொழில் முனைவோருக்கு வங்கிகள் கடன் வழங்கி தமிழகத்தின் சமச்சீரான தொழில் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

மதுரையில் நடந்த சிறு குறு நடுத்தர தொழில் துறை சார்பில் நடந்த மாநாட்டில் ரூ.1391 மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: சிறு குறு நடுத்தர தொழில்களால் தான் ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். புவிசார் குறியீடு பெற்ற 42 பொருட்களில் 18 தமிழகத்தை சேர்ந்தவை. மதுரை மல்லி, திண்டுக்கல் பூட்டு என 18 தமிழக பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்றுள்ளன என்பதை பெருமையுடன் கூறுகிறேன். தமிழக பொருட்களுக்கு வெளிநாடுகளில் அதிக வரவேற்பு உள்ளதால், அதிகளவு ஏற்றுமதி செய்ய முனைப்பு காட்ட வேண்டும்.
தொழில் முனைவோருக்கு வங்கிகள் கடன் வழங்கி தமிழகத்தின் சமச்சீரான தொழில் வளர்ச்சிக்கு உதவ வேண்டும். 2030க்குள் 1 டிரில்லியன் பொருளாதார இலக்கை அடைக்க தொழில் வளர்ச்சி ஊக்குவிக்கிறோம். எளிதாக தொழில் துவங்கும் பட்டியலில் 14வது இடத்தில் இருந்த தமிழகம் 3வது இடத்திற்கு முன்னேற வேண்டும்.
மாட்டுத்தாவணியில் டைடல் பூங்கா

தொழில் முனைவோர் சொத்துக்களை வைத்து கடன் பெறும்போது உரிமை பத்திரம் ஒப்படைக்க வேண்டும் . இதற்கு சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். அதே சொத்தின் மீது எத்தனை முறை கூடுதல் கடன் பெற்றாலும் மீண்டும் மீண்டும் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் . இதனால் காலதாமதமும் வீண் அலைச்சலும் ஏற்படும். இதை தவிர்க்கும் வகையில் அதே சொத்தின் மீது கூடுதல் கடன் பெற நினைத்தால் சார் பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டியது இல்லை. ஆன்லைன் முறையில் எளிமையாக பதிவு செய்யலாம்.

அறிவு சார்ந்த தொழில்நுட்பத்தை உருவாக்கும் வகையில் மதுரை மாநகராட்சி மற்றும் டைடல் நிறுவனம் சார்பில் மாட்டுத்தாவணியில் ஐந்து ஏக்கரில் ரூ.600 கோடி மதிப்பில் டைடல் பூங்கா அமைக்கப்படும். இரண்டாவது கட்டமாக 5 ஏக்கரில் பூங்கா விரிவுபடுத்தப்படும். இதன் மூலம் புதிய தொழில் நிறுவனங்களுக்கு தரமான உள் கட்டமைப்பு வசதி வழங்கப்படும். பத்தாயிரம் பேர் வேலை வாய்ப்பு பெறுவார்கள். தொழில் வளர்ச்சி என்பது தொழில்கள் சார்ந்த வளர்ச்சி மட்டும் அன்று. பல்லாயிரம் குடும்பங்கள் வளர்ச்சி பெறும் . இதுவே மாநில வளர்ச்சி குறியீடு அதிகரிப்பதற்கும் உதவுகிறது என்றார்.
அமைச்சர்கள் அன்பரசன், மூர்த்தி, மகேஷ், தியாகராஜன் கலந்து கொண்டனர்.