வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
செங்கல்பட்டு: கடந்த அதிமுக ஆட்சியின் போது, தேர்தல் பிரசார கூட்டங்களில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், 'கலெக்சன், கரப்சன், கமிஷன்' ஆட்சி என திரும்ப திரும்ப சொல்லி விமர்சித்து வந்தார். தற்போது, அதே வார்த்தைகளை, ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியை விமர்சிப்பதற்கு பயன்படுத்துகிறார் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி.
மின் கட்டண உயர்வை கண்டித்து செங்கல்பட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பழனிசாமி பேசியதாவது: 15 மாத சர்வாதிகார ஆட்சியில் தமிழக மக்களுக்கு துளியளவு கூட நன்மையில்லை. தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடக்கிறது. தமிழகத்தில் 4 முதல்வர்கள் உள்ளனர். ஸ்டாலின் குடும்பம் தான் அதிகார மையமாக திகழ்கிறது. ஸ்டாலின் பொம்மை முதல்வராக உள்ளார். மகன், மனைவி தான் ஆட்சி செய்கின்றனர்.
ஸ்டாலின் ஆட்சியில் இல்லை. குடும்ப ஆட்சி நடக்கிறது. அதில் மக்களுக்கு நன்மை கிடைக்கவில்லை. குடும்பத்தினர் துறை வாரியாக கொள்ளையடிப்பதை 15 மாதமாக பார்க்கிறோம்.
கலெக்சன் கரப்சன் கமிஷன் ஆட்சியை தான் ஸ்டாலின் வழங்கி கொண்டிருக்கிறார்.
கலெக்சன், கரப்சன், கமிஷன் ஆட்சி தான் திராவிட மாடல். வரி உயர்வை மக்கள் தலையில் சுமத்தியது தான் திராவிட மாடல், சொத்து வரி உயர்வை தான் வாக்களித்த மக்களுக்கு கொடுத்த முதல் போனஸ்.எதிலெதில் வரி போட முடியுமோ அதில் வரி போட்டு கொண்டிருக்கிறது இது தான் திராவிட மாடல். வசூல் செய்வதில் மன்னன் முதல்வர் ஸ்டாலின்.
ஆயிரம் ரூபாய் சொத்து வரி செலுத்தியவர்கள் இன்று இரண்டாயிரம் சொத்து வரி செலுத்துகின்றனர்.கூரை வீட்டுக்கு வரி போட்டு மக்களை துன்புறுத்தும் அரசு திமுக அரசு 500 யூனிட் பயன்படுத்துவோம் 55 சதவீதம் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் நிதி சுமையை ஏழை, எளிய மக்கள் தலையில் சுமத்தி ஸ்டாலின் துன்புறுத்துகிறார். இவ்வாறு பழனிசாமி பேசினார்.

தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதற்கு முன்னாள் அமைச்சர்கள் தலைமை வகித்தனர்.