வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சிவகாசி: அதிமுக ஆட்சியில் டாஸ்மாக் சரக்கு ஒரு கட்டிங் அடித்தாலும் போதை ஏறுவதாகவும், திமுக ஆட்சியில் மூன்று ரவுண்டு அடித்தாலும் ஏறுவதில்லை என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆதங்கத்துடன் பேசினார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அதிமுக சார்பில் நடைபெற்ற அண்ணாதுரை பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசியதாவது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை பயந்து பயந்து இருந்த திமுக.,வினர் ஜெயலலிதா இறந்த பின்பு பயமில்லாமல் தவறுகளை செய்கிறார்கள்.
தற்போதைய முதலமைச்சரை சுற்றி ஐந்து பேர் கொண்ட வளையம் இருக்கிறது. அவரை மக்கள் எளிதில் அணுக முடியவில்லை. இந்த ஆட்சியில் நிம்மதியாக குடிக்க வேண்டும் என்று நினைத்தால் கூட வழியில்லை. போதை ஏறவில்லை என குடிமகன்கள் குமுறுகிறார்கள்.
அரசு மதுபான சரக்கு வருவதில்லை. செந்தில் பாலாஜி சரக்கு தான் வருகிறது. டென்ஷன் ஓவர் ஆகிருச்சுனு டாஸ்மாக் போய் சரக்கு வாங்கி அடிச்சா, போதை ஏற மாட்டிங்குது. சரக்கு அடிப்பவர்களே, உங்கள் (அதிமுக) ஆட்சியில் ஒரு கட்டிங் அடித்தாலே ‛கிச்சுனு' ஏறும், இவங்க (திமுக) ஆட்சியில் 3 ரவுண்டு அடித்தாலும் ஏறமாட்டிங்குது. நின்றால், நடந்தால் என அனைத்துக்கும் வரி போடுகிறது இந்த அரசு. முதல்வர் ஸ்டாலின் போட்டோஷூட் நடத்தி வருகிறாரே தவிர மக்கள் பிரச்னைகளை கவனிப்பதில்லை.

பட்டாசு தொழில் செய்பவர்கள் மதுபான விற்பவர்கள் போலவும் ஆன்லைன் சூதாட்டம் நடத்துபவர்கள் போலவும் ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார்கள். விடியல் தரப் போராரு என்று பாட்டு மட்டும் போட்டார்களே தவிர தற்போது வரை விடியல் தரவில்லை. பார்லிமென்ட் தேர்தல் தனியாக வந்தாலும் சரி, சட்டசபை தேர்தலும் சேர்ந்து வந்தாலும் சரி, ஏதோ ஒன்று நடக்கப்போகிறது. திமுக.,வை மக்கள் வெறுத்து விட்டார்கள். வரும் தேர்தலில் அதிமுக.,வை வெற்றியடைய செய்ய மக்கள் ஓட்டளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.