வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கொல்லம்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலின் பாத யாத்திரைக்கு, நன்கொடை கேட்டு கேரள மாநிலம் கொல்லத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் 3 பேர் காய்கறி கடையை சூறையாடினர். இதனையடுத்து அவர்கள் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
'பாரத் ஜோடோ யாத்ரா' என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார். 8 வது நாளான இன்று, கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் பாத யாத்திரை நடக்கிறது.

இச்சூழ்நிலையில், கொல்லம் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணியின் மாநில பொதுச்செயலாளர் அனீஸ் கான் உள்ளிட்ட சிலர்பேர் பாத யாத்திரைக்கு நன்கொடை வசூலித்துள்ளனர். அதில், 3 பேர் காய்கறி கடை ஒன்றுக்கு சென்று நன்கொடை கேட்டுள்ளனர். கடை உரிமையாளர் பவாஸ் ரூ.500 கொடுக்க முன்வந்த போது அதனை ஏற்காமல் ரூ.2 ஆயிரம் கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். உரிமையாளர் மறுக்கவே, நன்கொடை கொடுக்காமல் யாரும் உயிரோடு இருக்க முடியாது என மிரட்டல் விடுத்தனர். இது குறித்து பவாஸ் போலீசில் புகார் அளித்தார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில், மாநில காங்கிரஸ் பல ஆண்டுகளாக கட்சிக்காக நன்கொடை வசூலித்து வருகிறது. அவர்கள் சிறிய அளவு பணம் மட்டுமே வசூலித்தனர். ஆனால், தற்போது நடந்த நிகழ்வு நடந்திருக்கக்கூடாது. மிரட்டல் விடுத்தவர்கள் சமூக விரோதிகள். அவர்கள் மீது கட்சி ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறினார். தொடர்ந்து 3 பேரும் காங்கிரசில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் வெளியானதை தொடர்ந்து காங்கிரசுக்கு பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.