வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: ஆவின் நிறுவனத்தின் இனிப்பு பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே பால், தயிர் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்த்தப்பட்ட நிலையில் இனிப்பு வகைகளுக்கும் விலை அதிகரிக்கப்பட்டதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழக அரசின் கீழ் இயங்கும் ஆவின் நிறுவனம் மூலம் பால் பொருட்கள் மற்றும் இனிப்பு வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. தரமான பால் மற்றும் இனிப்புகள் கிடைப்பதால் மக்கள் ஆவின் பொருட்களை விரும்பி வாங்குகின்றனர். இந்நிலையில், பல்வேறு அம்சங்களைக் கருத்தில் கொண்டு ஆவின் இனிப்பு பொருட்களின் விலையை ஆவின் நிர்வாகம் உயர்த்தியுள்ளது. உயர்த்தப்பட்ட விலைகளும் இன்று (செப்.,16) முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. அதன்படி, இனிப்பு பொருட்கள் முந்தைய விலையை விட ரூ.20 முதல் ரூ.80 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

உயர்த்தப்பட்ட ஆவின் பொருட்களின் விலை விவரம்:
* 125 கிராம் குலாப் ஜாமுன் விலை ரூ.45 லிருந்து ரூ. 50 ஆக உயர்வு
* 250 கிராம் குலாப் ஜாமுன் விலை ரூ.80 லிருந்து ரூ. 100 ஆக உயர்வு
* 200 கிராம் ரசகுல்லா விலை ரூ.80 லிருந்து ரூ.90 ஆக உயர்வு
* 100 கிராம் பால்கோவா விலை ரூ.47 லிருந்து ரூ.55 ஆக உயர்வு
* 250 கிராம் பால்கோவா விலை ரூ.120 லிருந்து ரூ.140 ஆக உயர்வு
* 250 கிராம் மைசூர்பாகு விலை ரூ.120 லிருந்து ரூ.140 ஆக உயர்வு
* 500 கிராம் மைசூர்பாகு விலை ரூ.230 லிருந்து ரூ.270 ஆக உயர்வு
கடந்த ஜூலை மாதம் ஆவின் பொருட்களின் பால் மற்றும் தயிரின் விலை உயர்த்தப்பட்டது. தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில் இனிப்பு பொருட்களின் விலையும் உயர்த்தி இருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.