கப்பம் வசூலிக்கும் அமைச்சரின் டிரைவர்!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

'கப்பம்' வசூலிக்கும் அமைச்சரின் டிரைவர்!

Added : செப் 17, 2022 | கருத்துகள் (1) | |
'கப்பம்' வசூலிக்கும் அமைச்சரின் டிரைவர்!''ரொம்ப அசிங்கமா பேசுதாங்கன்னு, ஊழியர்கள் வருத்தப்படுதாவ வே...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார், அண்ணாச்சி.''யாரு... என்ன விஷயமுங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''வடசென்னை அனல் மின் நிலையம் - 1ல், உயர் அதிகாரியா இருக்கிற பெண்மணி, எல்லா அலுவலர்களையும் தரக்குறைவா பேசுதாங்க வே...''உதாரணமா, 'வெள்ளையும், சொள்ளையுமா

டீ கடை பெஞ்ச்


'கப்பம்' வசூலிக்கும் அமைச்சரின் டிரைவர்!''ரொம்ப அசிங்கமா பேசுதாங்கன்னு, ஊழியர்கள் வருத்தப்படுதாவ வே...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார், அண்ணாச்சி.

''யாரு... என்ன விஷயமுங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''வடசென்னை அனல் மின் நிலையம் - 1ல், உயர் அதிகாரியா இருக்கிற பெண்மணி, எல்லா அலுவலர்களையும் தரக்குறைவா பேசுதாங்க வே...

''உதாரணமா, 'வெள்ளையும், சொள்ளையுமா நீயெல்லாம் எதுக்கு ஆபீஸ் வர்ற... உனக்கு எவன் அறிவுன்னு பெயர் வச்சான்... கொஞ்சம் கூட அறிவே இல்லையே'ன்னு சகட்டு மேனிக்கு திட்டுதாங்க வே...

''யாரையும் நிம்மதியா வேலை செய்ய விட மாட்டேங்காங்க... பைல்கள்ல கையெழுத்து வாங்குறதுக்குள்ள அதிகாரிகளுக்கு உயிரேபோயிடுது வே...

''இத்தனைக்கும் நேர்மையான அதிகாரியும் இல்லை... கமிஷன், கட்டிங்ல எல்லாம் புகுந்து விளையாடுதாங்க... இவங்க அட்டகாசம் பத்தி, மேலிடத்துக்கு புகார் அனுப்பிட்டு, 'நடவடிக்கை வருமா'ன்னு ஊழியர்கள் காத்துட்டு இருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.

'மணிமேகலையே... மணி ஆகலையே...' என்ற பாடல் ரேடியோவில் ஒலிக்க, அதை ரசித்தபடியே, ''டெண்டர் ஒதுக்கறதுல ஜாதி அரசியல் நடக்கறதுன்னு, ஆளுங்கட்சியினர் கடுப்புல இருக்கா ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''எந்த ஊர் விவகாரம் பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''தி.மு.க., ஆட்சிக்கு வந்தாலே, சிறு பாலம், ரோடு உள்ளிட்ட சின்ன சின்ன டெண்டர்களை, கட்சியினருக்கு ஜாதி பாகுபாடு பார்க்காம அதிக அளவுல குடுப்பா... ஆனா, கொங்கு மண்டலம் முழுக்க ஜாதி அடிப்படையில தான் டெண்டர்கள் ஒதுக்கறாங்கன்னு, கட்சி மேலிடத்துக்கு புகார் போயிருக்கு ஓய்...

''கொங்கு மண்டல பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் இருக்கறவா சிபாரிசால, ஒரே ஜாதியைச் சேர்ந்த வாளுக்கே டெண்டர்களை ஒதுக்கறான்னு, மற்ற ஜாதிகளை சேர்ந்த தி.மு.க.,வினர் கொதிப்புல இருக்கா... சீக்கிரம் இந்த விவகாரம் வெடிக்கும்னு பேசிக்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''பரமசிவன் கழுத்து பாம்பா ஆட்டம் போடுறாருங்க...'' என, கடைசி தகவலுக்கு வந்த அந்தோணிசாமியே தொடர்ந்தார்...

''சென்னைக்கு பக்கத்துல இருக்கிற மாவட்ட அமைச்சர் அவர்... அவரிடம், ரொம்ப காலமா கார் டிரைவரா ஒருத்தர் இருக்காருங்க...

''அமைச்சருக்கு ரொம்பவும் நெருக்கமானவரும் கூட... அதனால, கட்சியினர் பத்தி டிரைவர் தெரிவிக்கிற தகவல்களை, அமைச்சர் காது கொடுத்து கேட்பாருங்க...

''டிரைவர் இதை பயன்படுத்தி, மாவட்டத்துல இருக்கிற பேரூர், நகர செயலர்களிடம் வசூல் வேட்டை நடத்திட்டு இருக்காரு... இந்த பணத்துல, சொந்தமா வீடு கட்டிட்டு இருக்காருங்க...

''இவரை, 'கவனிக்காத' கட்சி நிர்வாகிகள் பத்தி, அமைச்சரிடம் இல்லாததும், பொல்லாததும் சொல்லி, 'போட்டு' குடுத்துடுறாருங்க... இதனால, பலரும் மனசுக்குள்ள புழுங்கிட்டே, டிரைவருக்கு கப்பம் கட்டிட்டு இருக்காங்க...'' என முடித்தார்,அந்தோணிசாமி.

''கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும்னு சொல்வா... இவா ஆட்சியில, அமைச்சரின் டிரைவர்கள் கூட அள்ளி குவிக்கறா பாருங்கோ...'' என்ற குப்பண்ணாவே, ''பாய், நாசர் தம்பி பேசினாரா... அபி பத்தி ஏதாவது சொன்னாரா...?'' என, அன்வர்பாயிடம் விசாரிக்க, அரட்டை திசைமாறியது.

*********************


வரி வசூல் குளறுபடியால் சேதாரமாகும் நிதி ஆதாரம்!''முதல்வரின் அறிவிப்பு, ஒரு வருஷம் முடிஞ்சும் அமலுக்கு வரலைங்க...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அந்தோணிசாமி.

''அதான் நிறைய இருக்குல்லா... நீரு எதை சொல்லுதீரு...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''கோவை மாவட்டம், வால்பாறை; நீலகிரி மாவட்டம், குன்னுார், கோத்தகிரி, கூடலுார்ல அரசு தேயிலை தோட்டக் கழகம் செயல்படுதுங்க... 'இங்க, தேயிலை பறிக்கும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச தினக்கூலியா, 425.40 ரூபாய் வழங்கப்படும்'னு, போன வருஷம் ஆகஸ்ட் மாதம் முதல்வர் ஸ்டாலின் அறிவிச்சாருங்க...

''ஆனா, வருஷம் ஒண்ணு முடிஞ்சும், தேயிலை தொழிலாளர்களுக்கு இந்த கூலி உயர்வை அமல்படுத்தலைங்க... இதனால, தொழிலாளர்கள் எல்லாம், அரசு மேல கடும் அதிருப்தியில இருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''புகார் சொன்ன தோட்டக்காரரை வேலையை விட்டே நிறுத்திட்டாங்க பா...'' என, அடுத்த மேட்டருக்கு மாறிய அன்வர்பாயே தொடர்ந்தார்...

''சென்னையை ஒட்டியிருக்கிற மாவட்டத்துல, ஊரக வளர்ச்சி துறை உயர் அதிகாரியா ஒரு பெண்மணி இருக்காங்க... இவங்களுக்கு அரசு பங்களா குடுத்திருக்காங்க பா...

''அங்க, பெண்அதிகாரியின் உறவினர் ஒருத்தர், உடல்நலம் பாதிக்கப்பட்டு, படுத்த படுக்கையா இருக்காரு... 'எல்லாமே' படுக்கையில தான்... அவரது கழிவுகளை அகற்றும்படி, பங்களா தோட்டக்காரருக்கு அதிகாரி உத்தரவு போட்டிருக்காங்க பா...

''அதிர்ச்சியான அவர், முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பிட்டாரு... புகாரை விசாரிக்கும்படி, டி.ஆர்.ஓ.,வுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவு போட்டிருக்காரு... இந்தப் பிரச்னையில, 20 வருஷமா அங்க வேலை பார்த்த தோட்டக்காரரை, வேலையை விட்டு நிறுத்திட்டாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.அப்போது தான் வந்த குப்பண்ணா, ''நேத்து மூன்றாம் பிறை படம் பார்த்தேன்... ஸ்ரீதேவி நடிப்பு என்ன அருமை தெரியுமா...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தவர், ''நகராட்சி நிதி ஆதாரம், ரொம்ப சேதாரம் ஆகிண்டே போறது ஓய்...'' என, கடைசி மேட்டருக்கு கட்டியம் கூறினார்.

''எந்த ஊருல வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''நீலகிரி மாவட்டம், ஊட்டி நகராட்சி பகுதியில நிறைய வீடுகளை பலரும், காட்டேஜ்களாக மாத்தியிருக்கா... இந்த காட்டேஜ்களை, கேரளாவை சேர்ந்த சிலர் குத்தகைக்கு எடுத்து, சுற்றுலா பயணியருக்கு வாடகைக்கு விட்டு, பணத்தை வாரி குவிக்கறா ஓய்...

''மாத வாடகையா, 20 ஆயிரம் ரூபாய்க்கு குத்தகை எடுக்கறவா, ஒரு நாளைக்கு, 5,000 ரூபாய், சீசன் நேரத்துல, 10 ஆயிரம் ரூபாய்னு வசூல் பண்ணி, கொள்ளை லாபம் சம்பாதிக்கறா... இவ்வளவு லாபம் சம்பாதிக்கற வீடுகள் சார்புல, நகராட்சிக்கு, 'கமர்ஷியல்' வரி கட்டணும் ஓய்...

''ஆனா, சாதாரண, 'டொமஸ்டிக்' வரி தான் கட்டறா... வரி வசூலிக்கறவா, குடிநீர் பணியாளர்களுக்கு, வீடுகளின் உரிமையாளர்கள், 'கட்டிங்' குடுத்துடறதால, அவா எதையும் கண்டுக்கறது இல்லை ஓய்...

''இதனால, 'நகராட்சி நிர்வாகம் பறக்கும் படை அமைச்சு, இந்த மாதிரி கமர்ஷியலா வாடகைக்கு விடற இடங்களை கணக்கெடுத்து, வரி வசூல் பண்ணாலே, நிதி ஆதாரம் பெருகும்'னு கலெக்டருக்கு சமூகநல ஆர்வலர்கள் மனு அனுப்பியிருக்கா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.பெஞ்சில் மேலும் சிலர் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X