புதுடில்லி-முறைகேடு வழக்கில் பீஹார் துணை முதல்வருக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக் கோரி, சி.பி.ஐ., மனுத்தாக்கல் செய்துள்ளது.
பீஹாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தை சேர்ந்த தேஜஸ்வி யாதவ், துணை முதல்வராக பதவி வகிக்கிறார். ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் சார்பில் நடத்தப்படும் இரண்டு கடைகள், விதிமுறைகளை மீறி தனியார் நிறுவனம் ஒன்றுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இந்த முறைகேடு வழக்கில் தேஜஸ்வி யாதவ் மீதும் சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் 2018ல் தேஜஸ்விக்கு ஜாமின் வழங்கப்பட்டது. இதை ரத்து செய்யக் கோரி, சி.பி.ஐ., தரப்பில் நேற்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி கீதாஞ்சலி கோயல், செப்., 28க்குள் இதுகுறித்து பதில் அனுப்ப தேஜஸ்விக்கு 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டார்.