கட்சி மேலிடம் மீதுள்ள அதிருப்தி காரணமாக, தி.மு.க., துணை பொதுச்செயலர் சுப்புலட்சுமி ஜெகதீசன், தன் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தி.மு.க.,வில் தலைவர் பதவிக்கு அடுத்து, பொதுச்செயலர், பொருளாளர் மற்றும் துணை பொதுச்செயலர் பதவிகள் முக்கியமாக உள்ளன. துணைப் பொதுச் செயலர் பதவியில் ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராஜா, அந்தியூர் செல்வராஜ் மற்றும் மகளிர் பிரதிநிதித்துவம் என்ற அடிப்படையில் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் உள்ளனர்.
இவர், கடந்த சட்டசபை தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில், குறைந்த ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன், முதல் பெண் சபாநாயகர் என்ற அந்தஸ்தை சுப்புலட்சுமிக்கு வழங்க, ஸ்டாலின் முடிவு செய்திருந்தார். ஆனால், ஈரோடு மாவட்ட முக்கிய புள்ளி மற்றும் இரண்டு ஒன்றிய நிர்வாகிகள் வாயிலாக திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டார். இது தொடர்பாக, 'மாவட்ட முக்கிய புள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலினிடம் சுப்புலட்சுமி ஜெகதீசன் புகார் அளித்தார்.
ஆனால், மேலிடம் கண்டு கொள்ளவில்லை.சமீபத்தில் நடந்த உட்கட்சி தேர்தலில், சுப்புலட்சுமி ஆதரவாளர்களுக்கு ஒன்றிய பதவி வழங்கப்படவில்லை என்பதால், அவர் அதிருப்தி அடைந்தார். ராஜ்யசபா எம்.பி., பதவியையும் எதிர்பார்த்தார்; அதுவும் வழங்கப்படவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த சுப்புலட்சுமியின் கணவர் ஜெகதீசன், தி.மு.க., தலைமையை விமர்சித்து, அவ்வப்போது சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிட்டு வருகிறார். இது, சர்ச்சையை கிளப்பினாலும், அவர் விமர்சனத்தை நிறுத்தவில்லை.
சமீபத்தில், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பற்றிய ஆவணப்பட வெளியீட்டு விழாவில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். அதை விமர்சித்து, கடும் சொற்களால் ஜெகதீசன் பதிவு வெளியிட்டிருந்தார். அதில், பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி இல்ல திருமண விழாவையும், ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனின் திருமண விழாவையும் ஒப்பிட்டு இருந்தார்.தன் கணவரின் பதிவுகள் தொடர்பாக, எந்த ஒரு எதிர்ப்பும் சுப்புலட்சுமி தெரிவிக்காமல் அமைதி காத்து வருகிறார்.
ஆனால், ஜெகதீசன் மீது நடவடிக்கை எடுக்க, ஈரோடு மாவட்ட தி.மு.க.,வினர் வலியுறுத்தி வருகின்றனர்.சமீபத்தில், விருதுநகரில் தி.மு.க., முப்பெரும் விழா நடந்தது. அதை சுப்புலட்சுமியும், அவரது கணவரும் புறக்கணித்தனர்.இந்நிலையில், கட்சி மேலிடத்திற்கு தன் அதிருப்தியை தெரிவிக்கும் வகையில், துணைப் பொதுச் செயலர் பதவியை சுப்புலட்சுமி ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது, அக்கட்சி மேலிடத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- நமது நிருபர் -