தொழிற்சாலை கழிவுகள் கொட்டி தீ வைப்பு; | Dinamalar

தொழிற்சாலை கழிவுகள் கொட்டி தீ வைப்பு;

Updated : செப் 19, 2022 | Added : செப் 19, 2022 | கருத்துகள் (2) | |
ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுார் சுற்று வட்டாரத்தில் தொழிற்சாலை கழிவுகள் கொட்டுவதால், சுற்றுச் சூழல் பாதிப்படைந்து வருகிறது. 'தொழிற்சாலை கழிவுகள் பொது இடத்தில் கொட்டப்படுவதை தடுக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.ஸ்ரீபெரும்புதுார் அருகே இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்புதுார், பிள்ளைப்பாக்கம்,
தொழிற்சாலை கழிவுகள் கொட்டி தீ வைப்பு;


ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுார் சுற்று வட்டாரத்தில் தொழிற்சாலை கழிவுகள் கொட்டுவதால், சுற்றுச் சூழல் பாதிப்படைந்து வருகிறது. 'தொழிற்சாலை கழிவுகள் பொது இடத்தில் கொட்டப்படுவதை தடுக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.ஸ்ரீபெரும்புதுார் அருகே இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்புதுார், பிள்ளைப்பாக்கம், வல்லம், ஒரகடம் ஆகிய ஐந்து இடங்களில் சிப்காட் தொழிற் பூங்கா அமைந்துள்ளது. இங்கு, 1,200க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. இந்த தொழிற்சாலைகளில் சேகரமாகும் குப்பை கழிவுகள் முறையாக அகற்றப்படுவதில்லை.உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை ஏற்றி வரும் வாகனம், குடிநீர், உணவு எடுத்து வரும் வாகனங்கள், தொழிற்சாலையில் இருந்து இரும்பு கழிவு பொருட்களை எடுத்து செல்லும் வாகனங்களில், குப்பை கழிவுகள் ஏற்றி அனுப்பப் படுகின்றன.latest tamil news


தொழிற்சாலையில் இருந்து வெளியே செல்லும் வாகன ஓட்டிகள், நெடுஞ்சாலை, வனப்பகுதி,ஏரி கரையோரங்களில் மூட்டை மூட்டையாக குப்பை கழிவுகளை வீசி செல்கின்றனர். அதன்பின் இந்த கழிவுகள், தீ வைத்து எரிக்கப்படுகின்றன.இதனால், மரம் செடிகள் எரிந்து நாசமாகின்றன. புகை மூட்டத்தால் சுற்றுச்சூழலும் பாதிப்படைகிறது. சாம்பல் கழிவுகள் மழை காலத்தில் அடித்து செல்லப்பட்டு ஏரியில் கலப்பதால் தண்ணீர் மாசடைந்து வருகிறது.எனவே, தொழிற்சாலைகளில் இருந்து குப்பை கழிவுகளை வெளியே கொட்டுவோர் மீது அதிகப்படியான அபராதம் விதித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


latest tamil newsமரங்கள் எரிந்து நாசம்


ஸ்ரீபெரும்புதுார்—குன்றத்துார் நெடுஞ்சாலையில் அமரம்பேடு பகுதியில் நெடுஞ்சாலையோரம் 200க்கும் மேற்பட்ட மூங்கில் மரங்கள் வளர்ந்துள்ளன. இங்கு தொழிற்சாலை கழிவுகள் மூட்டை மூட்டையாக கொட்டி எரிப்பதால் மூங்கில் மரங்கள் தீயில் கருகி வருகின்றன.அமரம்பேடு ஏரி மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வனத்துறை சார்பில் மூங்கில், நாவல், வேம்பு உள்ளிட்ட 10 ஆயிரம் மரக்கன்றுகள் 2019ம் ஆண்டு நடப்பட்டன. இந்த மரங்கள் நன்றாக வளர்ந்துள்ள நிலையில் தொழிற்சாலை கழிவுகள் கொட்டி எரிப்பதால் அங்கு நடப்பட்ட ௧,௦௦௦க்கும் மேற்பட்ட மரங்கள் தீயில் கருகி நாசமாகிவிட்டன.


latest tamil news
இரவில் எரியும் கழிவுகள்

ஸ்ரீபெரும்புதுாரை சுற்றியுள்ள தொழிற்சாலைகளில் இருந்து கழிவுகளை எடுப்பதில் அரசியல்வாதிகளுக்கும், ரவுடிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இரும்பு, பிளாஸ்டிக், ரப்பர் கழிவுகளை எடுத்து அதை வெளியே விற்று வருமானம் ஈட்டுகின்றனர்.மேலும், சில கழிவுகளை பொது இடத்தில் கொட்டி எரித்து அதில் இருந்து பித்தளை, இரும்பு உள்ளிட்ட பொருட்கள் பிரித்து எடுக்கப்படுகின்றன. இதனால், ஸ்ரீபெரும்புதுார் சுற்றி பல இடங்களில் இரவு நேரத்தில் கழிவுகளுக்கு தீ வைப்பதால், அவை கொழுந்து விட்டு எரிக்கின்றன. இதில் இருந்து வெளியேறும் கரும்புகை சுற்று சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

தொழிற்சாலைகளே பொறுப்பு!

ஸ்ரீபெரும்புதுாரை சுற்றியுள்ள சிப்காட் தொழிற்சாலை வளாகம் சுத்தமாக உள்ளது. ஆனால் தொழிற்சாலையின் வெளியே உள்ள நிலங்கள், சாலையோர பகுதிகள் குப்பை கழிவுகளாக காட்சியளிக்கிறது.தொழிற்சாலைகள், விதிமுறைகளை பின்பற்றி குப்பையை அகற்றுவதாக வெளிக்காட்டுகின்றன. ஆனால், முறைகேடாக குப்பையை வெளியேற்றி சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்துகின்றன.பொது இடத்தில் கொட்டப்பட்டுள்ள பிளாஸ்டிக் கழிவுகளில் உள்ள பெயர்களை வைத்து தொழிற்சாலையை அடையாளம் கண்டு, குப்பையை வெளியேற்றும் தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.செம்பரம்பாக்கம் ஏரியில் கழிவுகள்

ஸ்ரீபெரும்புதுார் அருகே காட்டரம்பாக்கம், கீவளூர், தண்டலம், மேவளூர்குப்பம் ஊராட்சி எல்லையில் அமைந்துள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் மேற்புற பகுதியில் தொழிற்சாலை கழிவுகள் கொட்டப்படுகின்றன. மேற்கண்ட ஊராட்சியில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செம்பரம்பாக்கம் ஏரியில் கலக்கிறது.மேலும், ஸ்ரீபெரும்புதுார் சுற்றுவட்டாரத்தில் உள்ள வீடுகளில் சேகரிக்கப்படும் கழிவு நீரை டேங்கர் லாரிகள் மூலம் செம்பரம்பாக்கம் ஏரி பகுதி, நீர் வரத்து கால்வாயில் கொட்டுகின்றனர். இதனால், செம்பரம்பாக்கம் ஏரி நீர் மாசடைகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X