வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நீலகிரி: சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் திமுக எம்.பி., ஆ.ராசா ஹிந்துக்கள் பற்றி பேசிய, அவதூறு பேச்சு தமிழகம் முழுவதும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. உரிய நடவடிக்கை கோரி ஹிந்து முன்னணி பா.ஜ., உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போலீசில் புகார் அளித்து, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக ஹிந்து முன்னணியினர் நீலகிரி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கடையடைப்பு மற்றும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். அதன்படி, இன்று(செப்.,20) காலை நீலகிரியில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட தாலுகா பகுதிகளில் 80 சதவீதம் கடைகள் அடைக்கப்பட்டு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அன்னூர் வட்டாரத்தில் பேக்கரி ஹோட்டல் டீக்கடை உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. அன்னூர் நகரில் வலம் வந்த பாரதிய ஜனதா மாவட்ட செயலாளர் ஜெயபால், விவசாய அணி மாவட்ட தலைவர் விஜயகுமார், ஒன்றிய தலைவர் திருமூர்த்தி உள்பட 17 பேர் அன்னூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு மகரிஷி மஹால் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
அன்னூர் போலீசாரும், திமுகவினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் கடைகளை திறக்கும் படி மூடப்பட்ட கடை உரிமையாளர்களிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

போலீசார் பாதுகாப்பு:
கடையடைப்பு போராட்டத்தையொட்டி நீலகிரி எஸ். பி., ஆசிஷ் ராவத் உத்தரவின் பேரில், அசம்பாவிதங்களை தடுக்க, 500க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம்:
திருப்பூர் மாவட்டம் அவிநாசி, கருவலூர், சேவூர், தெக்கலூர், திருமுருகன் பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் நூறு சதம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
மேலும் ஆ.ராசாவே பதவி விலகு ஹிந்துக்கள் பற்றி தொடர்ந்து பொது மேடையில் வன்மமாக காழ்ப்புணர்ச்சியுடன் பேசி வரும் திமுக உறுப்பினர் ஆ.ராசாவே கண்டிக்கிறோம் என அனைத்து பகுதிகளிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. மேலும் திமுக உறுப்பினர் ஆ.ராசா மனு தர்மத்தில் உள்ளதாக கூறி பொதுமேடையில் ஹிந்துக்கள் பற்றி இழிவாக பேசியதை கண்டித்து ஹிந்து முன்னணி சார்பில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.