கோவா மாநிலத்தில் இந்த ஆண்டு பிப்ரவரியில் நடந்த சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள, 40 இடங்களில், பாரதிய ஜனதா கட்சி, 20; காங்கிரஸ், 11; ஆம் ஆத்மி மற்றும் மஹாராஷ்டிரா கோமந்த கட்சி தலா இரண்டு; மற்ற கட்சிகளும், சுயேச்சைகளும் ஐந்து இடங்களை பிடித்தன. பா.ஜ., ஆட்சி அமைத்து, முதல்வராக பிரமோத் சவந்த் பதவியேற்றார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, 11 எம்.எல்.ஏ.,க்களில் எட்டு பேர், சமீபத்தில், பா.ஜ.,வில் இணைந்துள்ளனர். அப்படி கட்சி மாறியவர்களில், முன்னாள் முதல்வர் திகாம்பர் காமத், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் மைக்கேல் லோபோ போன்றோர் முக்கியமானவர்கள். கோவாவில் காங்கிரசை சேர்ந்தவர்களை, தங்கள் கட்சிக்கு இழுத்து, அக்கட்சியில் பிளவை பா.ஜ., ஏற்படுத்துவது, மூன்றாண்டுகளில் இது இரண்டாவது முறை.
காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்படும் எம்.எல்.ஏ.,க்கள், பா.ஜ.,வுக்கு அணி மாறி விடலாம் என்ற பேச்சு, சட்டசபை தேர்தலுக்கு முன்னரே எழுந்தது. அதனால், தேர்தல் நடப்பதற்கு முன், காங்கிரஸ் சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட 37 பேரையும், கோவில்கள், சர்ச்சுகள் மற்றும் தர்காக்களில் உறுதி மொழி எடுத்துக் கொள்ளும்படி கட்சி மேலிடம் கேட்டுக் கொண்டது.
அதன்படி அவர்களும், 'தேர்தல் முடிவுகள் வெளியான பின், நிச்சயமாக கட்சி மாற மாட்டோம்' என்று, வழிபாட்டுத் தலங்களிலும், ராகுல் முன்னிலையிலும் உறுதிமொழி எடுத்தனர். அந்த உறுதி மொழி, தற்போது காற்றில் பறக்க விடப்பட்டு, பா.ஜ.,வுக்கு தாவியுள்ளனர்.
காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட, 11 எம்.எல்.ஏ.,க்களில் எட்டு பேர், பா.ஜ.,வுக்கு தாவியுள்ளதால், அந்தக் கட்சி உறுப்பினர்களின் பலம், 28 ஆக அதிகரித்துள்ளது. இதனால், கூடுதல் பெரும்பான்மையுடன், பிரமோத் சவந்த் ஆட்சி தொடரும் சூழல் உருவாகியுள்ளது.
அதேநேரத்தில், காங்., சார்பில் சட்டசபைக்கு தேர்வான எம்.எல்.ஏ.,க்களில், மூன்றில் இரண்டு பங்கு நபர்கள் அணி மாறியுள்ளதால், கட்சித் தாவல் சட்டத்தின்படி, அவர்கள் மீது, எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத சூழ்நிலையும் உருவாகியுள்ளது. 2019ம் ஆண்டிலும், இதேபோல காங்கிரசைச் சேர்ந்த, 10 எம்.எல்.ஏ.,க்கள் அணி மாறினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம், கோவா அரசியல்வாதிகள் கட்சியின் கொள்கை மற்றும் விசுவாசத்திற்கு எல்லாம், அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பது தெளிவாகிறது. மேலும், கோவாவில் பல சட்டசபை தொகுதிகள் சிறியவை. சில ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தான் வேட்பாளர்கள் வெற்றி பெறுவர். அதனால், ஓட்டு போட்ட மக்களின் கண்டனத்திற்கு ஆளாக நேரிடுமே என்ற கவலை சிறிதும் இல்லாமல், மக்கள் பிரதிநிதிகள், சுயநலத்திற்காக கட்சி தாவுகின்றனர்.
கடந்த 2014 லோக்சபா தேர்தல் முதலே, 'காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்' என, பா.ஜ., தலைவர்கள் கூறி வருகின்றனர். போகிற போக்கை பார்த்தால், பா.ஜ., ஆளும் மாநிலங்களில், எதிர்க்கட்சிகளே இல்லாத நிலைமை உருவாகி விடும் என்பதில் சந்தேகமில்லை.
அதேநேரத்தில், காங்கிரசில் நிரந்தரமான, வலிமையான தலைமை இல்லாதது, தொண்டர்களை அரவணைத்து செல்ல தலைவர்கள் முயற்சி செய்யாதது, கோஷ்டி அரசியல் மேலோங்கி இருப்பது, கீழ்மட்ட அளவில் கட்சியை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்காதது போன்றவற்றாலும், இந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் மாற்றுக் கட்சிக்கு மாறுவது அடிக்கடி அரங்கேறி வருகிறது.
ஹரியானா மாநிலத்தில், 1967ல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கயலால் என்ற எம்.எல்.ஏ., இரண்டு வாரங்களுக்குள் மூன்று முறை கட்சி மாறி சாதனை படைத்தார். அதை, ஊடகங்களுக்கு சொன்ன மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர், 'போன மச்சான் திரும்பி வந்தான்' என்பதை, கயலாலுடன் தொடர்புபடுத்தி, 'ஆயா ராம் கயா ராம்' என்றார்.
அன்று முதல் கட்சி தாவலின் அடையாள சொல்லாக அது உள்ளது. அந்த கட்சி தாவல் முறை, இம்மாதம் கோவாவில் மையம் கொண்டு, காங்கிரசை காவு வாங்கி விட்டது என்றே சொல்ல வேண்டும்.