வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: அதிமுக.,வில் ஒற்றை தலைமை குறித்த விவகாரத்தில் பன்னீர்செல்வத்துடன் மோதல் ஏற்பட்ட நிலையில், டில்லி சென்றுள்ள அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சரும் பா.ஜ., மூத்த தலைவருமான அமித்ஷாவை சந்தித்து பேசினார். பின்னர் நிருபர்களை சந்தித்த பழனிசாமி, அமித்ஷாவுடன் அரசியல் பேசவில்லை என்றார்.
அ.தி.மு.க.,வில் ஒற்றைத் தலைமை ஏற்படுத்துவது தொடர்பாக, பன்னீர்செல்வம் - பழனிசாமி தரப்பினர் இடையே, மோதல் ஏற்பட்டது. ஜூலை 11ல் பழனிசாமி கட்சி பொதுக்குழுவை கூட்டினார். அதில், இடைக்கால பொதுச் செயலராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். ஒருங்கிணைப்பாளராக இருந்த பன்னீர்செல்வம், கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், பா.ஜ., ஆதரவு யாருக்கு என்ற விவாதம், அக்கட்சி வட்டாரத்தில் எழுந்தது. முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிரிவு உபசார விழாவுக்கு சென்ற பழனிசாமி, பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேச முயற்சித்தார்; ஆனால், அனுமதி
கிடைக்கவில்லை. அதேபோல், 'செஸ் ஒலிம்பியாட்' துவக்க விழாவில் பங்கேற்க பிரதமர் சென்னை வந்தபோதும், இருவரும் சந்தித்து பேச நேரம் ஒதுக்கப்படவில்லை. இந்த சூழ்நிலையில், நேற்று(செப்.,20) இரவு பழனிசாமி டில்லி சென்றார்.

இன்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பழனிசாமி கூறியதாவது: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது. கோதாவரி - காவிரி நதிகளை இணைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தேன். நடந்தாய் வாழி காவிரி திட்டத்களை நிறைவேற்றுவது குறித்தும் பேசினேன். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது குறித்து அமித்ஷாவின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன்.
தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை பற்றி உள்துறை அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது குறித்தும் அமித்ஷாவிடம் எடுத்துக் கூறினேன். அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை. அதிமுக உட்கட்சி பிரச்னை நீதிமன்றத்தில் இருப்பதால் அது குறித்து எதுவும் கருத்து சொல்ல முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
ஓ.பி.எஸ்., குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, சாரி, வணக்கம் எனக்கூறிவிட்டு பழனிசாமி சென்றார்.
இந்த சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சண்முகம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.