நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலைய கட்டுமான பணி விறுவிறு அடுத்தாண்டு பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டம்| Dinamalar

நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலைய கட்டுமான பணி 'விறுவிறு' அடுத்தாண்டு பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டம்

Added : செப் 20, 2022 | |
சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, நெம்மேலியில் 1,516 கோடி ரூபாயில் கூடுதலாக அமைக்கப்படும், 15 கோடி லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணி, வேகமாக நடைபெற்று வருகிறது.மேலும், கிழக்கு கடற்கரை சாலை பேரூரில், 6,078 கோடி ரூபாயில், 40 கோடி லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட நிலையம் கட்டும் பணியும் விரைவில் துவங்க உள்ளது.தேவை
நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலைய கட்டுமான பணி 'விறுவிறு' அடுத்தாண்டு பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டம்

சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, நெம்மேலியில் 1,516 கோடி ரூபாயில் கூடுதலாக அமைக்கப்படும், 15 கோடி லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணி, வேகமாக நடைபெற்று வருகிறது.மேலும், கிழக்கு கடற்கரை சாலை பேரூரில், 6,078 கோடி ரூபாயில், 40 கோடி லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட நிலையம் கட்டும் பணியும் விரைவில் துவங்க உள்ளது.


தேவை அதிகரிக்கும்


சென்னை குடிநீர் வாரியம் வாயிலாக, 15 மண்டலங்களில் குழாய் மற்றும் லாரி வழியாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தினமும், 100 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.இந்த குடிநீர் பூண்டி, சோழவரம், புழல், தேர்வாய்கண்டிகை, செம்பரம்பாக்கம் நீர்நிலைகள் மற்றும் மீஞ்சூர், நெம்மேலி -- 1 கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் இருந்து பெறப்படுகிறது.

ஏரிகளில் இருந்து கிடைக்கும் குடிநீர் ஒருபக்கம் இருந்தாலும், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், குடிநீர் தேவையை பற்றாக்குறை இல்லாமல் பூர்த்தி செய்கிறது.நெம்மேலியில், 10 கோடி லிட்டர் நிலையம் உள்ளது. இங்கிருந்து அடையாறு, ஆலந்துார், கண்ணகி நகர், பெரும்பாக்கம், சோழிங்கநல்லுார், செம்மஞ்சேரி, துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.சோழிங்கநல்லுார்,பெருங்குடி மண்டலங்களில், குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் முடிவடைந்ததும், குடிநீரின் தேவை அதிகரிக்கும்.


ரூ.1,516 கோடி


மேலும், எதிர்காலத்தில் சென்னையின் குடிநீர் தேவை மற்றும் புறநகர் உள்ளாட்சிகளுக்கு வழங்க வேண்டிய குடிநீரை கருத்தில் கொண்டு, நெம்மேலி--2 திட்டத்தில், 1,516 கோடி ரூபாயில், 15 கோடி லிட்டர் திறன் கொண்ட சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுகிறது.இது, அடுத்த ஆண்டு பயன்பாட்டுக்கு வர உள்ளது.

மேலும், கிழக்கு கடற்கரை சாலை பேரூரில், 6,078 கோடி ரூபாயில், 40 கோடி லிட்டர் திறன் கொண்ட சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது.தற்போது வழங்குவது, எதிர்காலத்தில் வழங்க உள்ளது என, தினமும் 75 கோடி லிட்டர் குடிநீர், கடலில் இருந்து தயாரிக்கப்படும்.ஏரிகளில் நீர் வறட்சி ஏற்பட்டாலும், கடல்நீரை கொண்டு குடிநீரின் பற்றாக்குறையை போக்க முடியும் என, குடிநீர் வாரிய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


உற்பத்தி செலவு


மீஞ்சூர் கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை சி.டபிள்யூ.டி.எல்., என்ற நிறுவனம் அமைத்தது. அரசு ஒப்பந்தப்படி, 25 ஆண்டுகள் குடிநீர் வழங்க வேண்டும். 2010ம் ஆண்டு முதல் வாரியத்திற்கு தினமும், 10 கோடி லிட்டர் குடிநீர் வழங்குகிறது. தற்போது, 13ம் ஆண்டு விலைப்படி, ௧,௦௦௦ லிட்டர் குடிநீருக்கு, 46.02 ரூபாய் வீதம் கொடுத்து வாரியம் வாங்கி, வடசென்னை மக்களுக்கு வினியோகம் செய்கிறது.

அதேபோல், நெம்மேலி கடல் நீரை குடிநீராக்கும் நிலையம், 570 கோடி ரூபாயில் அமைக்கப் பட்டது. 2014ம் ஆண்டு முதல், தினமும் 10 கோடி லிட்டர் குடிநீர் வாரியம் உற்பத்தி செய்கிறது. 265 லிட்டர் கடல் நீர் சுத்திகரிக்கப்பட்டு, 165 லிட்டர் குடிநீராக மாற்றப்படுகிறது. மீதமுள்ள 100 லிட்டர் கடலில் விடப்படுகிறது.

இதன்படி, 1,000 லிட்டர் குடிநீர் தயாரிக்க, 36.77 ரூபாய் செலவாகிறது.நிலையத்தில் இருந்து சென்னைக்கு, 47.35 கி.மீ., துாரம் குழாய் பதிக்க திட்டமிட்டு, 42 கி.மீ., துாரம் வரை பதிக்கப்பட்டு உள்ளது. தென்சென்னை மக்களுக்கு இந்த குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.ஆனால், ஏரிகளில் இருந்து எடுக்கும் நீரை சுத்திகரிப்பு செய்து குடிநீராக்க, 1,000 லிட்டருக்கு 7 முதல் 8 ரூபாய் செலவாகிறது. ஏரி நீர் லாபமாக இருந்தாலும், மழை இல்லாத போது கடல் நீரைத் தான் நம்பி இருக்க வேண்டி உள்ளது.


ரூ.7,594 கோடி திட்டம்


நெம்மேலி 2வது திட்டத்தில், 1,516 கோடி ரூபாயில், 15 கோடி லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கப்படுகிறது.இந்த பணி, 2020 அக்., மாதம் துவங்கியது. தற்போது, 75 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. அடுத்த ஆண்டு ஏப்ரலில் பணி முடித்து, குடிநீர் வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இதேபோல், கிழக்கு கடற்கரை சாலை பேரூரில், 6,078 கோடி ரூபாயில், 40 கோடி லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.இது ஒப்பந்த நிலையில் உள்ளது. விரைவில் பணி துவக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


75 சதவீதம் கடல் நீர்


தினமும், 100 கோடி லிட்டர் குடிநீர் சென்னைக்கு வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது மீஞ்சூர், நெம்மேலியில் இருந்து, 20 கோடி லிட்டர் குடிநீர் பெறப்படுகிறது.மீதமுள்ள குடிநீர், ஏரிகளில் இருந்து பெறப்படுகிறது. நெம்மேலி -- 2 மற்றும் பேரூர் திட்டம் செயல்பாட்டுக்கு வரும் போது, 75 கோடி லிட்டர் குடிநீர் கடலில் இருந்து கிடைக்கும். அப்போது, 75 சதவீதம் கடலை நம்பியும், 25 சதவீதம் ஏரியை நம்பியும் இருக்க வேண்டும். ஏரியில் அதிக கொள்ளளவு நீர் இருக்கும் போது, கடல் நீர் சுத்திகரிப்பின் அளவு குறையும். ஏரிகள் வறட்சியாகும் போது,கடல் நீர் கைகொடுக்கும்.


வரவு குறைவு


தினமும் ஒரு நபருக்கு, 120 லிட்டர் வீதம், ஐந்து பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு, 600 லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது. இதற்கு, கடல் நீர் சுத்திகரிப்பில், 20 ரூபாய் செலவாகிறது.இதன்படி, மாதம் 600 ரூபாய் வாரியம் செலவு செய்கிறது. ஆனால், பொதுமக்கள் குடிநீர் மற்றும் கழிவு நீர் கட்டணம், 80 ரூபாய் தான் செலுத்துகின்றனர். இதனால், குடிநீரை தேவையின்றி செலவு செய்து, வீணடிக்க வேண்டாம்.


மண் தன்மை ஆய்வு


தற்போது அமைக்கப்படும், 15 கோடி லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட நிலையத்திற்கு கடல் நீரை கொண்டு வர, பொறியியல் தொழில்நுட்ப முறையில் குழாய் பதிக்கப்பட உள்ளது.அதேபோல், சுத்திகரித்த பின், உபரிநீரை கடலில் விடவும், பாதுகாப்பு அம்சங்களுடன் குழாய் பதிக்கப்பட உள்ளது. இதற்காக மண்ணின் தன்மை, கடல் பகுதி மேடு, மண் குவியல், மண் அகற்றுதல் குறித்த ஆய்வு பணி நடக்கிறது.இந்த பணியை, ஆந்திரா, விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த நிறுவனம் செய்கிறது. குழாய் பதிக்கும் பகுதி யில் மண் குவியல் உள்ளதால், அதை அகற்றிய பின் குழாய் பதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


குடிநீருக்காக அலைச்சல்


பல ஆண்டுகளுக்கு முன், சென்னை மக்கள்குடிநீருக்காக குடத்துடன் துாக்கத்தைத் தொலைத்து அலைந்தனர். அதுபோன்ற சூழல் இனிமேல் வராது. தொலைநோக்குப் பார்வையில், கடல் நீர்குடிநீராக்கப்படுகிறது. எந்த கோடையாகஇருந்தாலும் சமாளிக்க முடியும். ஏரி நீரை விட கடல் நீர் சுத்திகரிப்பில், உற்பத்தி செலவு அதிகம் தான். பொதுமக்கள், குடிநீரை வீணடிக்காமல் பயன்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும்.

- குடிநீர் வாரிய அதிகாரிகள்

- -நமது நிருபர்- -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X