கிருஷ்ணராயபுரம் : கிருஷ்ணராயபுரத்தை அடுத்த மகாதானபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நெல் சாகுபடிக்கு நாற்றங்கால் தயார்படுத்தும் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மேட்டு மகாதானபுரம் பகுதியில் விவசாய நிலங்களுக்கு வாய்க்கால் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. தற்போது வாய்க்காலில் தண்ணீர் செல்வதால் இப்பகுதி விவசாயிகள் விளை நிலங்களில் நெல் சாகுபடி பணிகளை துவங்கியுள்ளனர். முதல்கட்டமாக நெல் விதைப்பு பணிக்கு தேவையான நாற்றங்கால் தயார்படுத்தும் பணிகள் நடக்கின்றன.
வயலில் உழவு செய்து, சமன்படுத்தி, அதில் தரமான நெல் விதைகள் விதைக்கப்படுகிறது. நாற்றங்கால் நெற் பயிர்கள் வளர்ச்சி அடைந்தவுடன் அதனை பறித்து நெல் வயல்களில் நடவு செய்யும் பணி துவங்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.