வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோவை: ஆ.ராஜா.,வை விமர்சித்தது தொடர்பான வழக்கில் கோவை மாவட்ட பா.ஜ., தலைவர் கைது செய்யப்பட்டதற்கு தமிழக பா.ஜ., நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஹிந்துக்களுக்கு எதிராக பேசி வரும் திமுக எம்.பி., ஆ.ராசாவுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், கோவையில் ஆ.ராசாவை கண்டித்து ஹிந்து முன்னணி நடத்திய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பேசிய பா.ஜ. கோவை மாவட்ட தலைவர் உத்தம ராமசாமி, ஆ.ராசா விமர்சித்து பேசுகையில் வன்முறையை தூண்டும் வகையில் மிரட்டல் தொனியில் பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் மீது பீளமேடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து, இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்துதல் உட்பட 3 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து பீளமேடு போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை மருத்துவ பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றனர்.
கண்டனம்
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை

தொடர்ச்சியாக இந்துக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசி வரும் திமுக எம்.பி., ராஜாவை இந்த திறனற்ற திமுக அரசு கண்டிக்கவும் இல்லை, கைது செய்யவும் இல்லை. வெறுப்பை உமிழும் ராஜாவை வை கண்டித்ததற்காகக் கோவை மாநகர் மாவட்ட தலைவர் உத்தம ராமசாமியை போலீசார் கைது செய்ததை தமிழக பா.ஜ., வன்மையாக கண்டிக்கிறது.
மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசி வரும் ராஜாவை கைது செய்யாமல், திமுகவின் இரண்டாம் கட்ட பேச்சாளர்களை மிஞ்சிய அவரது இழிவான பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்த தமிழக பாஜ., மாவட்ட தலைவரைக் கைது செய்தது ஏன்?திமுக அரசே, உங்கள் அடக்குமுறைகளுக்கு நாங்கள் என்றும் அஞ்சமாட்டோம், உங்களது சர்வாதிகாரத்தனத்திற்கு மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள்.
பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன்

கோவை மாநகர் மாவட்ட பா.ஜ., தலைவரை போலீசார் கைது செய்திருப்பதும், கைது செய்யப்பட்ட விதமும் வன்மையாக கண்டிக்கத்தக்கது . திமுக அரசின் இம்மாதிரி மிரட்டல்களை கண்டு அஞ்சுவதில்லை எங்கள் தொண்டர் கூட்டம் . சட்டப்படியாக இதை சந்திப்போம் .
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.