கோவிட் கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 7 ஆண்டுகளில் முதன்முறையாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், 2021-22ம் நிதியாண்டில் ரூ.72 கோடி நஷ்டத்தை சந்தித்ததாக தெரிவித்துள்ளது.
கோவிட் பரவல் காரணமாக 2020 மார்ச் முதல் 2022 மார்ச் வரை சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. பல்வேறு நாடுகளில் சிக்கியவரை வந்தே பாரத் திட்டத்தின் கீழ் மீட்க விமானங்கள் இயக்கப்பட்டன.
ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், பெரும்பாலும் இந்தியா மற்றும் வளைகுடா நாடுகளுக்கு இடையே விமான சேவையை வழங்கி வருகிறது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் கீழ் 24 போயிங் 737 விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
2021-22ம் நிதியாண்டில், மொத்த வருமானம் மற்றும் செலவுகள் முறையே ரூ.3,522 கோடி மற்றும் ரூ.3,251 கோடியாக உள்ளது. அதே நேரம், விமானத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை 56 சதவீதம் அதிகரித்து, 22.9 லட்சம் பேராக அதிகரித்துள்ளது.
2022 ஜனவரியில் ஏர் இந்தியா மற்றும் அதன் துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸை டாடா குழுமம் கைப்பற்றியது. இதனை தொடர்ந்து, ஏர் இந்தியா, டாடா குழுமத்தின் விமான பிரிவான ஏர் ஆசியா விமான நிறுவனத்துடன், இணைவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
![]()
|
இந்நிலையில், நிறுவன பதிவாளிடம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தாக்கல் செய்துள்ள ஆவணங்களில் கூறியிருப்பதாவது:
கோவிட் தொற்றின் 2வது மற்றும் 3வது அலைகள், விமான போக்குவரத்து சந்தை மீள்வதை தடுத்து வருகிறது. குறிப்பாக முக்கிய வணிகமாக திகழும் சர்வதேச விமானச்சந்தையை மீட்சியை தடுத்து வருகிறது. தேவைக்கு ஏற்ப திறன்களை மாற்றியமைத்தல், லாபத்தை அடைவதற்கான பாதையை கண்டறிதல், ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பது, சரக்கு போக்குவரத்து போன்றவற்றில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. 2021-22 நிதியாண்டில் இவை மூலம் நிறுவனத்தின் நஷ்டத்தை ஓரளவு கட்டுக்குள் வைக்க முயற்சித்தது. அதேநேரம், பல ஆண்டுகளாக நஷ்டத்தில் உள்ள தாய் நிறுவனமான ஏர் இந்தியா, ரூ.9,556 கோடி நிகர நஷ்டத்தை சந்தித்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
2021-22ல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சார்பில் மொத்தம் 10,172 விமானச்சேவைகள் இயக்கப்பட்டன. அதில் 190 மட்டுமே உள்நாட்டு விமானச்சேவையாகும். இந்தியாவில் இருந்து துபாய், அபுதாபி,சார்ஜா உள்ளிட்ட 15 வளைகுடா நாடுகளுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களை இயக்கியது.
![]()
|
சரக்கு போக்குவரத்து 58 சதவீதம் வளர்ச்சியுடன், நிகர வருவாய் ரூ.209 கோடியாக அதிகரித்துள்ளது. இதுவே கடந்த நிதியாண்டில் ரூ.132 கோடியாக இருந்தது. இதற்கு ஊரடங்கு சமயத்தில் இயக்கப்பட்ட 300க்கு மேற்பட்ட கார்கோ விமானங்களே முதன்மை காரணமாகும். ஒவ்வொரு விமானமும் சராசரியாக 15 டன் சரக்குகளை சுமந்து பயணித்தன.
2020-21ம் நிதியாண்டில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 98.21 கோடி நிகர லாபமாக ஈட்டியிருந்தது. கடைசியாக 2014-15ம் நிதியாண்டில் ரூ.61 கோடி நிகர நஷ்டத்தை சந்தித்திருந்தது.