போலி வேடம் எடுபடாது ராகுல்! | Dinamalar

சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

போலி வேடம் எடுபடாது ராகுல்!

Added : செப் 21, 2022 | கருத்துகள் (1) | |
போலி வேடம் எடுபடாது ராகுல்! கே.எஸ்.தியாகராஜ் பாண்டியன், காரைக்குடி, சிவகங்கை மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்: காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் முயற்சியாக, அக்கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல், துவக்கியுள்ள பாதயாத்திரைக்கு, 'ஒற்றுமை யாத்திரை' என, பெயர் சூட்டியுள்ளது ஆச்சரியமாகவும், வியப்பாகவும் உள்ளது.கடந்த, 1947ல், நாட்டிற்கு சுதந்திரம் கொடுத்த போது,


போலி வேடம் எடுபடாது ராகுல்!கே.எஸ்.தியாகராஜ் பாண்டியன், காரைக்குடி, சிவகங்கை மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்: காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் முயற்சியாக, அக்கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல், துவக்கியுள்ள பாதயாத்திரைக்கு, 'ஒற்றுமை யாத்திரை' என, பெயர் சூட்டியுள்ளது ஆச்சரியமாகவும், வியப்பாகவும் உள்ளது.கடந்த, 1947ல், நாட்டிற்கு சுதந்திரம் கொடுத்த போது, இந்தியாவை இரண்டாக பிரித்தனர் ஆங்கிலேயர்; அதை, காங்கிரஸ் எதிர்க்கவில்லை. அதன் பின், பாகிஸ்தானில் இருந்து ஹிந்துக்கள் அடித்து விரட்டப்பட்ட போதும், காங்கிரசார் ஏன் என்று கேள்வி கேட்கவில்லை. பாகிஸ்தானுக்கும், கிழக்கு பாகிஸ்தானுக்கும் இடையே உள்நாட்டு போர் வந்த போது, இந்திய படைகளை அனுப்பி, வங்க தேசம் என்ற, தனி நாடு உருவாக காரணமாக இருந்தார் இந்திரா. அதனால், அன்று முதல் இன்று வரை, பாகிஸ்தான் நம்மை ஜென்ம விரோதியாகவே பாவிக்கிறது. இது, ராகுலுக்கு தெரியாதா என்ன? மத நல்லிணக்கம் பற்றி பேசும், ராகுல் ஜி அவர்களே... காங்கிரஸ் ஆட்சியில் தான் மத கலவரங்கள் அதிகம் நடந்தன; பா.ஜ., ஆட்சியில் மத கலவரங்கள் குறைந்துள்ளன. நம் நாட்டின் ஒரு மாநிலமாக இருந்த, ஜம்மு - காஷ்மீருக்கு மட்டும், தனி அந்தஸ்து, தனி சட்டம், தனிக்கொடி என, பிரித்து வைத்ததும் காங்கிரஸ் கட்சியே. 'தமிழகம் எனக்கு மிகவும் பிடிக்கும்' என்று சொல்கிறீர்கள்; பின் ஏன் தமிழகத்துக்கு சொந்தமான கச்சத்தீவை, இலங்கைக்கு காங்கிரஸ் தாரை வார்த்தது? இலங்கைக்கு அமைதிப்படை என்ற பெயரில் ராணுவத்தை அனுப்பி, அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவித்ததே காங்கிரஸ் தானே... இதுதான் தமிழர்கள் மீது, காட்டிய பாசமா?
பல சமஸ்தானங்களாக சிதறிக் கிடந்த இந்தியாவை, ஒன்றுபடுத்தியவர் வல்லபாய் படேல். அவருக்கு நீங்கள் செய்த மரியாதை என்ன? தமிழகத்தில், 1967ல், எந்த தி.மு.க.,விடம், காங்கிரஸ் தோற்றதோ, அதே தி.மு.க., தயவில் தான், உங்கள் கட்சி தமிழகத்தில் தேர்தலை சந்திக்கும் துர்பாக்கிய நிலைமை உள்ளது. பா.ஜ., ஆட்சியில் ஒரு முறை கூட மாநில அரசு எதுவும் கலைக்கப்படவில்லை. காங்கிரஸ் ஆட்சியில், பல முறை பல மாநில அரசுகள் கலைக்கப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட காங்கிரசாருக்கு, ஜனநாயகம் பற்றி பேச, என்ன யோக்கியதை இருக்கிறது. மோடியை சர்வாதிகாரி என்று கூறும் ராகுல் அவர்களே... 1976ல் எமர்ஜென்சியை கொண்டு வந்து எதிர்க்கட்சிகள் ஆளும், மாநில அரசுகளை கலைத்து, தலைவர்களை சிறையில் தள்ளியது காங்கிரஸ் கட்சி தானே! எனவே, ஒற்றுமை, ஜனநாயகம், மத நல்லிணக்கம் என, நீங்கள் போடும் போலி வேடம் எல்லாம், மக்களிடம் எடுபடாது ராகுல் ஜி!


காலை உணவு திட்டத்தை வரவேற்போம்!அ.அப்பர் சுந்தரம், மயிலாடுதுறையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தினமும் காலை உணவு அருந்தாமல், பள்ளிக்கு அவசர அவசரமாக, ஆயிரக்கணக்கான மாணவ---- - --மாணவியர் செல்கின்றனர். அதற்கான விடி மோட்சமாக, முதல்வர் ஸ்டாலின் முயற்சியால், அண்ணாதுரை பிறந்த நாளில், பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை துவங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. எந்தவொரு மாணவனும், சிறந்த கல்வியை, ஏக்கமும் தாக்கமும் இல்லாத மனநிலையில் தான் கிரகிக்க முடியும் என்ற உண்மையை உணர்ந்து, இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. காமராஜர் ஆட்சிக் காலத்தில், உணவில்லாமல் தான், பல மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்வதில்லை என்பதை அறிந்து, அவர் மதிய உணவு திட்டத்தைக் கொண்டு வந்தார். அதே திட்டத்தை, சத்துக்கள் மிக்க உணவு தரும் திட்டமாக மாற்றினார், எம்.ஜி.ஆர்.,
அதன்பின் வந்த முதல்வர்களான கருணாநிதி, ஜெயலலிதா போன்றோர், மாணவர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவு கிடைக்க வழி செய்தனர். இப்போதைய முதல்வர் ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார். வயிற்றில் பசியோடு நிச்சயம் கல்வியை ஏற்க முடியாது என்ற உண்மையை உணர்ந்த, நம் முதல்வர்களின் செயல்பாடுகள் அத்தனையும், நம் மாணவர்களின் பசியை போக்குவதாக இருந்தாலும், அறிவை ஏற்றுக் கொள்ளக்கூடிய ஆற்றலை கொடுக்க வல்லவை என்றும் கருத வேண்டும்.
அறிவை பெருக்கிக் கொள்ளும் மாணவர்கள், நிச்சயமாக தமிழகத்திற்கும், நாட்டிற்கும் நற்சேவை ஆற்ற முதற்படி காலை உணவு திட்டம். இத்திட்டம் சிறப்பாக செயல்பட, அனைவரும் அரசுக்கு ஒத்துழைப்போம். வலுவான, அறிவான இளம் மாணவ சமூகம் உருவாக துணை நிற்போம்.


பிராமணர்களை வம்புக்கு இழுக்காதீங்க!தி.ஸ்ரீராம் விஷ்ணு, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில், தி.மு.க., ஆட்சி நடக்கும் போதெல்லாம், ஹிந்து மதத்தையும், ஹிந்து மத வழிபாட்டு முறைகளையும், குறிப்பாக பிராமண சமூகத்தினரையும் இழிவுபடுத்தி பேசுவதை, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் வழக்கமாக வைத்திருக்கின்றனர். ஆரியம், திராவிடம் என்ற இரண்டு வார்த்தைகளை சொல்லியும் பிழைப்பு நடத்துகின்றனர்.
அத்துடன், சனாதனம், வர்ணாசிரமம், சூத்திரன் என்ற புரியாத வார்த்தைகளை பயன்படுத்தியும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தி.மு.க., - எம்.பி., - ஆ.ராஜா போன்றோர், பிராமணர்களை குறை கூறுகின்றனர். அந்த இருவரும் தெரிந்து கொள்ள வேண்டியதாவது...

* பட்டியலினத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் கொடியேற்றுவதை, எந்த பிராமணரும் தடுக்கவில்லை; அவர்களை தரையில் அமரும்படியும் சொல்லவில்லை

* தாழ்த்தப்பட்டவர்களை கோவிலுக்குள் அனுமதிக்க மறுப்பதும், இறந்தவர்களை அவர்கள் வீதி வழியாக எடுத்துச் செல்ல மறுப்பதும், 'இரட்டை டம்ளர்' முறையும், பொதுக் குழாயில் தண்ணீர் பிடிக்க தடை விதிப்பதும், ஆணவக் கொலையில் ஈடுபடுவதும் பிராமணர்கள் அல்ல.
இவற்றை செய்பவர்கள், சமூக நீதி, சமத்துவம் என்று கூறிக் கொள்ளும், உங்கள் கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியினரே

* தமிழகத்தில் உள்ள ஆதிக்க சமூகத்தினரை விமர்சிக்க அஞ்சும் நீங்கள், அப்பாவிகள் என்பதால், பிராமணர்களை மட்டும் விமர்சிப்பது சரியல்ல. அது மட்டுமின்றி, நீங்கள் பெரும்பான்மையாக உள்ள கிராமங்களில், சிறுபான்மையாக உள்ளவர்கள் படும்பாடு இருக்கிறதே... பட்டியலினத்திலேயே சிறுபான்மையினராக இருந்து, கவுரவமாக வாழ்ந்து வரும் ஜாதியினர், உங்களிடம் படும் அவஸ்தை கொடியது.
இதை எல்லாம் தெரிந்து, அதன்பின் அரசியல் செய்யுங்கள். பொத்தாம் பொதுவாக எதற்கெடுத்தாலும், பிராமணர்களை வம்புக்கு இழுப்பதை விட்டு விடுங்கள்; அவர்கள் சபித்தால் நாடே அழிந்து விடும்.
மொத்தத்தில், ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், 'கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே... சங்கு சுட்டாலும் வெண்மை தரும்!'

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X