பல மொழிகள் கற்பதை தமிழ் சமூகம் ஏற்கிறது!: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டம்

Updated : செப் 23, 2022 | Added : செப் 21, 2022 | கருத்துகள் (21) | |
Advertisement
''தமிழகப் பெருமைகளை தேசிய அளவுக்கு எடுத்துச் செல்ல தமிழக அரசு தயங்குகிறது,'' என, மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்குற்றஞ்சாட்டினார்.நம் நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி:புதிய தேசியக் கல்விக் கொள்கையில், தாய்மொழிக் கல்விக்குத் தான் முக்கியத்துவம் தருவதாகச் சொல்லப்படுகிறது. அதை எவ்வாறு நடைமுறைப்படுத்துகிறீர்கள்? தாய்மொழிக்
மொழிகள், தமிழ் சமூகம், தர்மேந்திர பிரதான்

''தமிழகப் பெருமைகளை தேசிய அளவுக்கு எடுத்துச் செல்ல தமிழக அரசு தயங்குகிறது,'' என, மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்குற்றஞ்சாட்டினார்.
நம் நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி:


புதிய தேசியக் கல்விக் கொள்கையில், தாய்மொழிக் கல்விக்குத் தான் முக்கியத்துவம் தருவதாகச் சொல்லப்படுகிறது. அதை எவ்வாறு நடைமுறைப்படுத்துகிறீர்கள்?


தாய்மொழிக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பதில், அனைத்து மாநிலங்களும் ஒருமித்து இருக்கின்றன. அதனால், தற்போது, நாங்கள் பல்வேறு பாடப் பிரிவுகளை வடிவமைப்பதில் ஈடுபட்டுள்ளோம். பின், அதற்கான பாடத் திட்டங்களை உருவாக்குவோம்.
பாடப் புத்தகங்களை எழுதுவோம். இதற்கு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் எனப்படும் என்.சி.இ.ஆர்.டி., பொறுப்பு ஏற்றுள்ளது. அது, எல்லா மாநில கல்வி கவுன்சில்களை ஒருங்கிணைப்பதோடு, மாவட்ட அளவிலான கலந்துரையாடலையும் நடத்திவருகிறது. இன்னும் ஒருசில மாதங்களில், பாடநுால்களின் முதல் தொகுதி வெளிவந்து விடும்.


தாய்மொழிக் கல்விக்கு ஏன் இவ்வளவு அக்கறை?


இங்கே ஒரு சமூகப் பொருளாதார பிரச்னை உள்ளது. எல்லாராலும் ஆங்கில கல்விக்குப் போக முடியாது. கிராமப் புறங்களிலும், ஏழை, எளியவர்கள் மத்தியிலும் வேலைவாய்ப்பு மற்றும் முன்னேற்றத்துக்கு உதவுவது தாய்மொழி தான். உதாரணமாக, இந்த மாநிலத்தின் மகத்தான ஆளுமையான அப்துல் கலாமையே எடுத்துக் கொள்ளுங்கள்.


latest tamil news


அவர், ஆரம்பக் கல்வியை தமிழில் தான் படித்தார்.அதனால் தான், அனைத்து கல்வியாளர்களும், தாய்மொழியிலேயே கல்வி போதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.தமிழகம் மும்மொழிக் கொள்கையை தொடர்ந்து எதிர்க்கிறது. ஆனால், தேசியக் கல்விக் கொள்கையோ மும்மொழிக் கொள்கையை முன்வைக்கிறது.


தமிழக அரசை, நீங்கள் எப்படி சமாதானப்படுத்துவீர்கள்?


கல்வி என்பது மத்திய, மாநில அரசுகளின் பொதுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இங்கே ஆரம்பத்தில் இருந்து, ஒரு கருத்து நிலவி வருகிறது. அதேநேரம், மக்கள் மனதில் எந்தவிதமான குழப்பமும் இல்லை. பல பள்ளிகளில், பல்வேறு மொழிகள் சொல்லித் தரப்படுகின்றன. இன்றைய தொழில்நுட்ப உலகத்தில் மொழியைக் கற்பது, ஒரு பிரச்னையே இல்லை. பல மொழிகள் கற்பதை தமிழ்ச் சமூகமும் முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளது.
தமிழர்கள் இப்போது மலையாளம், கன்னடம், ஆங்கிலம் மற்றும் பல்வேறு மொழிகளைப் பயின்று வருகின்றனர். அதனால், எந்தவிதமான முரண்பாடும் இங்கே இருப்பதாக நான் கருதவில்லை. சமூக ரீதியான மாற்றத்தை, அரசு ஒருபோதும் தடுக்க முடியாது.'தேசியக் கல்விக் கொள்கை, தமிழகத்தின் உரிமையைப் பறிக்கிறது' என, முதல்வர் ஸ்டாலின் பேசியிருக்கிறார்.
உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், 'தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்துவது என்பது, தமிழக மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமை' என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.


தேசியக் கல்விக் கொள்கை உருவாக்கப்பட்ட போது, தமிழக அரசிடம் கலந்தாலோசிக்கப்பட்டதா, இல்லையா?


தமிழகத்திடமும் கருத்து கேட்கப்பட்டது. எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை. நான் திண்டுக்கல்லில் உள்ள காந்தி கிராமப் பல்கலைக்கு சென்றிருந்தேன். அங்கே இந்தியா சுதந்திரம் பெற்று, 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை ஒட்டி ஒரு கண்காட்சி வைத்து உள்ளனர்.


latest tamil news


அதில், தமிழகத்தின் அத்தனை விடுதலைப் போராட்ட வீரர்களின் புகைப்படங்களையும் வைத்திருந்தனர். அதில் 18ம் நுாற்றாண்டைச் சேர்ந்த வீரர்களின் படங்களும் இருந்தன.இந்த அரிய பொக்கிஷத்தை தேசிய அளவில் எடுத்துச் செல்ல, தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்குமா?


தமிழ் ஒரு மூத்த மொழி. அதன் பண்பாடும், வரலாறும், தொன்மையானது. இந்த கலாசார வளத்தை தேசிய அளவுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று சொல்கிறது, தேசிய கல்விக் கொள்கை. அதை தமிழக அரசு எதிர்க்கிறதா என்ன? இப்படி தமிழகத்தின் வரலாறு இருக்க, அதையெல்லாம் பிரதிபலிக்கும் தேசிய கல்விக் கொள்கையை, தமிழக மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமை என்றால், அதை எப்படி ஏற்க முடியும்?


தமிழுக்கும், தாய்மொழிக் கல்விக்கும், தேசியக் கல்விக் கொள்கை முக்கியத்துவம் அளிக்கிறது, இதை தமிழக அரசு எதிர்க்கிறதா?


இங்கேயுள்ள இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி கொடுத்து, அவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறோம், அதை தமிழக அரசு எதிர்க்கிறதா?இந்த எதிர்ப்பெல்லாம் முற்றிலும் அரசியல் ரீதியானவை. இதற்கும் மாணவர்களின் கல்விக்கும், அவர்களது எதிர்காலத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
அரசியல் ரீதியான எதிர்ப்புகளுக்கு என்னிடம் எந்தப் பதிலும் இல்லை.தமிழக கவர்னரிடம் இருந்தோ, மத்திய அரசின் கல்வித் துறை அமைப்புகளிடம் இருந்தோ உத்தரவுகள் வருமேயானால், அதை துணை வேந்தர்கள், முதலில் மாநில உயர்கல்வித் துறையின் கவனத்துக்குக் கொண்டு வர வேண்டும் என தமிழக அரசு சொல்கிறது.


இது, துணை வேந்தர்களின் சுதந்திரத்தில் தலையிடுவது போன்று ஆகாதா?


நல்ல கேள்வி ஒன்றை தவறான நபரிடம் கேட்கிறீர்கள். துணை வேந்தர்களைக் கேளுங்கள். நாங்கள் யு.ஜி.சி.,யின் அன்றாட செயல்பாடுகளில் கூட தலையிடுவதில்லை. அது ஒரு தன்னாட்சி அமைப்பு. அதை கல்வியாளர்களும், புத்திசாலிகளும் நிர்வகிக்கின்றனர். துணை வேந்தர்களுக்கு சுதந்திரமும் சுய அதிகாரமும் வழங்கப்பட வேண்டும்.
இதே மாதிரியான மரியாதையை மாநில அரசுகளும் துணை வேந்தர்களுக்கு வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். பிரதமரின் தேசிய திறன் மேம்பாட்டுத் திட்டம் துவங்கி, ஏழு ஆண்டு ஆகின்றன.


அதன் பலன்கள் எப்படி உள்ளன?


இன்று எல்லாம் தொழில்நுட்ப மயமாகி வருகின்றன. இந்நிலையில், அனைவரும், திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்; புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இந்நிலையில் மத்திய அரசு, வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான திறன் மேம்பாட்டுக் கட்டமைப்பை தேசிய அளவில் உருவாக்கி வருகிறது.
மாநிலங்களும், தொழில் துறையினரும், வர்த்தகத் துறையினரும் இந்த மாற்றத்தை ஏற்றாக வேண்டும். இப்போதெல்லாம் யாரும் வங்கிக்கு போய் பணம் எடுப்பதில்லை அல்லது போடுவதில்லை. டிஜிட்டல் பரிவர்த்தனை தான். அதனால், 'டிஜிட்டல் பேமென்ட்'கள் வந்து விட்டன.


இந்தத் திறன் வளர்ச்சியை யார் கொண்டு வந்தது?


மக்கள், தங்களைத் தாங்களே மேம்படுத்திக் கொண்டனர்.இப்போது, புதிய புதிய மொபைல் போன்கள் வருகின்றன, புதிய மின்னணு கருவிகள் வருகின்றன. இவற்றை இயக்குவதற்கு யார் சொல்லித் தந்தனர்; மக்களே அவற்றைக் கற்றுக் கொள்கின்றனர். இவை இயற்கையாகவே நடைபெறும் திறன் மேம்பாடு, வளர்ப்பு ஆகும். இவையெல்லாம் சாத்தியமாகக்கூடிய ஒரு விரிவான கட்டமைப்பைத் தான் மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.


latest tamil news


கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பயிற்றுவிக்கப்படும் மொழிகளில் தமிழை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறதே?


குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்கள் முன்வந்து, தாம் ஒரு மொழியைக் கற்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தால், அப்பள்ளி முதல்வர் செய்து தருவார். இது, தமிழகத்துக்கும் பொருந்தும்.கடந்த தமிழக அரசுக் காலத்தில் 'நீட்' தேர்வு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. புதிய அரசு பொறுப்பேற்ற பின், அந்த வகுப்புகள் நிறுத்தப்பட்டன. இதனால் தான் அரசுப் பள்ளி மாணவர்கள், இந்த ஆண்டு 'நீட்' தேர்வில் போதிய எண்ணிக்கையில் வெற்றி பெறவில்லை என்று சொல்லப்படுகிறது.


பயிற்சி இருந்தால் தான், 'நீட்' தேர்வில் வெற்றி பெற முடியுமா?


நிச்சயம் இல்லை. எங்கள் அணுகுமுறை இதில் முற்றிலும் வேறானது. தற்போதைய தமிழக அரசு 'நீட்'டை எதிர்ப்பதற்கும், பயிற்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது முற்றிலும் அரசியல் ரீதியானது. இதைப் பற்றி நான் பேச விரும்பவில்லை. அவர்கள் 'நீட்'டை எதிர்ப்பதற்கு வேறு எண்ணற்ற காரணங்கள் உண்டு.
'நீட்' தேர்வைக் கொண்டு வந்தது மத்திய அரசு அல்ல; உச்ச நீதிமன்றம். அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று தகுதி, மற்றொன்று வெளிப்படைத் தன்மை. இதைத் தமிழகம் உணர்ந்து, 'நீட்' விஷயத்தில் மத்திய அரசுடன் ஒத்துழைக்க வேண்டும்.
பயிற்சியைப் பொறுத்தவரை, மத்திய அரசு முற்றிலும் வித்தியாசமான முயற்சியை துவங்கி உள்ளது. 200 கல்வித் தொலைக்காட்சிகளைத் துவங்கு வதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.ஒவ்வொரு மொழியிலும், ஒவ்வொரு பாடத்துக்கும் இது ஆரம்பிக்கப்படும். இலவசமாக அனைத்து மாணவர்களும் பயன் பெறும் வகையில், இந்தக் கல்விப் பயிற்சி அமையும். நாங்கள் கட்டணம் வசூலிக்கப்படும் பயிற்சியை ஏற்கவில்லை.


நீட் தேர்வில், கிராமப்புற மாணவர்களை விட, நகரப் பகுதி மாணவர்களே அதிகம் வெற்றி பெற்றுள்ளனர் என்று கூறப்படுகிறதே?


தரவுகள் அப்படிச் சொல்லவில்லை. இரண்டு தரப்பு மாணவர்களும் வெற்றி பெற்றுள்ளனர். இந்தியாவின் கிராமப்புறங்களில் இருந்து வந்த ஏழை, எளிய மாணவர்கள் கூட, நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். உதாரணமாக, நவோதயா பள்ளிகளில் படித்த மாணவர்களில் பலர், நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று உள்ளனர்.திருவாரூர் மத்தியபல்கலையில், நான்கு பாடப் பிரிவுகளே உள்ளன. கூடுதல் பாடப் பிரிவுகளை உருவாக்க, என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?

நிச்சயம் நடவடிக்கை எடுக்கப் படும். கடந்த சில நாட்களாக, நான் தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். ஐ.ஐ.டி.,யும், மத்திய பல்கலையும் வருங்காலத்தில் மிகப்பெரிய கல்வித் திருக்கோவில்களாக திகழும் என்பது நிச்சயம்.இந்தியாவில் தற்போது, ஆங்கிலம் மற்றும் அயல் மொழிகள் கற்பதற்கான மூன்று பல்கலைகள் மட்டுமே உள்ளன.


இன்று அயல் மொழிகளைப் பயில்வதற்கான ஆர்வம் அதிகரித்துவரும் நிலையில், மத்திய அரசு, கூடுதல் பல்கலை துவக்குமா?


அயல் மொழிகள் பல்கலை, ஹைதராபாதில் உள்ளது. மத்திய அரசு, டிஜிட்டல் பல்கலை துவங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இரண்டு ஆண்டுகளாக, சென்னை ஐ.ஐ.டி., தரவு அறிவியல் துறையில் 'ஆன்லைன்' பட்டப்படிப்பைத் துவங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறது. நான் அதில் பங்குபெற்று, அடிப்படை மற்றும் டிப்ளமா படிப்பை முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினேன்.
தரமான கல்வியை நாங்கள் ஆன்லைனில் வழங்குகிறோம். அதனால், அயல் மொழிகளைக் கற்பதற்கு ஆன்லைன் கல்வி முறையையே நாம் அதிகம் சார்ந்திருக்க வேண்டும். அந்த படிப்புகள் அத்தகையவை. குறைந்த கட்டணத்தில் தரமான அயல்மொழி பயிற்சிகளைப் பெற இதுவே சிறந்த வழி.கொரோனா பெருந்தொற்றுக்குப் பின், மருத்துவ அறிவியல் துறையில் ஆய்வுக்கான தேவை பெருகி வருகிறது.


மத்திய அரசு, இத்தகைய ஆய்வுகளுக்கான நிதி உதவிகளை அதிகரிக்குமா; அமைப்புகளை உருவாக்குமா?


உங்களுடைய சென்னை ஐ.ஐ.டி.,யிலேயே, 'மருத்துவ தரவு அறிவியல் ஆய்வுகள்' நடக்கின்றன. இதுபோன்ற ஆய்வுகள் எதிர்கால வளர்ச்சிக்கானவை. அதனால், புதிய அமைப்புகள் தேவைஇல்லை.பல்துறை சார்ந்த அறிவியல் ஆய்வுகள் இருந்தாலே போதுமானவை. தமிழகம் இத்தகைய ஆய்வுகளில் முன்னிலை வகிக்கும் என்பதில், எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.பாரதியார் மற்றும் வ.உ.சி., ஆகியோர் பயின்ற திருநெல்வேலி ம.தி.தா., ஹிந்து கல்லுாரி மேல்நிலைப் பள்ளியை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதே?


இந்தியா சுதந்திரம் பெற்று, 75 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், தேசிய தலைவர்கள் படித்த பள்ளிகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளுக்கு, மத்திய அரசு ஆதரவு தெரிவிக்கிறது. தமிழக அரசுடனும், பள்ளி நிர்வாகத்துடனும் கலந்தாலோசித்து, நல்ல முடிவு எட்டப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

- நமது நிருபர் --

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
23-செப்-202205:30:14 IST Report Abuse
Kasimani Baskaran ஆனால் திராவிட மதத்தினர் கற்பதையே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பல்லாயிரம் பள்ளிகள் இடியும் நிலையில் உள்ளது. அவற்றையெல்லாம் சரி செய்யாமல் கடலில் பேனாவும், ஊருக்குள்ளே பெரியார் சிலையும், பூங்காக்களும் அமைத்தால் போதும் என்று நினைக்கிறார்கள். சமீபமாக அண்ணாவுக்கு டோட்டலாக நாமம் போட்டு விட்டார்கள் போல தெரிகிறது.
Rate this:
Cancel
22-செப்-202222:08:01 IST Report Abuse
சிந்தனை அருமை. உண்மை.
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
22-செப்-202221:36:50 IST Report Abuse
sankar உங்க வடக்கத்திய சமூகம் மறுக்கிறதே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X