அ.தி.மு.க., இடைக்கால பொதுச் செயலராக, பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு, பொதுக் குழு உறுப்பினர்கள் அளித்த ஆதரவு கடிதங்களை, அவரது தரப்பினர் நேற்று தேர்தல்கமிஷனில் ஒப்படைத்தனர். இடைக்கால பொதுச் செயலராக உள்ள பழனிசாமி, நிரந்தர பொதுச் செயலராகும் முயற்சிகளில் தீவிரம் காட்டி வருகிறார்.அ.தி.மு.க., பொதுக்குழு விவகாரம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, இடைக்கால பொதுச் செயலர் பதவியை பழனிசாமி தக்க வைத்துள்ளார். தீர்ப்பு வெளியான பின், சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகம் சென்றார்.அனைத்து மாவட்டங்களிலும், அ.தி.மு.க., சார்பில் பொதுக்கூட்டம் அறிவித்தார்; சென்னை பொதுக் கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.
கண்டன ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வை கண்டித்து, அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்து, வெற்றிகரமாக நடத்தினார்; செங்கல்பட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்திலும் அவர் பங்கேற்றார். அ.தி.மு.க., அலுவலகசாவி தொடர்பான வழக்கிலும், பழனிசாமி தரப்புக்கு சாதகமாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதால், கட்சி அலுவலகமும் அவரது கைக்கு வந்துள்ளது.எனினும், பன்னீர்செல்வம் தரப்பின் மேல் முறையீடு, தன் ஆதரவாளர்களை சுற்றியடிக்கும் 'ரெய்டு'கள், வரிசை கட்டி நிற்கும் வழக்குகள் ஆகியவை பழனிசாமிக்கு குடைச்சல்களாக உள்ளன.
அனைத்துக்கும் மேலாக, மத்தியில் ஆட்சி யில் உள்ள பா.ஜ.,வின் ஆதரவு அவருக்கு உள்ளதா, இல்லையா என்பதும் புதிராக இருக்கிறது.இதை உறுதி செய்வதற்காக பழனிசாமி, 20ம் தேதி டில்லி சென்று, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். ஆனால், இந்த சந்திப்பு, பழனிசாமிக்கு போதிய திருப்தியை தரவில்லை என்றே கூறப்படுகிறது. எனினும், கட்சியை முழுமையாக தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர, அவர் திட்டமிட்டுள்ளார்.
அதற்காக, கிடைக்கும் வாய்ப்புகளில் ஒன்றைக் கூட தவறவிடக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளார். தனக்கான அடுத்த சோதனைக் களமாக, தேர்தல் கமிஷன் இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்.இதையடுத்து, அங்கு தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் பணிகளை பழனிசாமி முடுக்கி விட்டுள்ளார். டில்லி பயணத்தில், அவருடன் வந்த முன்னாள் அமைச்சரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சண்முகத்திடம் அந்த பொறுப்பை ஒப்படைத்து, பழனிசாமி தமிழகம் திரும்பினார்.தேர்தல் கமிஷன் தொடர்பான விவகாரத்தை கவனித்து வரும் வழக்கறிஞர்கள் குழுவுடன், தீவிர ஆலோசனை நடத்திய சண்முகம், அவர்கள் அறிவுறுத்தலின்படி பொதுக்குழு உறுப்பினர்களிடம் இருந்து, ஆதரவு கடிதங்களை வாங்கி வந்திருந்தார்.
பொதுக்குழு உறுப்பினர்கள் 2,000க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்ட ஆதரவு கடிதங்கள், தலைமை தேர்தல் கமிஷனில் நேற்று ஒப்படைக்கப்பட்டன. அவற்றில் கூறப்பட்டு உள்ளதாவது:அ.தி.மு.க.,வின் பொதுக்குழு உறுப்பினர்களாகிய நாங்கள், கட்சிக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்பதில்உறுதியாக இருந்தோம்.அதற்காக பொதுக்குழுவை கூட்ட, நாங்கள் தான் கோரிக்கை வைத்தோம். இதன்படி தலைமையை தேர்வு செய்வதற்காக, பொதுக்குழுவை நடத்தி முடித்து விட்டோம்.
இதில், இடைக்கால பொதுச் செயலராக பழனிசாமியை தேர்வு செய்துள்ளோம். எங்கள் கட்சிக்கு இடைக்கால பொதுச் செயலர் பதவி தேவை என்ற அடிப்படையில், அவருக்குத் தான் எங்களது ஆதரவு. இந்த முடிவை நாங்கள் சுய விருப்பத்துடனும், முழு சம்மதத்துடனும் தான் எடுத்தோம்.இவ்வாறு கடிதங்களில் கூறப்பட்டுள்ளது.
கூடுதல் பலம்
இதன் வாயிலாக பன்னீர்செல்வம், சசிகலா தொடர்ந்துள்ள வழக்குகள், நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது, பழனிசாமிக்காக பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு அளித்துள்ள ஆதரவு கடிதங்கள் கூடுதல் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த வழக்குகள் மற்றும் தேர்தல் கமிஷன் பணிகள் முடிந்ததும், மீண்டும் பொதுக்குழுவை கூட்டி, அ.தி.மு.க., நிரந்தர பொதுச் செயலர் நாற்காலியில் அமர, பழனிசாமி தரப்பு தீவிரம் காட்டி வருகிறது.
'கிளிப்பிள்ளை பன்னீர்செல்வம்'
டில்லியில், முன்னாள் அமைச்சர் சண்முகம் கூறியதாவது:'பொதுக்குழு செல்லும்; அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லும்' என, சென்னை ஐகோர்ட் பெஞ்ச் தீர்ப்பளித்துள்ளதை அடுத்து, அத்தீர்ப்பின் நகல் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதங்களை, தேர்தல் ஆணையத்தில் வழங்கினோம்.
தனக்கு எவ்வளவு பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது என்பதை பன்னீர்செல்வம் கூற வேண்டும். அதை விட்டுவிட்டு, 'நான்தான் ஒருங்கிணைப்பாளர்' என்று கிளிப்பிள்ளை போல அவர் திரும்ப திரும்ப கூறுவது தவறு.
தற்போது நாங்கள் அளித்துள்ள ஆவணங்கள், கடிதங்கள் அடிப்படையில் உரிய பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக, அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். தேர்தல் ஆணையம் விரைவில் தன் முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது டில்லி நிருபர் -