நாகர்கோவில் : ''கல்குவாரி விஷயத்தில் 'தில்' இருந்தால் என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா'' என, முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் சவால் விடுத்துள்ளார்.
கனிமவள கடத்தல் ஒரு வரலாறு, அதில் மனோ தங்கராஜ் பெயர் நிச்சயமாக இடம் பெறும் என பொன் ராதாகிருஷ்ணன் கூறியிருந்தார். இதுபற்றி மனோ தங்கராஜ் கூறியதாவது:
குமரி மாவட்டத்தில் விதிகளுக்கு புறம்பாக எந்த குவாரிகளுக்கும் அனுமதி வழங்கவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் இங்கிருந்த 39 குவாரிகள் ஆறாக குறைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்துக்குள் மட்டுமே பாஸ் வழங்கப்படுகிறது. இந்த உண்மையை ஏன் பொன் ராதாகிருஷ்ணன் மறைக்கிறார். அவருக்கு 'தில்' இருந்தால் ஒரே மேடையில் பேசுவதற்கோ, ஒரே இடத்தில் செய்தியாளர்களை சந்திப்பதற்கோ தயாரா
குமரி மாவட்டத்தில் ரோடு மற்றும் கட்டுமான பணிக்கு கல், மண் வேண்டாம் என்று பொன் ராதாகிருஷ்ணன் சொன்னால் முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்ல தயாராக உள்ளோம். அவர் அமைச்சராக இருந்த காலத்தில் செய்யாமல் விட்டதை இன்று நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.
கன்னியாகுமரி- திருவனந்தபுரம் நான்கு வழி சாலை திட்டத்துக்கு மறுமதிப்பீடு எடுக்க செய்துள்ளோம். காகிதம் இல்லாத சட்டசபை போல அரசு அலுவலகங்களில் காகிதம் இல்லாத இ-ஆபீஸ் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் ஒரு மாவட்டத்துக்கு 35 டன் காகிதம் லாபப்படும். இது சுற்றுச்சூழலை பாதுகாப்பதோடு, பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும், என்றார்.