செல்லுமிடங்களில் வழியில் ஏதாவது சிறிய வாய்க்கால், ஆறு, குளம் என தண்ணீரை பார்த்தாலே போதும். நம் கால்கள் தானாக அந்த இடத்தை நோக்கித் திரும்பும். ஆர்ப்பரித்துக் கொட்டும் நீர்வீழ்ச்சிகளின் அழகைப் பார்த்தால் பிரமிப்பின் உச்சத்துக்கே செல்வோம். அழகிய மலைகளும், அடர்ந்த காடுகளும் படைசூழ இயற்கை அழகுடன் உள்ள நீர்வீழ்ச்சிகள் மனதை வெகுவாக ஈர்க்கக்கூடியவை. இதுபோன்று இந்தியாவில் செல்ல வேண்டிய சில நீர்வீழ்ச்சிகளை பார்க்கலாம்...
ஜோக் நீர்வீழ்ச்சி, கர்நாடகா
![]()
|
கர்நாடகாவில் ஷராவதி ஆற்றின் மீது உள்ள ஜோக் நீர்வீழ்ச்சி இந்தியாவின் உயரமான நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகும். அடர்ந்த பசுமையான காடுகளால் சூழப்பட்ட இந்த நீர்வீழ்ச்சியில் 829 அடியில் இருந்து தண்ணீர் விழுகிறது. பசுமையான பள்ளத்தாக்குகளின் மீதிருந்து கொட்டும் ஆர்ப்பாட்டமான அழகால் இயற்கை ஆர்வலர்களுக்கு விருந்து படைக்கிறது இந்த நீர்வீழ்ச்சி.
அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி, கேரளா
![]() Advertisement
|
இது கேரளாவின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சியாகும். சாலக்குடி ஆற்றில் இருந்து உருவான அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில், 82 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் கொட்டுகிறது. இங்கு எப்போதும் தண்ணீர் இருந்து கொண்டே இருப்பது சிறப்பம்சமாகும். இயற்கை எழிலுடன் கூடிய இந்த அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி 'இந்தியாவின் நயாகரா' என அழைக்கப்படுகிறது. அரிய வகை உயிரினங்கள் மற்றும் தாவரங்களை இங்கு பார்க்கலாம். கொட்டும் அருவி, அழகிய நதிக்கரையில் விழும் சாரல் என பார்ப்பவர்களை கவர்ந்திழுப்பதால், இங்கு அதிகளவில் பட 'சூட்டிங்'கள் நடப்பது குறிப்பிடத்தக்கது.
நொகாலிகாய் நீர்வீழ்ச்சி, மேகாலயா
![]()
|
மேகாலயாவின், சிரபுஞ்சியில் அமைந்துள்ள நொகாலிகாய் நீர்வீழ்ச்சி 1,100 அடி உயரமுள்ளது. இது இந்தியாவின் ஐந்தாவது உயரமான நீர்வீழ்ச்சியாகும். பச்சைப்பசேலென அடர்ந்த காடுகளால் சூழப்பட்டு பாறைகளின் மீது தண்ணீர் விழுவது பார்ப்போரை ஒருகணம் மூச்சடைக்க வைக்கும்.
குற்றாலம் அருவி, தமிழகம்
![]()
|
தமிழகத்திலுள்ள முக்கிய நீர்வீழ்ச்சிகளில் குற்றாலம் அருவி ஒன்றாகும். மேற்குத் தொடர்ச்சி மலையின் மீது அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி, தண்ணீரில் உள்ள மூலிகைகளின் மருத்துவத்தன்மை காரணமாக, 'மருத்துவ ஸ்பா' என அழைக்கப்படுகிறது.
துத்சாகர் நீர்வீழ்ச்சி, கோவா
![]()
|
கோவாவில் உள்ள மண்டோவி ஆற்றில் இருந்து வரும் துத்சாகர் நீர்வீழ்ச்சி இந்தியாவின் உயரமான, அழகான நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகும். மேற்குத் தொடர்ச்சி மலையில் கம்பீரமாக 1, 017 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் கொட்டுவது கண்கொள்ளா காட்சியாகும். அதிக உயரத்தில் இருந்து தண்ணீர் விழும்போது உருவாகும் மாயை போன்ற அழகிய காட்சியால் 'பாற்கடல்' என்பதை குறிப்பிடும் வகையில் துத்சாகர் என பெயர் பெற்றது. இதன் கம்பீரமான அழகை ரசிக்க ஜூலை முதல் அக்டோபர் வரை ஏற்ற காலகட்டமாகும்.