நாகப்பட்டினம்:நாகையில், 'சுனாமி'யின் கோரத்தாண்டவத்தால் உறவுகளை இழந்து, காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு, பட்டதாரியாகி, தற்போது, இரு குழந்தைகளுக்கு தாயாக உள்ள பெண்ணை, உணவுத்துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன், நேற்று திடீரென சந்தித்து பேசினார்.
அப்பெண், 'ஏம்ப்பா இத்தனை வருஷமா என்னை பார்க்க வரவில்லை' என, அவரது கைகளை இறுகப் பற்றிக் கொண்ட நிகழ்வு, அங்கிருந்தோர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. நாகை மாவட்டத்தில் கோரத்தாண்டவம் ஆடிய சுனாமியின் கோரப்பசியில், நுாற்றுக்கணக்கான குழந்தைகள் ஆதரவற்றோராக மாறினர்.
கடந்த 2004ல் சுனாமி தாக்குதலின் இரண்டாம் நாளில், கீச்சாங்குப்பம் கடலோரத்தில் அழுகுரல் கேட்ட மீனவர்கள், 2 வயது குழந்தையை மீட்டு, அப்போது கலெக்டராக இருந்த ராதாகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர்.
பராமரிப்பு
அதேபோல், வேளாங்கண்ணியில் மீட்கப்பட்ட இரண்டரை வயது குழந்தையையும் கலெக்டரிடம் ஒப்படைத்தனர். இவ்விரு குழந்தைகளையும் அன்னை சத்யா ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் தங்கவைத்து பராமரிக்க, கலெக்டராக இருந்த ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார்.வேளாங்கண்ணியில் மீட்கப்பட்ட குழந்தைக்கு, 'சவுமியா' என்றும், கீச்சாங்குப்பத்தில் மீட்கப்பட்ட குழந்தைக்கு, 'மீனா' என்றும் பெயர் சூட்டினார்.
இரு குழந்தைகளையும் தன் குழந்தைகளாக ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி கிருத்திகா வளர்த்து வந்தாலும், காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த, 150 குழந்தைகள் மீதும் தனி கவனம் செலுத்தி வந்தனர்.தங்கள் குழந்தைகளாகவே பாவித்து, பெற்றோர்களை போல் கவனித்துக் கொண்டதால், ராதாகிருஷ்ணனை 'அப்பா' என்றும், அவரது மனைவி கிருத்திகாவை 'அம்மா' என்றும் குழந்தைகள் அழைத்து வந்தனர்.
காப்பகத்தில் இருந்த குழந்தைகள் வளர்ந்து, திருமணமாகி சென்று விட்டனர். ராதாகிருஷ்ணன் முதன்மை செயலரான பிறகு நாகைக்கு வரும் போதெல்லாம் சவுமியாவையும், மீனாவையும் பார்த்துச் செல்வது, திருமணமாகி பல்வேறு இடங்களில் வசிக்கும் காப்பகத்தில் வளர்ந்தவர்களிடம் ஒருவித ஏக்கத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கொட்டாய்மேடு என்ற மீனவ கிராமத்தில் சுனாமியால் பெற்றோரை இழந்து, அன்னை சத்யா ஆதரவற்ற காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு, தற்போது வேளாங்கண்ணி அடுத்த செருதுார் கிராமத்தில் திருமணமாகி இரண்டு குழந்தைகளுடன் வசிக்கும் தமிழரசி, 32, வீட்டிற்கு, நேற்று ராதாகிருஷ்ணன், கலெக்டர் அருண் தம்புராஜ் உடன் சென்றார்.
மலரும் நினைவுகள்
இதையறிந்த தமிழரசி, தன் கணவர் விஜயபாலன், 35, என்பவருடன் வீட்டு வாசலிலேயே காத்திருந்தார். காரில் இருந்து ராதாகிருஷ்ணன் இறங்கியதும், சிறு குழந்தையைப் போல் தமிழரசி ஓடிச்சென்று, ராதாகிருஷ்ணனை இறுகப் பிடித்துக் கொண்டார்.'ஏம்ப்பா இத்தனை வருஷமா என்னை பார்க்க வரவில்லை...' என, உரிமையோடு கேள்வி கேட்டபடியே வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்.
ராதாகிருஷ்ணன் வாங்கி வந்த பழங்களை, ஆசையோடு தமிழரசி வாங்கிக் கொண்டார். இருவரும் நீண்ட நேரம் பழைய நினைவுகளை அசை போட்டதை, கலெக்டர் அருண் தம்புராஜ், டி.ஆர்.ஓ., ஷகிலா அமைதியாக நெகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.பின், காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு, தற்போது மலர்விழி என்பவரின் பராமரிப்பில் தங்கியுள்ள மீனா, சவுமியா, தரங்கம்பாடி கிராமத்தில் வசிக்கும் சாதனா ஆகியோரை சந்தித்துப் பேசினார்.அவர்களுடனும் சிறிது நேரத்தை செலவிட்டு, மலரும் நினைவுகளுடன் கனத்த இதயத்துடன் ராதாகிருஷ்ணன் புறப்பட்டுச் சென்றார்.
Advertisement