சென்னை:தமிழகத்தில், ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு ஊர்வலத்துக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, விழுப்புரம், ஸ்ரீவில்லிபுத்துார் உள்ளிட்ட 50 இடங்களில், ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரி, உள்துறை மற்றும் டி.ஜி.பி.,யிடம் மனு அளிக்கப்பட்டதாகவும், எந்த முடிவும் எடுக்காததால், அனுமதி அளிக்கும்படி அரசுக்கு உத்தரவிடக் கோரியும், சென்னையை சேர்ந்த சுப்ரமணியன் உள்ளிட்ட, 50 இடங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
மனுக்களில், 'மற்ற மாநிலங்களில், ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இங்கு மட்டும் அனுமதி வழங்கப்படுவது இல்லை. 'ஊர்வலத்தை ஒழுங்குபடுத்தவே போலீசுக்கு அதிகாரம் உள்ளது. அனுமதி மறுக்க அதிகாரம் இல்லை' என்று கூறப்பட்டது. இம்மனுக்கள், நீதிபதி இளந்திரையன் முன், விசாரணைக்கு வந்தன. போலீஸ் தரப்பில், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி, ''ஊர்வலபாதையை தெரிவிக்கவில்லை. சட்ட ஒழுங்கு, மத நல்லிணக்கம் காக்கப்பட வேண்டும். விதிகளை பின்பற்றுவதாக உறுதி அளித்தால், மனுக்கள் பரிசீலிக்கப்படும்,'' என்றார்.
மனுதாரர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர்கள் ஜி.ராஜகோபால், என்.எல்.ராஜா, எஸ்.பிரபாகரன், வழக்கறிஞர் ரபுமனோகர் ஆஜராகி, 'ஊர்வலத்தை, போலீசார் ஒழுங்குபடுத்தலாம்; அனுமதி மறுக்க முடியாது. 'பொதுக்கூட்டம் நடத்தவும், ஊர்வலம் செல்லவும் உரிமை உள்ளது. புதுச்சேரியில், ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கவே, ஞாயிறு அன்று ஊர்வலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 'ஆர்.எஸ்.எஸ்., தடை செய்யப்பட்ட இயக்கம்அல்ல. சட்டத்தை மதிப்பவர்கள். நீதிமன்றத்தின் நிபந்தனைகளை ஏற்கிறோம்' என்றனர்.
இரு தரப்பு வாதங்களுக்கு பின், ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு ஊர்வலத்துக்கு, வரும், 28க்குள் நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கும்படி உத்தரவிடுவதாக, நீதிபதி இளந்திரையன் தெரிவித்தார். இது குறித்து, விரிவான உத்தரவை பிறப்பிப்பதாகவும் நீதிபதி தெரிவித்தார்.