சென்னை:'உங்கள் துறையில் முதல்வர்' என்ற திட்டத்தின் கீழ், டி.ஜி.பி., அலுவலகத்தில் போலீசாரிடம், முதல்வர் ஸ்டாலின் மனுக்கள் பெற்றார்.சென்னையில் உள்ள காவல் துறையின் தலைமை இயக்குனரகமான, டி.ஜி.பி., அலுவலகத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் வந்தார்.
அங்கு, 'உங்கள் துறையில் முதல்வர்' என்ற திட்டத்தின் கீழ், 10 போலீசாரிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். முன்னதாக, சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அடையாளமாக, டி.ஜி.பி., அலுவலக வளாகத்தின் முகப்பில், மகிழம் பூ மரக்கன்று நட்டார். முதல்வருக்கு போலீசார் அணிவகுப்பு மரியாதை அளித்தனர்.
நிகழ்ச்சியில் உள்துறை செயலர் பணீந்திர ரெட்டி, டி.ஜி.பி., சைலேந்திரபாபு, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். டி.ஜி.பி., கூறியதாவது:டி.ஜி.பி., அலுவலக கட்டடம் குறித்து, முதல்வர் கேட்டார். 'இந்த கட்டடத்தை இடித்து, போலீஸ் நகரம் உருவாக்கப்படும்' என, 1993ல் முதல்வராக இருந்த ஜெயலலிதா அறிவித்தார்.
ஆனால், பாரம்பரியமிக்க பழமையான கட்டடம் என்பதால், 1998ல் முதல்வராக இருந்த கருணாநிதி, டி.ஜி.பி., அலுவலக கட்டடத்தை புதுப்பித்துக் கொடுத்தார். கட்டடம் இப்போது வரை கம்பீரமாக உள்ளது என்பதை முதல்வரிடம் தெரிவித்தோம்.'மாவட்ட வாரியாக போலீசாரிடம், எத்தனை கோரிக்கை மனுக்கள் வந்துள்ளன; அவற்றிக்கு தீர்வு காணப்பட்டு விட்டதா?' என, முதல்வர் கேட்டார்.
எங்கள் அதிகார வரம்பிற்கு உட்பட்ட மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளன. ஊதிய முரண்பாடு, தண்டனைகள் குறைப்பு உள்ளிட்ட மனுக்களுக்கு அரசு தான் தீர்வு காண வேண்டும் என்று கூறினோம்.'நிச்சயமாக அனைத்து மனுக்கள் மீதும் தீர்வு காணப்படும்' என, முதல்வர் உறுதி அளித்தார். இதன் வாயிலாக, 800க்கும் மேற்பட்ட போலீசார் பயன் பெறுவர்.இவ்வாறு சைலேந்திரபாபு கூறினார்.