சென்னை:முன்னாள் அமைச்சர் வேலுமணி தொடர்பான, 'டெண்டர்' முறைகேடு வழக்குகளின் இறுதி விசாரணையை, அக்டோபர், 12க்கு, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது, சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில், பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக, முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராக, லஞ்ச ஒழிப்புத் துறையில், அறப்போர் இயக்கம் புகார் அளித்தது. பின், உயர் நீதிமன்றத்தில், அறப்போர் இயக்கம் மற்றும் தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி மனுக்கள் தாக்கல் செய்தனர்.
அறப்போர் இயக்கம், ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுக்கள்; லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி, முன்னாள் அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்த மனுக்கள், நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், டீக்காராமன் அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தன.அறப்போர் இயக்கம் சார்பில் வழக்கறிஞர் சுரேஷ்; லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா; முன்னாள் அமைச்சர் வேலுமணி சார்பில், மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன் ஆகியோர் ஆஜராகினர்.
கடந்த, 2018ல் டெண்டர் முறைகேடு தொடர்பாக புகார் அளித்தது முதல், தற்போது இந்த அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது வரையிலான விபரங்களை, வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, வேலுமணி தொடர்பான வழக்குகளின் இறுதி விசாரணையை, அக்டோபர் 12க்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர். அதுவரை, ஏற்கனவே இறுதி அறிக்கை தாக்கல் செய்ய விதிக்கப்பட்ட தடை தொடர்வதாக, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.