கோவை:மத்திய பிரதேசத்தில் நடந்த தேசிய அளவிலான தடகள போட்டியில், நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளி மாணவன், தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். 'அத்லடிக்ஸ் பெடரேஷன் ஆப் இந்தியா' சார்பில் 17வது, 'தேசிய யூத் அத்லெடிக் சாம்பியன்ஷிப்'க்கான தடகள போட்டி, மத்திய பிரதேசம் போபால் பகுதியில் உள்ள டி.டி., நகர் ஸ்டேடியத்தில் நடந்தது.இப்போட்டியில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து, 500க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இதில், 'டெக்கத்லான்' பிரிவில், நேஷனல் மாடல் பள்ளியில், 12ம் வகுப்பு படிக்கும் அரவிந்த் பங்கேற்றார். இரண்டு நாட்கள் நடந்த போட்டியின் முதல் நாளில் அரவிந்த், 2877 புள்ளிகள் இரண்டாம் நாளில் 2515 புள்ளிகள் என மொத்தம், 5392 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்றார். இவருக்கு நேஷனல் மாடல் பள்ளி சார்பில், நேற்று பாராட்டு விழா நடந்தது. இதுபோன்று சாதனை புரியும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, பதக்கம் வென்ற மாணவருக்கு பள்ளி சார்பில், ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. 12ம் வகுப்புக்கான பள்ளி கட்டணத்தையும் முழுமையாக ரத்து செய்துள்ளனர்.
இதுகுறித்து மாணவர் அரவிந்த் கூறுகையில், "கடந்த ஐந்து வருடங்களாக தடகளத்தில் ஈடுபட்டு வருகிறேன். எனது பள்ளி மற்றும் ஆசிரியர்கள் அளித்த உத்வேகமும், உதவியுமே என் வெற்றிக்கு காரணம். விடாமுயற்சியுடன் தினமும் பயிற்சி மேற்கொண்டதின் பலனாகத்தான், நான் இந்த தங்க பதக்கத்தை பார்க்கிறேன்," என்றார். நிகழ்ச்சியில் பள்ளி செயலாளர் உமா, மாவட்ட விளையாட்டு அலுவலர் ரவிச்சந்திரன், பள்ளி முதல்வர் கீதா, உடற்கல்வித்துறை இயக்குனர் விவேகானந்தன், தடகள பயிற்சியாளர் பிரகாஷ் மற்றும் மாணவரின் பெற்றோர் பங்கேற்றனர்.