உடுமலை:அமராவதி ஆற்றங்கரையில், நுாற்றாண்டு பழமை வாய்ந்த, கல் மண்டபத்தை பாதுகாக்க, தொல்லியல் துறை வாயிலாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வரலாற்று ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை அருகே கொழுமத்தில், அமராவதி ஆற்றங்கரையில், பழங்கால கல் மண்டபம் உள்ளது. பல நுாற்றாண்டுக்கு முன் கட்டப்பட்ட, இந்த கல் மண்டபத்தின் தொன்மை மற்றும் சிறப்புகள் குறித்து உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் ஆய்வு செய்தனர்.அவர்கள் கூறியதாவது: சங்க இலக்கியத்திலேயே அமராவதி ஆற்றின் சிறப்புகள் ஆன்பொருநை என்ற பெயரில், பாடப்பட்டுள்ளது. இந்த அமராவதி நதியின் நாகரிகம் கரை வழி நாகரிகம் என்று சொல்லப்படும் அளவிற்கு மிகவும் பேரும் புகழும் பெற்றது.கரைவழி நாடுகளில், ராஜராஜவளநாடு, ஒன்பது கரை நாடு, கரைவழிநாட்டு குழுமூர், கரை வழிநாட்டு கடத்துார் என பல்வேறு பெயர்களில், இந்த இடங்கள் பழம்பெரும் பாடல்களால் அழைக்கப்படுகின்றது. இந்த ஆன்பொருநை, தற்போது மிகவும் குறுகியுள்ளதாகவும், இதன் அகலம் பெருமளவில் இருந்ததாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.ராஜராஜ வளநாடு என இப்பகுதியை குறிக்கும் வகையில், அமராவதி ஆற்றின் கரையில் நெல், முப்போகம் விளைந்துள்ளது. மிகவும் அரிதான அன்னமழகி உட்பட 25க்கும் மேற்பட்ட நெல் வகைகள் இந்த கரை வழிநாட்டில், விளைந்ததாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். சங்க இலக்கியப் பாடல்களில், கொழுமம் குறித்தும் அமராவதி நதி குறித்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அகநானூற்றில், 'தெண்நீர் உயர்கரைக் குவைஇய தண்ஆன் பொருநை மணலினும் பலவே,' என அமராவதி ஆற்றை குறித்து பாடப்பட்டுள்ளது.அமராவதி ஆறு, இன்றிருப்பதை விட பல மடங்கு பெரிதாகவே ஓடிக்கொண்டிருந்தது. அதன் கரையை உறுதி செய்யும் வகையிலும், கொழுமத்தில், இந்த கல்மண்டபம் நீண்ட நெடுங்காலமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர்.இந்த கல் மண்டபம், முட்புதர்களால் மூடப்பட்டு அருகில் செல்ல முடியாமல் இருந்தது. தற்போது, வீரசோழீஸ்வரர் கோவில் திருப்பணிக்குழு சார்பில், கோவில் முதல் அமராவதி ஆறு வரைக்கும் பாதைகள் சீரமைக்கப்பட்டு முழுவதுமாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது.கல் மண்டபம் இதுநாள் வரையிலும் வெளியில் முழுமையாக வெளியில் தெரியாமல் இருந்தது. தற்போதுதான் ஒரே கல்லினால் ஆன, இந்த கல்மண்டபம் வரைக்கும் அமராவதி நதி அகலமான பாதையில் ஆழமான நீரோட்டத்தில் பயணித்ததை நமக்கு உணர்த்துகிறது.இந்த மண்டபம் படித்துறையாகவும் மக்கள் பயன்பாட்டில் இருந்துள்ளதை அங்குள்ள சிதிலமடைந்த பழமையான கட்டட படிமங்கள் நமக்கு உணர்த்துகிறது. இவ்வாறு, உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் தெரிவித்தனர்.