கிரைம் ரவுண்ட் அப்: 7வது திருமணம் செய்ய வந்த மோசடி பெண் கைது

Added : செப் 23, 2022 | கருத்துகள் (20) | |
Advertisement
ப.வேலுார் : ஆறாவது திருமணம் முடிந்த, 15 நாட்களுக்குள் ஏழாவது திருமணம் செய்ய வந்த மோசடி மணப்பெண்ணையும், அவருக்கு உடந்தையாக இருந்த மூவரையும் போலீசார் கைது செய்தனர்.நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுார் அருகே கள்ளிபாளையத்தைச் சேர்ந்தவர் தனபால், 35. இவருக்கும், மதுரையைச் சேர்ந்த சந்தியா, 26, என்பவருக்கும், கடந்த, 7ல் திருமணம் நடந்தது. திருமணத்தை, மதுரையைச் சேர்ந்த பாலமுருகன், 45,
crime, police, arrest

ப.வேலுார் : ஆறாவது திருமணம் முடிந்த, 15 நாட்களுக்குள் ஏழாவது திருமணம் செய்ய வந்த மோசடி மணப்பெண்ணையும், அவருக்கு உடந்தையாக இருந்த மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுார் அருகே கள்ளிபாளையத்தைச் சேர்ந்தவர் தனபால், 35. இவருக்கும், மதுரையைச் சேர்ந்த சந்தியா, 26, என்பவருக்கும், கடந்த, 7ல் திருமணம் நடந்தது. திருமணத்தை, மதுரையைச் சேர்ந்த பாலமுருகன், 45, என்ற புரோக்கர் ஏற்பாடு செய்திருந்தார். திருமணத்தில் பெண் வீட்டார் சார்பில், பெண்ணின் அக்கா, மாமா ஆகிய இருவர் மட்டும் வந்துள்ளனர். அவர்களும், புரோக்கரும் திருமணம் முடிந்த கையோடு, 1.50 லட்சம் ரூபாய் கமிஷன் வாங்கிச்சென்றனர். தனபால், சந்தியாவுடன் புது வாழ்க்கையை துவங்கினார்.
இந்நிலையில், 9ம் தேதி காலை, தனபால் எழுந்து பார்த்த போது, சந்தியாவை காணவில்லை. அவரது மொபைல்போன், 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. அவரது உறவினர்கள், புரோக்கர் பாலமுருகன் மொபைல் போன்களும், 'ஆப்' செய்யப்பட்டிருந்தன. வீட்டில் பீரோவில் வைத்திருந்த கல்யாண பட்டுப்புடவை, நகைகள், தான் கொண்டு வந்த துணிகளை எடுத்துக் கொண்டு சந்தியா மாயமானது தெரிய வந்தது. இதுகுறித்து, தனபால் போலீசில் புகார் கொடுத்திருந்தார்.
இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு திருமணத்துக்கு பெண் பார்த்தபோது, மதுரையைச் சேர்ந்த தனலட்சுமி, 45, என்ற புரோக்கர் மூலம், சந்தியாவின் போட்டோ வந்துள்ளது. அதைப்பார்த்த தனபால், தன்னை ஏமாற்றியவர்களை வளைக்க திட்டமிட்டார். இதையடுத்து, புரோக்கர் தனலட்சுமியிடம் உறவினர்கள் மூலம், வேறு நபருக்கு திருமணம் செய்ய பேசி உள்ளார். போட்டோக்களை மட்டும் பார்த்து, போனிலேயே திருமணம் நிச்சயம் செய்து, நேற்று காலை, திருச்செங்கோட்டில் திருமணம் நடப்பதாக தெரிவிக்கப்பட்டது.
மணப்பெண் சந்தியா, புரோக்கர் தனலட்சுமி, அவரது உறவினர் அய்யப்பன், 37, ஆகியோர் காரில் திருச்செங்கோடு வந்தனர். காரை ஜெயவேல், 38, என்பவர் ஓட்டி வந்துள்ளார். அனைவரும் மதுரையைச் சேர்ந்தவர்கள்.அங்கு வந்த போது, கணவர் தனபால், அவரது உறவினர்கள் இருப்பதைக் கண்டு சந்தியா அதிர்ச்சி அடைந்தார். சந்தியாவையும், அவருடன் வந்தவர்களையும் பிடித்து, பரமத்தி வேலுார் போலீசில் தனபால் உறவினர்கள் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சந்தியாவுக்கு தனபாலுடன் சேர்த்து, இதுவரை ஆறு பேருடன் திருமணம் நடந்தது தெரிய வந்தது.
சந்தியா, அவரது கூட்டாளிகள், யாரையாவது திருமணம் செய்து, இரண்டு நாட்கள் மட்டும் குடும்பம் நடத்திவிட்டு, கிடைத்ததையும், புரோக்கர் கமிஷனையும் பெற்று கம்பி நீட்டுவதை தொழிலாக கொண்டவர்கள் என்பது விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து, சந்தியா, புரோக்கர் தனலட்சுமி, அய்யப்பன், ஜெயவேல் ஆகிய நால்வரையும் போலீசார் கைது செய்தனர். ஆறாவது திருமணம் செய்த, 15 நாட்களுக்குள், ஏழாவது திருமணம் செய்து மோசடியில் ஈடுபட வந்த பெண்ணின் 'துணிச்சலை' பார்த்து போலீசாரே அதிர்ந்து போயினர்.


பெண்ணுக்கு பாலியல் தொல்லை: தாசில்தார், புரோக்கருக்கு தர்ம அடி

பெரம்பலுார் : பெரம்பலுார் மாவட்டம், செங்குணம் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண், தனக்கு சொந்தமான இடத்துக்கு பெயர் மாற்றம் செய்து பட்டா வழங்கக் கோரி, பெரம்பலுார் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தார். தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் கிருஷ்ணராஜுக்கு புரோக்கராக செயல்படும் இரூர் கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவர், இளம் பெண்ணை அணுகி, பட்டாவில் பெயர் மாறுதல் செய்ய தாசில்தாரிடம் பரிந்துரை செய்வதாக கூறினார்.அதற்கு, 20ம் தேதி தாசில்தார் நேரில் விசாரணை செய்ய வேண்டும் என, கூறியுள்ளார், அதற்காக, அவரது முகாம் அலுவலகத்திற்கு வர வேண்டும்எனவும் கூறியுள்ளார்.
இதை நம்பிய இளம் பெண், பெரம்பலுார் தாசில்தார் கிருஷ்ணராஜின் முகாம் அலுவலகத்திற்கு சென்றார். அங்கு சென்ற இளம் பெண்ணுக்கு, தாசில்தார் கிருஷ்ணராஜ் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. அதிர்ச்சியடைந்த அப்பெண், தன் உறவினர்களுக்கு மொபைல் போனில் தகவல் கொடுத்தார். அங்கு வந்த பெண்ணின் உறவினர்கள், தாசில்தார் கிருஷ்ணராஜ் மற்றும் புரோக்கர் குமார் ஆகியோரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர்.
தகவலறிந்து வந்த பெரம்பலுார் போலீசார் இருவரையும் மீட்டுள்ளனர். இது குறித்து, உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.இத்தகவல், பெரம்பலுார் மாவட்டத்தில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கிருஷ்ணராஜ் மீது துறை ரீதியாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.


பேராசிரியர் வீட்டில் 31 பவுன் நகை கொள்ளை

சின்னாளபட்டி: திண்டுக்கல் மாவட்டம்அம்பாத்துறை அருகே ராஜீவ் காந்தி நகரில் வசிக்கும் காந்திகிராம பல்கலை வேதியியல் துறை உதவி பேராசிரியர் ராஜாக்கண்ணு 36, வீட்டு கதவை உடைத்து ,31 பவுன் நகைகளை கொள்ளையடித்தவர்களை போலீசார் தேடுகின்றனர்.
உதவி பேராசிரியரான ராஜாக்கண்ணு , மனைவி சியாமளாதேவி, 2 குழந்தைகளுடன் மதுரையில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்றிருந்தார்.நேற்று வீடு திரும்பியபோது வெளிப்புற கதவு திறந்து கிடந்தது. கதவு உடைக்கப்பட்ட நிலையில் பீரோவில் இருந்த 31 பவுன் நகை கொள்ளை போனது தெரிந்தது. ஏ.எஸ்.பி., கபிலன், அம்பாத்துறை இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் விசாரித்தனர்.


பா.ஜ., அலுவலகத்தில் 'கெரசின்' குண்டு வீச்சு

கோவை: கோவை, காந்திபுரம், வி.கே.கே.மேனன் ரோட்டில் உள்ள மாவட்ட பா.ஜ., அலுவலகம் அருகே நேற்று இரவு, 8:30 மணிக்கு, கெரசின் நிரப்பி திரி போடப்பட்ட பாட்டில், மர்ம நபர்களால் கொளுத்தி வீசப்பட்டது. எனினும், பாட்டில் வெடித்துச் சிதறவில்லை. அதை போலீசார் கைப்பற்றினர். தகவல் பரவியதும், போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, பா.ஜ., கட்சியினர் கோஷம் எழுப்பியதால் பதற்றமான சூழல் நிலவியது.
அதே நேரத்தில், ஒப்பணக்கார வீதியில் அமைந்துள்ள, 'மாருதி கலெக் ஷன்ஸ்' என்ற ஜவுளிக்கடை மீதும் கெரசின் நிரப்பி திரி போடப்பட்ட பாட்டில் வீசப்பட்டது. ஆனால், வெடிக்கவில்லை.இரு இடங்களிலும் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் குண்டு வீசியது தெரியவந்துள்ளது. கும்பலை பிடிக்க போலீசார், 'சிசிடிவி' பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். பா.ஜ., அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.


latest tamil newsகள்ளக்காதலியை அடித்து கொன்ற வாலிபர் கைது

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா, உமையாள்பதி கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி தமிழ்மணி, 40. இருவருக்கும், 20 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆகி, இரண்டு மகன்கள் உள்ளனர். குடும்ப தகராறு காரணமாக, தமிழ்மணி தன் கணவன் மற்றும் மகன்களைப் பிரிந்து, மூன்றாண்டுகளாக, கீழவாடியில் உள்ள தாய் வீட்டில் இருந்தார்.
மாதிரிவேளூரில் உள்ள செங்கல் சூளையில் அவர் வேலை செய்தபோது, அங்கு பணியாற்றிய பாலுாரான்படுகையைச் சேர்ந்த செல்வராஜ் மகன் செந்தில், 30, என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதையடுத்து, தமிழ்மணி, செந்திலுடன் பாலுாரான்படுகையில் வசித்து வந்தார்.
இந்நிலையில், ஒருவர் மீது ஒருவருக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக, அடிக்கடி தமிழ்மணி - செந்தில் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் இரவும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த செந்தில் தாக்கியதில், படுகாயம் அடைந்த தமிழ்மணி சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்த கொள்ளிடம் போலீசார், செந்திலை கைது செய்து விசாரிக்கின்றனர்.


மாணவியை 'சில்மிஷம்' செய்தவருக்கு 'கம்பி'

திருச்சி: திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே செவல்பட்டியில், அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. நேற்று முன்தினம், பள்ளி அருகே நின்றிருந்த மஞ்சம்பட்டியைச் சேர்ந்த வெற்றிவேல், 53, அவ்வழியாக சென்ற மாணவியரிடம் சாப்பாடு கேட்டுள்ளார். ஒரு மாணவி, தன் டிபன் பாக்சில் இருந்த சாப்பாட்டை, அவருக்கு கொடுத்துள்ளார். அந்த டிபன் பாக்சை மாணவியிடம் திருப்பிக் கொடுத்த போது, அதில் காதல் கடிதம் மற்றும் சாக்லேட் வைத்து கொடுத்ததை பார்த்து, மாணவி அதிர்ச்சியடைந்தார்.
உடனே, 'உங்கள் பிள்ளைகளிடம் இது போல் கொடுப்பீர்களா?' என்று கேட்ட அந்த மாணவியின் கையை பிடித்து இழுத்த அந்த நபர், பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். மற்ற மாணவியர் உதவியுடன் அவரிடம் இருந்து தப்பிய மாணவி, இது பற்றி பெற்றோரிடம் தெரிவித்து உள்ளார். அவர்கள், மணப்பாறை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, வெற்றிவேலை நேற்று கைது செய்தனர்.


தேசிய நிகழ்வுகள்:


கள்ளக்காதல் விவகாரம்: கணவனை 'வெளுத்த' மனைவி

ஆக்ரா: உ.பி.,யில் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள ஒரு ஹோட்டலில், தன் கணவன் வேறு பெண்ணுடன் இருப்பதாக மனைவிக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து, அப்பெண் அந்த ஹோட்டல் அறைக்குள் அதிரடியாக புகுந்தார். அப்போது, வேறு பெண்ணுடன் உல்லாசமாக இருந்த கணவரை கையும் களவுமாகப் பிடித்த மனைவி, அவர் முகத்தில் சரமாரியாக குத்து விட்டார்; கூட இருந்த அந்த பெண்ணுக்கும் செருப்படி விழுந்தது.
அடி தாங்காத அக்கணவன், 'இனி இப்படி செய்ய மாட்டேன்; என்னை விட்டு விடு' என கெஞ்சியும் அப்பெண் விடவில்லை. 'நீ செய்த இந்த காரியத்துக்கு உனக்கு மன்னிப்பே கிடையாது' எனக் கூறி கணவனையும், அவரது காதலியையும் வெளுத்து வாங்கினார். மொபைல் போன் வீடியோவில் பதிவு செய்யப்பட்ட இந்த காட்சிகள், சமூக வலைதளங்களில் நேற்று வேகமாக பரவின.


ஏ.டி.எம்., இயந்திரத்தை துாக்கிச் சென்ற திருடர்கள்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில், ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள சர்சான்ப் கிராமத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இதற்குள், நேற்று முன்தினம் இரவு நுழைந்த மர்ம நபர்கள், ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து பணத்தை எடுக்க முயன்றுள்ளனர். ஆனால், அது முடியவில்லை.
இதில் கடுப்பான அவர்கள், இயந்திரத்தையே பெயர்த்து எடுத்து துாக்கிச் சென்றுவிட்டனர். இதில், 12.10 லட்சம் ரூபாய் இருந்துள்ளது. இது குறித்து வங்கி நிர்வாகம் அளித்த புகாரின்படி, போலீசார் வழக்குப் பதிந்து, கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.


சோப்பு தண்ணீரை குடித்த கைதிகள் 7 பேர் மருத்துவமனையில் அனுமதி

வதோதரா : குஜராத்தில் உள்ள வதோதரா மத்திய சிறைச் சாலையில், பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஏழு பேர் விசாரணை கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, சிறைக்கு வெளியில் இருந்து உணவு கொண்டு வர அனுமதி இல்லை. ஆனால், மற்ற கைதிகளுக்கு அனுமதி உண்டு. இதையடுத்து, இவர்கள் மற்றவர்களுக்கு வரும் உணவுகளை எடுத்துக் கொள்வதுடன், அவர்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
இதையறிந்த சிறை நிர்வாகம் இந்த ஏழு பேரை மட்டும், தனியாக வேறு இடத்துக்கு மாற்றியது. இதில் ஆத்திரமடைந்த அவர்கள், ஜெயிலரை தாக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பின், தண்ணீரில் சோப்பை கலந்து அதிகளவில் குடித்தனர். இதையடுத்து, அவர்கள் வதோதராவில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஜெயிலரை தாக்கிய சம்பவத்தில், இந்த ஏழு கைதிகள் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர்.


டிக்கெட் வாங்க திரண்ட ரசிகர்கள்: நெரிசலில் சிக்கி பலர் காயம்

ஹைதராபாத்: ஹைதராபாதில் இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடக்கவுள்ள கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் வாங்க ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் நெரிசல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் கீழே தள்ளி முன்னேறிச் சென்றனர். கீழே விழுந்தவர்களை மிதித்தபடி பலர் ஓடினர். இதில் பலர் காயம் அடைந்தனர். ஒரு பெண், மயக்கம் அடைந்தார். அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். இதில், 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். போலீசார் சிலரும் காயம் அடைந்தனர்.


உ.பி.,யில் சுவர் இடிந்து 10 பேர் பரிதாப பலி

எட்டாவா : உத்தர பிரதேசத்தில், நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழைக்கு, பல்வேறு இடங்களில் சுவர் இடிந்து விழுந்து மொத்தம் 10 பேர் பலியாகினர்; 11 பேர் காயமடைந்துள்ளனர்.


உலக நிகழ்வு:


'ஹிஜாப்' எதிர்ப்பு போராட்டத்தில் 31 பேர் பலி

பாரிஸ்: ஈரானில், 'ஹிஜாப்' அணிவதற்கான கட்டுப்பாடுகளை எதிர்த்து பெண்கள் நடத்தி வரும் போராட்டத்தில், 31 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JaiRam - New York,யூ.எஸ்.ஏ
25-செப்-202218:56:24 IST Report Abuse
JaiRam சொரியர் கொள்கை சொரியர் மண் டுமிழன்கள் சாராயம் சினிமா இரண்டிலும் மயங்கி கிடக்கிறான்
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
23-செப்-202219:35:01 IST Report Abuse
Vena Suna ஒரு ஆன் இந்த மாதிரி ஏழு கல்யாணம் பண்ணிக்கினா,எல்லா தொலைக்காட்சிகளும் ஒரு மாதம் காண்பிப்பார்கள்.இப்போ ஏன் சும்மா இருக்கிறார்களா? கழுவில் ஏற்ற வேண்டும்.
Rate this:
Cancel
katharika viyabari - coimbatore,இந்தியா
23-செப்-202215:18:39 IST Report Abuse
katharika viyabari அந்த ஆளு உனக்கு எத்தினாவுது தாரம் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X