திண்டிவனம்-திண்டிவனம் அருகே ஜக்காம்பேட்டையில் 8.39 கோடி ரூபாய் செலவில் கிளைச் சிறை கட்டும் பணி விரைவில் முடிவடைந்து, பயன்பாட்டிற்கு வர உள்ளது.
திண்டிவனம் நேரு வீதியில், தாலுாகா அலுவலகம், பழைய கோர்ட் வளாகத்தையொட்டி கிளைச் சிறை உள்ளது. இந்த சிறை கடந்த 1894ம் ஆண்டு 61 சென்ட் பரப்பளவில் கட்டப்பட்டது. சிறையில் 29 விசாரணைக் கைதி மட்டுமே அடைக்ககூடிய வசதி உள்ளது.நேரு வீதியில் ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் இருந்ததால், சிறையில் அடைக்க வேண்டிய விசாரணைக் கைதிகளை அருகில் உள்ள கிளைச்சிறையில் அடைப்பதற்கு போலீசாருக்கு சிரமம் இல்லாமல் இருந்தது.இங்கிருந்த நீதிமன்றங்கள் அனைத்தும் கடந்த 2017ம் ஆண்டு திண்டிவனம் அடுத்த ஜக்காம்பேட்டையில் புதிதாக திறக்கப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, கிளை சிறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே, இரண்டரை ஏக்கர் பரப்பளவில், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் சார்பில், 8.39 கோடி ரூபாய் செலவில் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த பணிகள் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் துவங்கியது.புதியதாக கட்டப்பட்டு வரும் கிளைச்சிறையில் விசாலமான இடத்தில், 200 விசாரணைக் கைதிகளை அடைக்கும் வகையில் கட்டப்பட்டு வருகிறது. கைதிகள் எளிதில் தப்பிச் செல்லாதவாறு, சிறையைச் சுற்றி 20 அடி உயரத்திற்கு சுற்றுச் சுவரும், அதன் மேல் 5 அடி உயரத்திற்கு இரும்பிலான ரோல் முள் வளையம் அமைக்கப்பட்டுள்ளது.
பிரச்னைக்குரிய கைதிகளை சிறை வைக்கும் வகையில் தனியாக 50 பேர் தங்க வைக்கும் அளவில் தனி செல், நவீன வசதிகளுடன் கூடிய சமையல் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.தற்போது மின்சார வசதி செய்யும் பணி மற்றும் சாலை போடும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப்பணிகள் அனைத்தும் இரண்டு மாதங்களுக்குள் நிறைவடைந்து, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என சிறைத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.