கள்ளக்குறிச்சி-வருவாய்த்துறை சார்பில் நடந்த கூட்டத்தில், உலகளந்த பெருமாள் கோவில் மதில் சுவர் அருகே கழிவறை கட்டுவதற்கு அனுமதி வழங்கிய அதிகாரியை கலெக்டர் கடுமையாக சாடினார்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு குறித்து ஆய்வுக் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். எஸ்.பி., பகலவன் முன்னிலை வகித்தார். டி.ஆர்.ஓ., விஜய்பாபு வரவேற்றார்.கூட்டத்தில் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விபத்து நடை பெறுவதாக கண்ட றியப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பாஸ்கர், செந்தில்வேல் ஆகியோர் வீடியோ காட்சிகள் மூலம் விளக்கினர்.
சின்னசேலம் அடுத்த அம்மையகரம் சந்திப்பு, கொங்கு ஹோம் அப்ளை யன்ஸ், ஆவின் பாலகம், கனியாமூர், பங்காரம், இந்திலி உள்ளிட்ட 20க் கும் மேற்பட்ட உள்ளூர் பாதை சந்திப்புகளில் மின் விளக்குகள் இல்லாததால் தொடர் விபத்துக்கள் நடக்கிறது.இப்பகுதிகளில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தனது சொந்த செலவில் மின் விளக்குகள் அமைத்து, அதற்கான மின் கட்டணத்தை செலுத்திக்கொள்ள வேண்டும். சின்னசேலத்திலிருந்து உளுந்துார்பேட்டை நோக்கி செல்லும் வாகனங்கள் அதற்கான பிரிவு சாலையை பயன்படுத்தாமல், உள்ளேறும் வழியாகவே வாகனங்கள் வெளியே செல்வதை அனுமதிக்க கூடாது.எலவனாசூர்கோட்டை, குணமங்கலம் பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலையில் சென்டர் மீடியனை அகற்றி குறுக்கே வாகனங்கள் செல்வதை சி.சி.டி.வி., கேமரா அமைத்து கண்காணிக்க வேண்டும். அந்தந்த பகுதி ஊராட்சி நிர்வாகிகளுடன் கூட்டம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, கலெக்டர் அறிவுறுத்தினார்.மேலும் உளுந்துார்பேட்டையிலிருந்து நகருக்குள் வருபவர்களுக்கு எளிதில் புரிந்துகொள்ள வழிகாட்டி குறிப்புகள் இல்லை. இதனால் பலர் பாலத்தின்மீதேறி செல்கின்றனர்.கிராம சாலை போன்றே இந்த சாலை பராமரிக்கப்படுகிறது. இந்த சாலையை முறைப்படுத்தி, வழியை எளிதாக்கிட வேண்டும். ஏமப்பேர் பை-பாஸ் சந்திப்பு பகுதியில் மேம்பாலம் கட்டி அப்பகுதியில் விபத்துக்கள் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும்.உளுந்துார்பேட்டை முதல் சேலம் வரையிலான தேசிய நெடுஞ்சாலையின் ஒவ்வொரு பிற சாலை சந்திப்புகளிலும் பிரதிபலிப்பான்கள், வழிகாட்டு பலகைகளை கட்டாயம் அமைக்க வேண்டும்.நெடுஞ்சாலை மேம்பாலங்களில் எவ்வித விளம்பரங்களையும் அமைக்க அனுமதிக்க கூடாது. மீறுபவர்கள் கட்டாயம் தண்டிக்கப்படுவர். நெடுஞ்சாலை ஆணைய அலுவலர்கள் இதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் என, அறிவுறுத்தினார்.
மேலும் கள்ளக்குறிச்சி நகரப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலையின் கட்டுப்பாட்டில் உள்ள துருகம், சேலம் சாலைகளை விரிவுபடுத்தி, புதிதாக சாலை அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இல்லையெனில் இவ்விரு சாலைகளையும், நெடுஞ்சாலைத்துறையினரிடம் ஒப்படைத்து சாலைகள் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.கலெக்டர் கள்ளக்குறிச்சி நகரின் முக்கிய பகுதியான நான்கு முனை சந்திப்பில் அரசு பெண்கள் பள்ளி இயங்கி வருகிறது. இதன் கூடுதல் கட்டடம் டி.இ.ஓ., அலுவலகம் அருகே உள்ளது. மாணவிகளின் பாதுகாப்பு கருதி பள்ளியை டி.இ.ஓ., அலுவலகம் உள்ள பகுதிக்கு முழுமையாக மாற்றிட வேண்டும்.
அதிகாரிக்கு 'டோஸ்'
முன்னதாக வருவாய்த்துறை சார்பில் நடந்த கூட்டத்தில், திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவில் மதில் சுவர் அருகே கழிவறை கட்டும் பணிகள் நடப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இது குறித்து பேசிய கலெக்டர் ஷ்ரவன்குமார், கோவிலுக்கு அருகேயே கழிவறை கட்டுவதற்கு அனுமதி வழங்கிய அதிகாரியை கடுமையாக சாடினார். கோவிலின் புனிதத்தை பாதுகாக்கும் வகையில் அங்கு கழிவறை கட்டுவதற்கு தடை செய்து, வேறு இடத்திற்கு மாற்றிட அறிவுறுத்தினார்.கூட்டத்தில் கலெக்டர் நேர்முக உதவியாளர் அஜிதாபேகம், ஆர்.டி.ஓ.,க்கள் பவித்ரா, யோகஜோதி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் ரத்தினமாலா, டி.எஸ்.பி.,க்கள் ரவிச்சந்திரன், புகழேந்தி கணேஷ், மகேஷ், தேசிய நெடுஞ்சாலை ஆணைய அலுவலர் சதீஷ், மின்வாரிய அலுவலர் அருளாளன், நகரமைப்பு ஆய்வாளர் தாமரைச்செல்வன், நுகர்வோர் விழிப்புணர்வு சங்க செயலாளர் அருண்கென்னடி பங்கேற்றனர்.