மயிலாடுதுறை; கணவர் குடும்பத்தினர் வீட்டுக்குள் விடாததால் இளம்பெண் கதவை உடைத்து உள்ளே சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூர் மாவட்டம் பில்லூர் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன் மகள் பிரவீனா. இவருக்கும் மயிலாடுதுறை மன்னம்பந்தல் தெற்குவெளி ராஜேந்திரன் மகன் நடராஜன் என்பவருக்கும் கடந்த 2021-ஆம் ஆண்டு திருமணமானது. 24 பவுன் நகை, டூவீலர் மற்றும் சீர்வரிசையுடன் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். 3 மாதம் இருவரும் சேர்ந்து வாழ்ந்த நிலையில் மேலும் வரதட்சனை கேட்டு நடராஜன் குடும்பத்தினர் துன்புறுத்தியுள்ளனர். நடராஜன் வேலைக்காக சென்னை சென்று நிலையில் அவரது தம்பி சதீஷ், பிரவீனாவுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து பிரவீனாவை வீட்டில் இருந்து நடராஜன் குடும்பத்தினர் வெளியேற்றி விட்டு வீட்டை பூட்டிக்கொண்டு அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளனர். திருமணமாகி ஒன்றரை ஆண்டு ஆன நிலையில் கணவருடன் சேர்ந்து வாழ வைக்க கோரி பிரவீனா நடராஜன் வீட்டு வாசலில் 20 நாளாக படுத்து உறங்கி வந்தார். கிராம மக்கள் பேசியும் நடராஜன் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளாத நிலையில் நேற்று பொதுமக்களுடன் வந்து பிரவீனா மயிலாடுதுறை டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார். பின்னர் தன்னை வீட்டின் உள்ளே விடாததால் ஆத்திரமடைந்த பிரவீனா நேற்று இரவு பொதுமக்கள் முன்னிலையில் கடப்பாரையால் கதவை உடைத்து வீட்டுக்குள் சென்றார். இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.