கைத்தறி பட்டு நெசவாளர்கள் கூலி விவகாரத்தில்...அவலம்!:சங்கங்களை விட தனியார் நிறுவனங்கள் தாராளம்

Added : செப் 23, 2022 | |
Advertisement
காஞ்சிபுரம்:கைத்தறி கூட்டுறவு சங்கங்களில் வழங்கப்படும் கூலியை காட்டிலும், தனியார் நிறுவனங்களில் அதிக கூலி வழங்கப்படுகிறது. இதனால், விலைவாசி உயர்வுக்கு ஏற்ற வகையில், சங்கங்களில் பணியாற்றும் நெசவாளர்களுக்கு உரிய கூலி வழங்க கைத்தறி துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.நாட்டின் எந்த மூலையிலும், சுப நிகழ்ச்சிக்கு பட்டு புடவை வாங்க வேண்டுமென்றால்

காஞ்சிபுரம்:கைத்தறி கூட்டுறவு சங்கங்களில் வழங்கப்படும் கூலியை காட்டிலும், தனியார் நிறுவனங்களில் அதிக கூலி வழங்கப்படுகிறது. இதனால், விலைவாசி உயர்வுக்கு ஏற்ற வகையில், சங்கங்களில் பணியாற்றும் நெசவாளர்களுக்கு உரிய கூலி வழங்க கைத்தறி துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
நாட்டின் எந்த மூலையிலும், சுப நிகழ்ச்சிக்கு பட்டு புடவை வாங்க வேண்டுமென்றால் சட்டென்று கவனத்திற்கு வருவது காஞ்சிபுரம் நகரம் தான். காரணம், நேர்த்தியாக பட்டு சேலைகள் நெய்யப்படுவதும், பரம்பரை பரம்பரையாக நெசவுத்தொழிலில் ஈடுபடும் நெசவாளர்களின் கைவண்ணம் தான். அவர்கள் நெய்யும் பட்டு சேலைகள் மின்னுவது போல், அவர்களது வாழ்க்கை மின்னுவதில்லை.
இதற்கு தொழில் நலிவு, போலி பட்டு சேலைகள் என பல உதாரணங்கள் கூறினாலும், கூலி விவகாரத்தில், நெசவாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், 22 கைத்தறி பட்டு கூட்டுறவு சங்கங்களில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இதில், 30 சதவீத நெசவாளர்கள் மட்டுமே பணியாற்றுவதாக சங்க நிர்வாகிகளே தெரிவிக்கின்றனர்.


காரணம்

உழைப்பிற்கேற்ற கூலி கிடைப்பதில் பல சிக்கல் நிலவுகிறது. குறிப்பாக, கூட்டுறவு சங்க நெசவாளர்களுக்கும், தனியாரிடம் பணியாற்றும் நெசவாளர்களுக்கும் மிக அதிக வித்தியாசம் இருந்தது. முன்பெல்லாம், தனியாரிடம் கூலி குறைவாகவும், கைத்தறி சங்கங்களிடம் கூலி அதிகமாக இருந்தது.ஆனால், காலமாற்றம் மற்றும் தனியாரின் ஆதிக்கம் போன்ற காரணங்களால், இப்போது அதிக நெசவாளர்கள் தனியாரிடம் பணியாற்றி வருகின்றனர்.
இதன்மூலம், கூட்டுறவு கைத்தறி சங்கங்களை காட்டிலும், அதிக கூலியை தனியார் முதலாளிகள் வழங்கி வருகின்றனர்.தனியார் முதலாளிகள் நெசவாளர்களுக்கு அதிக கூலி வழங்குவதால், கைத்தறி கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் நெசவாளர்கள், தங்களுக்கு உரிய கூலி உயர்வை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.தனியார்க்கும், கைத்தறி சங்கங்களுக்கும் கிட்டத்தட்ட, 15 முதல் 20 சதவீத கூலி வித்தியாசம் உள்ளதாக நெசவாளர்கள் தெரிவிக்கின்றனர். குறைவான கூலியை கொண்டு எப்படி குடும்ப செலவுகளையும், மின்கட்டணம், வீட்டு வரி, வாடகை போன்றவை செலுத்த முடியும் என கேள்வி எழுப்புகின்றனர்.


ஜி.எஸ்.டி., வேண்டாம்


''கைவினை பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.,விதிக்கப்படுவதில்லை. ஆனால், கைத்தறியில் நெய்யப்படும் பட்டு சேலைகளுக்கு ஜி.எஸ்.டி.,விதிக்கப்படுவதால், பட்டு சேலையின் விலை அதிகரிக்கிறது. மேலும், மூலப்பொருட்களான பட்டு, ஜரிகை, சாயம், கைத்தறி இதர பொருட்கள் போன்ற மூலப்பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி., 5 சதவீதம் விதிக்கப்படுவதால், நேரடியாக 5 சதவீதமும், மறைமுகமாக 5 சதவீதமும் அதிகரிக்கிறது.
இதனால், பட்டு சேலையின் மொத்த விலை அதிகரிப்பதால், விற்பனை குறைகிறது. நெசவாளர்களுக்கு பணி வழங்க முடியாத நிலை ஏற்படுகிறது. ஏற்கனவே, 5 சதவீதமாக இருந்த ஜி.எஸ்.டி.,வரியை, 12 சதவீதமாக உயர்த்தும் முடிவு மத்திய அரசிடம் இருந்தது. நெசவாளர்களின் கோரிக்கையை தொடர்ந்து, அந்த முடிவை கைவிட்டனர். அதுபோல், கைத்தறி துறைக்கு விதிக்கப்படும் 5 சதவீத ஜி.எஸ்.டி.,யை நீக்க வேண்டும்.
-எஸ்.சங்கர், துணை தலைவர்,
மாமல்லன் பட்டு கைத்தறி கூட்டுறவு சங்கம்.

சமையல் வேலைக்கு செல்வோம்


பட்டு கைத்தறி சங்கங்களில் பணியாற்றும் நெசவாளர்கள் கூறியதாவது :தனியார் அதிக கூலி கொடுக்கிறார்கள் என்பது ஒருபுறமிருக்க, பட்டு கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் கொடுக்கும் கூலி குறைவாக உள்ளது. கடந்த ஜனவரி மாதம் அடிப்படை கூலி 10 சதவீதம் உயர்த்தினார்கள். ஆனால், அவை போதுமானதாக இல்லை. நாள்தோறும் உயரும் விலைவாசி, மின் கட்டணம் உயர்வு, சொத்துவரி உயர்வு போன்றவை சமாளிக்க முடியவில்லை.
கைத்தறி சங்கங்களில், குறைந்த கூலி வழங்கும் பட்டு ரகங்களை நெய்ய அறிவுறுத்துகிறார்கள். அதுபோன்ற ரகங்களை நெய்யும்போது, 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாகவே கூலி கிடைக்கிறது. ஒரு மாதத்திற்கு, 10 ஆயிரம் ரூபாயை வைத்துக்கொண்டு எப்படி குடும்பம் நடத்த முடியும். எனவே, சமுதாயத்தில் உள்ள விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு, கூலியை உயர்த்த வேண்டும்.
கூலி உயர்தாதபட்சத்தில், ஏற்கனவே ஆயிரக்கணக்கான நெசவாளர்கள் இப்பணியை விட்டு சென்றதுபோல், நாங்களும் சமையல் வேலைக்கோ அல்லது கூலி வேலைக்கோ செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.




புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X