செங்கை - தாம்பரம் ரயில் நிலைய பயணியர்...பரிதவிப்பு!:கேமரா இல்லாததால் திருடர்கள் அட்டகாசம்| Dinamalar

செங்கை - தாம்பரம் ரயில் நிலைய பயணியர்...பரிதவிப்பு!:கேமரா இல்லாததால் திருடர்கள் அட்டகாசம்

Added : செப் 23, 2022 | |
செங்கல்பட்டு:செங்கல்பட்டு -- தாம்பரம் இடையே ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள் இல்லாமல், பயணியர் பரிதவிக்கின்றனர். தவிர, கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததால், பெண்களிடம் செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றங்கள் அரங்கேறும் இடமாக, ரயில் நிலையங்கள் இருப்பதால் பயணியர் அச்சமடைகின்றனர்.செங்கல்பட்டு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து சென்னை தாம்பரம், மறைமலை நகர்,
செங்கை - தாம்பரம் ரயில் நிலைய பயணியர்...பரிதவிப்பு!:கேமரா இல்லாததால் திருடர்கள் அட்டகாசம்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு -- தாம்பரம் இடையே ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள் இல்லாமல், பயணியர் பரிதவிக்கின்றனர். தவிர, கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததால், பெண்களிடம் செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றங்கள் அரங்கேறும் இடமாக, ரயில் நிலையங்கள் இருப்பதால் பயணியர் அச்சமடைகின்றனர்.

செங்கல்பட்டு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து சென்னை தாம்பரம், மறைமலை நகர், சென்ட்ரல் உள்ளிட்ட பகுதிகளுக்கு, கல்வி, பணி, மருத்துவம் உள்ளிட்ட தேவைகளுக்காக, புறநகர் மின்சார ரயிலில் செல்கின்றனர்.செங்கல்பட்டு, பரனுார், சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர், பொத்தேரி, காட்டாங்கொளத்துார், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், வண்டலுார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள், காலை சென்று, மாலையில் திரும்புகின்றனர்.


பேருந்து கட்டணத்தைவிட, மின்சார ரயில் கட்டணம் பல மடங்கு குறைவு என்பதால், பெரும்பாலானோர் மாத சீசன் டிக்கெட் வாங்கி, ரயில்களில் பயணிக்கின்றனர். மேற்கண்ட ரயில் நிலையங்களில் காலை 6:00 மணி முதல் காலை 10:00 மணி வரை, பயணியர் கூட்டம் அலைமோதுகிறது.இச்சூழலில், தேவையான அடிப்படை வசதிகள், ரயில் நிலையங்களில் இல்லாமல், பயணியர் அவதிப்படுகின்றனர்.


முக்கிய நிலையங்களான செங்கல்பட்டு, தாம்பரத்தில் கூட அடிப்படை வசதிகள் இல்லை; குற்றங்களை தடுக்கவும், கண்காணிக்கவும் கேமராக்களும் இல்லை.மற்ற ரயில் நிலையங்களில், குடிநீர் குழாய்கள், கழிப்பறைகள் முறையாக பராமரிப்பின்றி, அவல நிலையில் உள்ளன. பயணியர், அவசரத்திற்கு இயற்கை உபாதை கழிக்க முடியாமல் பெரும் அவஸ்தைப்படுகின்றனர்.ரயில் நிலைய நடைமேடை பகுதியில், இரவில் குறுகிய பகுதியில் மட்டுமே மின் விளக்குகள் ஒளிர்ந்து, மற்ற பகுதிகள் இருள் சூழ்ந்து காணப்படுகின்றன.


இதை சாதகமாக்கி, வழிப்பறி கொள்ளையர்கள், தனியாக செல்லும் பெண்களை வழிமறித்து நகை மற்றும் பணத்தை பறித்துச் செல்கின்றனர். இது தொடர்பாக புகார் கொடுக்க, தாம்பரம், செங்கல்பட்டு ரயில்வே காவல் நிலையம் செல்ல வேண்டியுள்ளதால், பயணியர் பரிதவிக்கின்றனர்.


செங்கல்பட்டு - தாம்பரம் இடையே உள்ள கூடுவாஞ்சேரி ரயில் நிலைய பகுதியில், ரயில்வே காவல் நிலையம் அமைத்தால், குற்றங்கள் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது.கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த கே.பாலாஜி என்பவர் கூறியதாவது:பரனுார், பொத்தேரி, கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் ஆகிய ரயில் நிலைய பகுதிகளில், பயணியர் கூட்டம் அதிகம் காணப்படும். மேல்மருவத்துார் நிலையத்திலும், பயணியர் அதிகமாக வந்து செல்கின்றனர்.


இந்நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லை; போலீசார் ரோந்து இல்லை. பயணியருக்கான வசதிகள், பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பொத்தேரி, கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் ரயில் நிலையங்களில், கழிப்பறைகள் இருந்தும் பயன்பாடு இல்லாமல் பூட்டு போடப்பட்டுள்ளது. குடிநீர் மற்றும் கழிப்பறை வசதியை மேம்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.புறக்காவல் நிலையம் தேவை


ரயில் நிலைய நடைமேடைகளில், போலீசார் நடமாட்டம் இல்லாததால், தனியாக செல்லும் பெண்களிடம் மர்ம நபர்கள் செயின், மொபைல் போனை பறித்து செல்கின்றனர். குற்றங்களை தடுக்க, கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில், புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும்.


வி.அனிதா


தனியார் நிறுவன பெண் ஊழியர், ஊரப்பாக்கம்.

செங்கல்பட்டில் எஸ்கலேட்டர், கூரை அமைக்கும் பணி மந்தம்


சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு, 44 விரைவு ரயில்களும், 16 வாராந்திர ரயில்களும், இரண்டு சிறப்பு விரைவு ரயில்களும் செங்கல்பட்டு வழியாக இயக்கப் படுகின்றன. செங்கல்பட்டுக்கு 70 மின்சார ரயில்களும் இயக்கப்படுகின்றன. தினமும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், இந்நிலையத்தை பயன்படுத்துகின்றனர்.


இந்நிலையத்தில் எட்டு நடைமேடைகள் உள்ளன. இவற்றில் ஏற முடியாமல், முதியோர், கர்ப்பிணியர், மாற்றுத்திறனாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.இவர்கள் வசதிக்காக, முதலாவது மற்றும் இரண்டாவது நடைமேடை; மூன்றாவது, நான்காவது நடைமேடை பகுதிகளில், தலா ஒரு 'எஸ்கலேட்டர்' எனும் நகரும் படிக்கட்டு அமைக்க, தலா 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.


முதலாவது நடைமேடை பகுதியில் நகரும் படிக்கட்டு அமைக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. காலை, மாலை நேரத்தில் மட்டுமே இயக்கப்படுகிறது.மூன்றாவது நடைமேடையில், நகரும் படிக்கட்டு அமைக்கும் பணி மந்தமாக நடக்கிறது.அதேபோல், மே மாதம் வீசிய 'அசானி' புயலால், ரயில் நிலைய 4, 5, 6, 7, 8 ஆகிய நடைமேடைகளில் இருந்த கூரைகள் காற்றில் பெயர்ந்தன. பயணியர் சிரமப்பட்டதை அடுத்து 4, 5, 6 ஆகிய நடைமேடைகளில் கூரை அமைக்கப்பட்டது.


7, 8 ஆகிய நடைமேடைகளில் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.வடகிழக்கு பருவ மழைக்கு முன், செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டு, கூரை அமைக்கும் பணியை முடிக்க வேண்டும் என, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.ரயில் நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ரயில் நிலைய மூன்றாவது நடைமேடை பகுதியில், 'எஸ்கலேட்டர்' அமைக்கும் பணி நடந்து வருகிறது. மூன்று மாதங்களில் இப்பணி முடிக்கப்படும். கூரை அமைக்கும் பணி, விரைவில் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றார்.புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X