தமிழகத்தில் பா.ஜ., அலுவலகங்கள் மீது தாக்குதல் போலீஸ் கண்காணிப்பை தீவிரப்படுத்த டி.ஜி.பி., உத்தரவு| Dinamalar

தமிழகத்தில் பா.ஜ., அலுவலகங்கள் மீது தாக்குதல் போலீஸ் கண்காணிப்பை தீவிரப்படுத்த டி.ஜி.பி., உத்தரவு

Updated : செப் 24, 2022 | Added : செப் 24, 2022 | |
கோவை, பொள்ளாச்சி, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், பா.ஜ., நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்கள் மீது அடுத்தடுத்து நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு, கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.தமிழகம் உட்பட, 15 மாநிலங்களில், 93 இடங்களில், 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' அமைப்பு
தமிழகத்தில் பா.ஜ., அலுவலகங்கள் மீது தாக்குதல் போலீஸ் கண்காணிப்பை தீவிரப்படுத்த டி.ஜி.பி., உத்தரவு

கோவை, பொள்ளாச்சி, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், பா.ஜ., நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்கள் மீது அடுத்தடுத்து நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு, கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.தமிழகம் உட்பட, 15 மாநிலங்களில், 93 இடங்களில், 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' அமைப்பு நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்களில் என்.ஐ.ஏ., மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தி, 45 பேரை கைது செய்தனர்.


குண்டு வீச்சு


இந்த சம்பவம் நாடு முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், பா.ஜ.,வினரின் வீடு, அலுவலகங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.கோவை, காந்திபுரத்தில் உள்ள பா.ஜ., அலுவலகம், ஒப்பணக்கார வீதியில் உள்ள, பா.ஜ., நிர்வாகியின் ஜவுளி நிறுவனம் ஆகிய இடங்களில் நேற்று முன்தினம் இரவு, 8:30 மணிக்கு, கெரஸின் நிரப்பப்பட்டு, திரியுடன் கூடிய குண்டுகள் வீசப்பட்டன.தொடர்ந்து, இரு இடங்களில் அரசு பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. ஈரோடில் பா.ஜ., பிரமுகர் தட்சிணாமூர்த்தி நடத்தும் பர்னிச்சர் கடையில் டீசல் குண்டு வீசப்பட்டது.


போலீசார் விசாரணை


கோவை, குனியமுத்துார் முத்துசாமி சேர்வை வீதியை சேர்ந்தவர் தியாகு, 35; கோவை மாவட்ட ஹிந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர். நேற்று மதியம் இவர் வீட்டின் முன் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர் ஒருவர் தீ வைத்துள்ளார்.கோவை சம்பவம் தொடர்பாக, கல்லாமேட்டைச் சேர்ந்த வெல்டிங் தொழிலாளி இப்ராஹிம், 37, பர்னிச்சர் கடை நடத்தும் ஆரிஸ், இன்டீரியர் வேலை பார்க்கும் ஜபருல்லா ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை, மேட்டுப்பாளையம் நகரில் இரண்டு பிளைவுட் கடைகளில், மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். திருப்பூர், காங்கேயம் ரோடு, ஜெய் நகர், ஐந்தாவது வீதியைச் சேர்ந்த பிரபு, 36, தனியார் பள்ளியில் இசை, உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் உடற்பயிற்சி பிரிவு மாநில செயலராகவும் உள்ளார்.


நேற்று மதியம் பிரபு வீட்டில் இருந்த போது, அங்கு வந்த இருவர், வெளியே நின்றிருந்த அவரது கார் மீதும், வீட்டு ஜன்னல் மீதும் கல் வீசி தாக்கினர். அதன் பின், டூ - வீலரில் தப்பினர்.கோவை மாவட்டம், பொள்ளாச்சி, குமரன் நகர் பழனியப்பா லே - அவுட்டைச் சேர்ந்த, பா.ஜ., அமைப்புசாரா பிரிவு மாவட்டச் செயலர் பொன்ராஜின் கார். குமரன் நகர் இரண்டாவது லே -- அவுட்டைச் சேர்ந்த ஹிந்து முன்னணி உறுப்பினர் சரவணகுமாரின் இரண்டு ஆட்டோக்களை, நள்ளிரவு கோடாரியால் உடைத்து மர்மநபர்கள் சேதப்படுத்தி உள்ளனர்.வாகன சோதனை


மேலும், குமரன் நகரைச் சேர்ந்த பா.ஜ., உறுப்பினர் சிவகுமாரின் காரை சேதப்படுத்தியதுடன், ஐந்துக்கும் மேற்பட்ட டீசல் பாக்கெட்டுகளை வீசி, தீ வைக்க முயன்றது தெரியவந்தது. என்.ஜி.எம்., நகரைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் வெள்ளிங்கிரியின் சரக்கு ஆட்டோவை சுற்றியும் டீசல் பாக்கெட்டுகளை வீசிச் சென்றுள்ளனர்.


இந்த சம்பவங்கள் குறித்து தகவலறிந்து, பா.ஜ., மற்றும் ஹிந்து முன்னணி நிர்வாகிகள், சம்பவ இடத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பொள்ளாச்சி போலீசார் விசாரணை நடத்தினர். அங்கு கிடந்த கோடாரி மற்றும் டீசல் பாக்கெட்டுகளை மீட்ட போலீசார், அப்பகுதி கண்காணிப்பு கேமராக்கள் வாயிலாக மர்ம நபர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


கோவை எஸ்.பி., பத்ரி நாராயணன் நேரில் விசாரணை மேற்கொண்டு, பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள போலீசாருக்கு அறிவுரைகளை வழங்கினார். இச்சம்பவங்களை தொடர்ந்து, பொது இடங்களில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.கண்காணிப்பு


அடுத்தடுத்து நடந்த இந்த தாக்குதல் சம்பவங்கள் எதிரொலியாக, தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டி.ஜி.பி., சைலேந்திரபாபு, அனைத்து மாநகர போலீஸ் கமிஷனர், மண்டல ஐ.ஜி., - டி.ஐ.ஜி., - எஸ்.பி.,க்களை உஷார்படுத்தி உள்ளார்.வாகன சோதனை, போலீஸ் கண்காணிப்பை தீவிரப்படுத்த, டி.ஜி.பி., உத்தரவிட்டுள்ளார்.


கோவையில் சித்தாபுதுார், 100 அடி ரோடு, ஒப்பணக்கார வீதி என, மூன்று இடங்களில் நேற்று முன்தினம் இரவு மண்ணெண்ணெய் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. இது தொடர்பாக, கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருக்கும் காட்சிகளை, தனிப்படையினர் ஆய்வு செய்து வருகின்றனர். தமிழ்நாடு சிறப்பு காவல் படையின், இரு கம்பெனியினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இரு கம்பெனியினர் பாதுகாப்புக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் ரோந்து, வாகன தணிக்கை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.


- பாலகிருஷ்ணன், கோவை மாநகர போலீஸ் கமிஷனர்

அண்ணாமலை கண்டனம்!


தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை:தமிழக பா.ஜ.,வின் கோவை மாவட்ட கட்சி அலுவலகத்தின் மீது, பெட்ரோல் குண்டு வீசி, எங்கள் சகோதர - சகோதரர்களின் மன தைரியத்தை குறைத்து விடலாம் என்று யாரும் நினைத்து விட வேண்டாம்.இதுபோன்ற அச்சுறுத்தல்கள், சமூக விரோதிகளுக்கு எதிரான எங்கள் சமூகப் பணியை மேலும் வேகப்படுத்தும். தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு சீரழிந்து வருவதை, மக்கள் கவனித்து கொண்டு தான் இருக்கின்றனர் என்பதை, தி.மு.க., அரசு உணர வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.பயங்கரவாதம்!'பா.ஜ., மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் அறிக்கை:கோவை மாநகர் மாவட்ட பா.ஜ., அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு வரும் போதெல்லாம், நாட்டின் அமைதிக்கு கேடு விளைவிக்கும் பயங்கரவாதம் தலை துாக்குகிறது.


கடந்த 1998 பிப்., 14-ல் பா.ஜ., தலைவர் அத்வானியை கொலை செய்ய, கோவை மாநகரில் பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டு வெடிப்புகளையும், 1997 நவ., 29-ம் தேதி, போக்குவரத்து போலீஸ்காரர் செல்வராஜ் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, கோவையில் நடந்த கலவரங்களையும் யாராலும் மறக்க முடியாது.இவை, தமிழக வரலாற்றின் கறுப்பு பக்கங்களாக உள்ளன.


இந்த இரு கொடூர சம்பவங்கள் நடந்தபோது தி.மு.க., தான் ஆட்சியில் இருந்தது. இந்த பின்னணியில் இருந்து தான், இப்போது பா.ஜ., அலுவலகத்தின் மீது வீசப்பட்ட பெட்ரோல் குண்டு சம்பவத்தை பார்க்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

- நமது நிருபர் குழு -


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X