ஓசூர் : ஓசூர் பஸ் ஸ்டாண்ட் எதிரே டிரான்ஸ்பார்மர் அமைக்க, மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், தற்காலிகமாக பணி கைவிடப்பட்டது.
ஓசூர் பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள பூ மார்க்கெட் முன், வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்ல வழிப்பாதை உள்ளது. இதை தார்ச்சாலையாக அமைத்து, பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க, மாநகராட்சி நிர்வாகம் தீர்மானித்துள்ளது. இந்நிலையில், பஸ் ஸ்டாண்ட் எதிரே அமைக்கப்படும் தனியார் ஜூவல்லரி மற்றும் கடைகளுக்கு மின் இணைப்பு வழங்க, டிரான்ஸ்பார்மர் அமைக்க, அந்த வழியில் நேற்று பள்ளம் தோண்டப்பட்டது.
இதற்கு, அப்பகுதி வியாபாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் எதிர்ப்பு தெரிவித்து, அங்கு திரண்டனர். இதையடுத்து, மின்வாரியம் தற்காலிகமாக பணியை நிறுத்தி விட்டு, பேச்சுவார்த்தைக்கு பின் பணியை மேற்கொள்வதாக கூறியது. இதனால், மக்கள் கலைந்து சென்றனர்.