வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : அளவுக்கு அதிகமாக மணல் எடுத்து சென்றதாக, எத்தனை லாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து, தமிழக அரசு விபரங்கள் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் செல்ல ராஜாமணி என்பவர் தாக்கல் செய்த மனு:மணல், ஜல்லி கற்களை, லாரிகளில் அதிக அளவில் எடுத்து செல்கின்றனர்.
லாரிகளில் உள்ள சரியான அளவுக்கு, போக்குவரத்து 'பெர்மிட்' கொடுப்பது இல்லை. சரியான எடைக்கான, 'பாஸ்' வழங்காமல், அதிக அளவில் எடுத்து செல்லும்படி லாரி உரிமையாளர்களை, குவாரி உரிமையாளர்கள் வற்புறுத்துகின்றனர். இதனால், லாரிகளை போலீசார் முடக்குகின்றனர். அவர்களுக்கு பணம் கொடுத்த பின்னரே விடுவிக்கின்றனர்.
![]()
|
சட்டவிரோத குவாரிகளால், அரசுக்கு ஆண்டுக்கு, 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுகிறது. லாரி உரிமையாளர்கள், ஓட்டுனர்களுக்கு எதிராக மட்டுமே வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. அதிகாரிகள், குவாரி உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்படுவது இல்லை.எனவே, லாரிகளில் அளவுக்கு அதிகமாக மணல், ஜல்லி கற்கள் எடுத்து செல்ல தடை விதிக்க வேண்டும்.
அதிகாரிகள், குவாரி உரிமையாளர்கள், போலீசாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. அளவுக்கு அதிகமாக மணல், ஜல்லி ஏற்றிச் சென்றதாக, எத்தனை லாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த விபரங்களை அளிக்க, தமிழக அரசுக்கு முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. விசாரணையை, அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்தது.