கட்டுமான பொருட்கள் விலை உயர்வு, தொழிலாளர்கள் பற்றாக்குறை போன்ற பல காரணங்களால் வீடு கட்ட தயங்கும் பலர் குறைந்த பட்ஜெட்டில் வீடு வாங்க விரும்புபவர்கள் பழைய வீடுகளை வாங்கலாம். அப்படி பழைய வீடுவாங்குவோர் கவனிக்க வேண்டிய சில விஷயங்களை பார்ப்போம்.
15 ஆண்டு வீடு வாங்கலாம்
பழைய வீடு என்றாலும் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை வாங்க பலரும் ஆர்வம் காட்டுவர். அந்த வீடுகள் கட்டி முடித்து எத்தனை ஆண்டுகள் ஆகின்றன என கவனிக்க வேண்டும். கட்டி முடித்து 15 ஆண்டுகளுக்கு உட்பட்டதாக இருப்பது நல்லது. வீடு முறையான பராமரிப்புடன் இருக்கிறதா என கவனிக்க வேண்டும். கட்டட தரம், தாங்கும் திறனை பரிசோதிக்க வேண்டும். பழைய வீட்டுக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கும் விலையை தற்போதைய சந்தை மதிப்புடன் ஒப்பிட வேண்டும். அதற்கு வீடு வாங்கும் பகுதியில் புதிதாக கட்டிய அடுக்குமாடி வீட்டின் விலைவிசாரிக்க வேண்டும். அந்த விலை எத்தனை சதவீதம் குறைவாக இருக்கிறது என கணக்கிட வேண்டும்.
வங்கி கடன் கிடைக்கும்
தாய் பத்திரம் போன்ற முக்கிய ஆவணங்கள் சரியாக இருக்கிறதா என ஆராய வேண்டும். வீட்டு வரி, குடிநீர் வரி சரியாக செலுத்தப்பட்டுள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டும். பத்திரங்களில் வில்லங்கம் இருப்பதாக சந்தேகம் வந்தால் அந்த வீட்டை வாங்க கூடாது. பழைய வீடு வாங்க வீட்டு வசதி நிறுவனங்கள் வங்கி கடன் வழங்குகின்றன. பழைய அடுக்குமாடி குடியிருப்பு வீடு எத்தனை ஆண்டு பழமையானது என்பதை கணக்கிட்டு கடன் கொடுக்கப்படும். வீடு தரமாக இருந்தால் தான் கடன் கிடைக்கும்.
அசல் தொகையில் சலுகை
வாங்கும் வீட்டை வசிக்க பயன்படுத்தினால் கடனுக்கு திரும்ப செலுத்தும் அசல் தொகையில் சலுகைஅளிக்கப்படுகிறது. வாடகைக்கு விட்டால் திரும்ப செலுத்தும் அசலுக்கு சலுகை கிடைக்காது. முழு வட்டிக்கும் வரி சலுகை உண்டு. வாடகையை வருமானமாக காட்ட வேண்டும். பழைய வீடு வாங்கும்போது புதிய அடுக்குமாடி குடியிருப்பு வீட்டை விட பத்திர பதிவுக்கு கூடுதல் செலவாகும். ஏனென்றால், பழைய குடியிருப்புக்கு பிரிக்கப்படாத மனை பரப்பு (யூ.டி.எஸ்) தவிர வீட்டு மதிப்பையும் கணக்கிட்டு முத்திரை தாள், பதிவுகட்டணம் செலுத்த வேண்டும். அதனால், சொத்து மதிப்பு அதிகமாகும் என்கிறார்கள் சட்ட வல்லுனர்கள்.