கோவை, பொள்ளாச்சி, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், பா.ஜ., நிர்வாகிகளின் வீடு, அலுவலகங்கள் மீது அடுத்தடுத்து நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு, கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக, தமிழகம் உட்பட, 15 மாநிலங்களில், 93 இடங்களில், 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' அமைப்பு நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்களில் என்.ஐ.ஏ.,மற்றும் அமலாக்க துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தி, 45 பேரை கைது செய்தனர்.இந்த சம்பவம் நாடு முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், பா.ஜ.,வினரின் வீடு, அலுவலகங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
மூவரிடம் விசாரணை
கோவை, காந்திபுரத்தில் உள்ள பா.ஜ., அலுவலகம், ஒப்பணக்கார வீதியில் உள்ள, பா.ஜ., நிர்வாகியின் ஜவுளி நிறுவனம் ஆகிய இடங்களில் நேற்று முன்தினம் இரவு, 8:30 மணிக்கு, கெரஸின் நிரப்பப்பட்டு, திரியுடன் கூடிய குண்டுகள் வீசப்பட்டன.தொடர்ந்து, இரு இடங்களில் அரசு பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. ஈரோட்டில் பா.ஜ., பிரமுகர் தட்சிணாமூர்த்தி நடத்தும் பர்னிச்சர் கடையில் டீசல் குண்டு வீசப்பட்டது.
காருக்கு தீ

கோவை சம்பவம் தொடர்பாக, கல்லாமேட்டைச் சேர்ந்த வெல்டிங் தொழிலாளி இப்ராஹிம், 37, பர்னிச்சர் கடை நடத்தும் ஆரிஸ், இன்டீரியர் வேலை பார்க்கும் ஜபருல்லா ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். நேற்றிரவு, மூவரும் விடுவிக்கப்பட்டனர்.கோவை குனியமுத்துார் முத்துசாமி சேர்வை வீதியை சேர்ந்தவர் தியாகு, 35; கோவை மாவட்ட ஹிந்து முன்னணியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர். நேற்று மதியம் 1:45 மணியளவில் வீட்டின் முன் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு திடீரென மர்ம நபர் ஒருவர் தீ வைத்துள்ளார்.திருப்பூர், காங்கேயம் ரோடு, ஜெய் நகர், 5வது வீதியை சேர்ந்த பிரபு, 36, தனியார் பள்ளியில் இசை, உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் உடற்பயிற்சி பிரிவு மாநில செயலராகவும் உள்ளார். நேற்று மதியம் பிரபு வீட்டில் இருந்த போது, அங்கு வந்த இருவர், வெளியே நின்றிருந்த அவரது கார் மீதும், வீட்டு ஜன்னல் மீதும் கல் வீசி தாக்கினர். அதன் பின், டூ வீலரில் தப்பினர்.
ஆய்வு
மேட்டுப்பாளையத்தில், காரமடை ரோட்டில், பழைய கோர்ட் கட்டடம் எதிரே, பிளைவுட் கடை மற்றும் குடோன் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, பிளைவுட் கடையின் கம்பி வலை ஜன்னலை உடைத்த மர்ம நபர்கள், நான்கு பெட்ரோல் பாக்கெட்டுகள், இரண்டு பெட்ரோல் குண்டுகளை, கடையின் உள்ளே வீசி உள்ளனர். பிளைவுட் தீப்பிடித்து எரிந்துள்ளது. பாரதிநகர் எதிரே உள்ள தனியார் பிளைவுட் கடையின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து, உள்ளே பெட்ரோல் பாக்கெட்டுகள் மற்றும் பெட்ரோல் பாட்டில் குண்டு வீசி உள்ளனர். மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி., பாலாஜி மற்றும்போலீசார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது நள்ளிரவில், இரண்டு மோட்டார் சைக்கிளில் நான்கு பேர் வந்து சென்றது தெரிய வந்தது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
வாகனங்கள் சேதம்

கோவை மாவட்டம், பொள்ளாச்சி, குமரன் நகர் பழனியப்பா லே - அவுட்டைச் சேர்ந்த, பா.ஜ., அமைப்புசாரா பிரிவு மாவட்டச் செயலர் பொன்ராஜின் கார்; குமரன் நகர் இரண்டாவது லே -- அவுட்டைச் சேர்ந்த ஹிந்து முன்னணி உறுப்பினர் சரவணக்குமாரின் இரண்டு ஆட்டோக்களை, நள்ளிரவு கோடாரியால் உடைத்து மர்மநபர்கள் சேதப்படுத்தி உள்ளனர்.மேலும், குமரன் நகரைச் சேர்ந்த பா.ஜ., உறுப்பினர் சிவக்குமாரின் காரை சேதப்படுத்தியதுடன், ஐந்துக்கும் மேற்பட்ட டீசல் பாக்கெட்டுகளை வீசி, தீ வைக்க முயன்றது தெரியவந்தது. என்.ஜி.எம்., நகரைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் வெள்ளிங்கிரியின் சரக்கு ஆட்டோவை சுற்றியும் டீசல் பாக்கெட்டுகளை வீசிச் சென்றுள்ளனர்.இந்த சம்பவங்கள் குறித்து தகவலறிந்து, பா.ஜ., மற்றும் ஹிந்து முன்னணி நிர்வாகிகள், சம்பவ இடத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பொள்ளாச்சி போலீசார் விசாரணை நடத்தினர்.

போலீசார் கண்காணிப்பு
அங்கு கிடந்த கோடாரி மற்றும் டீசல் பாக்கெட்டுகளை மீட்ட போலீசார், அப்பகுதி கண்காணிப்பு கேமராக்கள் வாயிலாக மர்ம நபர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.கோவை எஸ்.பி., பத்ரி நாராயணன் நேரில் விசாரணை மேற்கொண்டு, பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள போலீசாருக்கு அறிவுரைகளை வழங்கினார். இச்சம்பவங்களை தொடர்ந்து, பொது இடங்களில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.அடுத்தடுத்து நடந்த இந்த தாக்குதல் சம்பவங்கள் எதிரொலியாக, தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டி.ஜி.பி., சைலேந்திரபாபு, அனைத்து மாநகரபோலீஸ் கமிஷனர், மண்டல ஐ.ஜி., டி.ஐ.ஜி.,எஸ்.பி.,க்களை உஷார்படுத்தி உள்ளார். வாகன சோதனை, போலீஸ் கண்காணிப்பை தீவிரப்படுத்த, டி.ஜி.பி., உத்தரவிட்டுள்ளார்.கோவையில் சித்தாபுதுார், 100 அடி ரோடு, ஒப்பணக்கார வீதி என, மூன்று இடங்களில் நேற்று முன்தினம் இரவு மண்ணெண்ணெய் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. இது தொடர்பாக, கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருக்கும் காட்சிகளை, தனிப்படையினர் ஆய்வு செய்து வருகின்றனர். தமிழ்நாடு சிறப்பு காவல் படையின், இரு கம்பெனியினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இரு கம்பெனியினர் பாதுகாப்புக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர். 24 மணி நேரமும் ரோந்து, வாகன தணிக்கை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
- பாலகிருஷ்ணன் கோவை மாநகர போலீஸ் கமிஷனர்

நாடு முழுதும் என்.ஐ.ஏ., சோதனை செய்து 11 மாநிலங்களில் பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த சிலரை கைது செய்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. பொள்ளாச்சியில் பா.ஜ., ஹிந்து முன்னணி மற்றும் ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகளின் வாகனங்களை சேதப்படுத்தியுள்ளனர். தீ வைக்க முயன்றபோது, சப்தம் கேட்டு வீடுகளில் வசிப்போர் வெளியே வருவதை கண்டு, மர்ம நபர்கள் தப்பியோடியுள்ளனர். இதன் பின்னணியில் யார் உள்ளனர் என்பதை கண்டறிந்து, கைது செய்ய வேண்டும்.
- துரை, கோவை மாவட்ட பா.ஜ., பொதுச் செயலர்.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை:தமிழக பா.ஜ.,வின்கோவை மாவட்ட கட்சி அலுவலகத்தின்மீது, பெட்ரோல் குண்டு வீசி, எங்கள் சகோதர, சகோதரர்களின் மன தைரியத்தை குறைத்து விடலாம் என்று யாரும்நினைத்து விட வேண்டாம்.இதுபோன்ற அச்சுறுத்தல்கள், சமூக விரோதிகளுக்கு எதிரான, எங்கள் சமூக பணியை மேலும் வேகப்படுத்தும். தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு சீரழிந்து வருவதை, மக்கள் கவனித்து கொண்டு தான் இருக்கின்றனர் என்பதை, தி.மு.க., அரசு உணர வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை:தமிழக பா.ஜ.,வின்கோவை மாவட்ட கட்சி அலுவலகத்தின்மீது, பெட்ரோல் குண்டு வீசி, எங்கள் சகோதர, சகோதரர்களின் மன தைரியத்தை குறைத்து விடலாம் என்று யாரும்நினைத்து விட வேண்டாம்.இதுபோன்ற அச்சுறுத்தல்கள், சமூக விரோதிகளுக்கு எதிரான, எங்கள் சமூக பணியை மேலும் வேகப்படுத்தும். தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு சீரழிந்து வருவதை, மக்கள் கவனித்து கொண்டு தான் இருக்கின்றனர் என்பதை, தி.மு.க., அரசு உணர வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நமது நிருபர் குழு -