சென்னை: கிராமப்புற ஏழை இளைஞர்களுக்கு, ஆங்கில பயிற்சி அளிக்க, மகளிர் மேம்பாட்டு நிறுவனம் - பிரிட்டிஷ் கவுன்சில் நிறுவனம் இடையே, நேற்று அமைச்சர் பெரியகருப்பன் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தப்படி, பிரிட்டிஷ் கவுன்சில் நிறுவனம் சார்பில், திறன் பயிற்சி பெறும் இளைஞர்களுக்கு, பல்வேறு வேலை வாய்ப்புகளுக்கு ஏற்ற, ஆங்கில அறிவு கற்றுக் கொடுக்கப்படும். அதற்கு தேவையான பாடத்திட்டம் வடிவமைத்து வழங்கப்படும்.நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சித் துறை செயலர் அமுதா, தமிழக மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குனர் திவ்யதர்ஷினி, தீன்தயாள் உபாத்தியாய ஊரகத் திறன் பயிற்சி திட்ட அலுவலர் செல்வராஜன், பிரிட்டிஷ் கவுன்சில் நிறுவன இயக்குனர் ஜனகா புஷ்பநாதன், பிரிட்டிஷ் கவுன்சில் உயர் ஆணையர் பால் டிரைடன் கலந்து கொண்டனர்.
'மொழிப்புலமை அவசியம்!'
ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் அளித்த பேட்டி:படித்த இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பது, முதல்வரின் எண்ணம். அதை நிறைவேற்ற, அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இளைஞர்கள் தொழில் பயிற்சி பெற, பல்வேறு வகையானசிறப்பு பயிற்சிகள், அரசு சார்பில் வழங்கப்படுகிறது. தொழிற் பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், மொழி வளம் இல்லாததால், சில நேரங்களில் அவர்கள் திறமையை வெளிப்படுத்துவதில் தயக்கம் ஏற்படுகிறது.
இந்தியாவிலே முதன்முறையாக, தமிழகத்தில் தான் இத்தகைய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, 25 ஆயிரம் மகளிர் சுய உதவி குழுக்கள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது; அதை விட அதிகம் அமைக்கப்படும். இந்த ஆண்டு, 45 ஆயிரம் மாணவர்களுக்கு, திறன் பயிற்சி மற்றும் ஆங்கில பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டது. இதுவரை 5,000 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.