சிக்கமகளூரு,-கோவில் உண்டியல்களில், பக்தர்கள் விசித்திரமான கோரிக்கைகளை எழுதி போடுவது சகஜம். அதே போன்று களசாவின் களசேஸ்வரா கோவிலில் ஒரு வினோதமான கடிதம் போடப்பட்டிருந்தது.
கர்நாடகாவில், சாமுண்டீஸ்வரி, பனசங்கரி, கொல்லுார் மூகாம்பிகை, குக்கே சுப்ரமண்யா, கட்டீலு துர்கா பரமேஸ்வரி, அஞ்சனாத்ரி, நஞ்சன்கூடின் ஸ்ரீகண்டேஸ்வரர் உட்பட பல்வேறு புராண பிரசித்தி பெற்ற கோவில்கள் உள்ளன. இக்கோவில் உண்டியல்களில் ஒவ்வொரு முறை காணிக்கை எண்ணும் போதும், விசித்திரமான வேண்டுதல்களுடன் கடிதங்கள் இருக்கும்.தேர்வில் தேர்ச்சி; தம்பதி ஒற்றுமை; கடன் தொல்லை; தான் விரும்பும் பெண் தன்னை காதலிக்க வேண்டும்; சொத்து அதிகரிக்க; பக்கத்து வீட்டினர் தொல்லை தீர என பல கோரிக்கைகளை எழுதி உண்டியலில் போடுவர்.சிக்கமகளூரு, களசாவில் களசேஸ்வரா கோவில் உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன், உண்டியல் திறக்கப்பட்டது. இதில் பக்தர் ஒருவரின் கடிதம் இருந்தது. அதில், 'என் மகனும், மருமகளும் என்னிடம் அன்போடு பேச வேண்டும். மருமகளின் மனதில், நாங்கள் நல்லவர்களாக தோன்ற வேண்டும். மகன், மருமகள் சம்பாதிக்கும் பணத்தை என்னிடம் கொடுக்க வேண்டும்' என, வேண்டியுள்ளார்.