சென்னை: பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர்களை கொல்வதற்கு தீட்டிய சதி வேலைகள் அம்பலமாகி உள்ளன. நாடு முழுதும் நடந்த, 'ரெய்டு' நடவடிக்கையில், அதற்கான ரகசிய ஆவணங்கள் சிக்கியுள்ளன. அதைத் தொடர்ந்து, ஆங்காங்கே நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்களின் பின்னணி பற்றியும் பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கிடையில், சென்னை உட்பட, மூன்று இடங்களில் நேற்றும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்துள்ளன.
உளவுத் துறை அளித்த தகவல்களின் அடிப்படையில், தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 15 மாநிலங்களில், 93 இடங்களில், 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' எனப்படும், பி.எப்.ஐ., அமைப்பின் நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்களில், தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ., மற்றும் மத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள், இம்மாதம் 22-ம் தேதி அதிரடி சோதனை நடத்தினர். ஒரே நாளில் நடத்தப்பட்ட அதிரடியில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், பி.எப்.ஐ., நிர்வாகிகள் 106 பேர் கைது செய்யப்பட்டனர்; தமிழகத்திலும் 10 பேர் கைதாகினர்.
சாலை மறியல்
இந்தச் சோதனையை கண்டித்து, தமிழகம் உட்பட நாடு முழுதும், பி.எப்.ஐ., - எஸ்.டி.பி.ஐ., அமைப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். என்.ஐ.ஏ., சோதனை நடந்த இம்மாதம் 22-ம்தேதி இரவு, கோவை மாநகர் மாவட்ட பா.ஜ., அலுவலகம் மற்றும் பா.ஜ., நிர்வாகியின் ஜவுளி நிறுவனத்தில், மண்ணெண்ணெய் நிரப்பப்பட்ட குண்டுகள் வீசப்பட்டன. அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், பா.ஜ., நிர்வாகிகளின் வீடு, அலுவலகங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழகம்முழுதும் போலீசார் உஷார்படுத்தப் பட்டு, கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கோவையில் போலீசார் அணிவகுப்பு நடத்தி, வன்முறையாளர்களை எச்சரித்தனர். ஆனாலும், நேற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில், ஹிந்து அமைப்புகளின் நிர்வாகிகள் வீடு, அலுவலகங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையில், நாடு முழுதும், பி.எப்.ஐ., - எஸ்.டி.பி.ஐ., நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனை குறித்து, நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ., அறிக்கை தாக்கல் செய்தது.
அதிலுள்ள பகீர் தகவல்கள் பற்றி கூறப்படுவதாவது:அரசின் கொள்கைகளை தவறாக புரிந்து, இந்தியாவுக்கு எதிராக மக்களிடம் அதிருப்தியை பி.எப்.ஐ., பரப்புகிறது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் முக்கிய தலைவர்களை, அவர்கள் குறிவைத்துள்ளனர்.மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்த சட்டவிரோத செயல்களில், அவர்கள் தீவிரமாக ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. லஷ்கர் - இ- - தொய்பா, ஐ.எஸ்., அல்குவைதா போன்ற பயங்கரவாத அமைப்புகளில் சேர, இளைஞர்களை பி.எப்.ஐ., ஊக்குவிக்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த சோதனையில், பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., உள்ளிட்ட ஹிந்து அமைப்புகளின் முக்கிய நிர்வாகிகள் பெயர் பட்டியல், அவர்களின் வீடு, அலுவலகங்களின் வரைபடங்கள், அவர்களின் செயல்பாடு விபரங்கள் அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டு இருப்பதும், முக்கிய நிர்வாகிகளை கொல்ல சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக, என்.ஐ.ஏ., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதில், தமிழகம், கேரளா, கர்நாடகாவை சேர்ந்த பல முக்கிய தலைவர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. அதை தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் ஆகியோர், என்.ஐ.ஏ., அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்திஉள்ளனர்.
தீ வைப்பு
இந்நிலையில், சென்னை சிட்லப்பாக்கத்தில் வசித்து வரும், தாம்பரம் மாவட்ட ஆர்.எஸ்.எஸ்., தலைவர் சீதாராமன் வீட்டில், நேற்று முன்தினம் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு உள்ளது. ராமநாதபுரத்தில் பா.ஜ.,வைச் சேர்ந்த டாக்டர் மனோஜ்குமார் வீட்டில் நிறுத்தப்பட்ட கார்களுக்கு நேற்று தீ வைத்துள்ளனர்.
திருப்பூரில் தனியார் பள்ளி இசை, உடற்கல்வி ஆசிரியராக உள்ள ஆர்.எஸ்.எஸ்., உடற்பயிற்சி பிரிவு பொறுப்பாளர் பிரபு வீட்டின் மீது, நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் பிரபலம் இல்லாதவர்கள். ஆனால், தங்களை முன்னிலைப்படுத்தி கொள்ளாமல், அமைப்பு பணிகளில் தீவிரமாக வேலை செய்பவர்கள்.அவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, ஹிந்து அமைப்புகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இதற்கிடையே, பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மீது தாக்குதல் நடத்த பி.எப்.ஐ., அமைப்பினர், வெளிநாடுகளில் இருந்து 120 கோடி ரூபாய் திரட்டியதாக அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020 ஜூலையில் பிரதமர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும், பின் அந்த திட்டத்தை கைவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டம் - ஒழுங்கு நிலவரம்தலைமை செயலர் ஆலோசனை
'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' அமைப்பு நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில், என்.ஐ.ஏ., மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதை அடுத்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், பா.ஜ., நிர்வாகிகள் வீடு மற்றும் அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது; பெட்ரோல் குண்டு வீச்சும் நடந்துள்ளது. இந்த சூழ்நிலையில், சட்டம் ஒழுங்கு நிலவரம் தொடர்பாக, அனைத்து மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் எஸ்.பி.,க்கள் மற்றும் பல்வேறு துறை அலுவலர்களுடன் நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக, தலைமைச் செயலர் இறையன்பு ஆலோசனை நடத்தினார். தலைமை செயலகத்தில் நடந்த கூட்டத்தில், உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் பணீந்திர ரெட்டி, டி.ஜி.பி., சைலேந்திரபாபு, பொதுத் துறை செயலர் ஜகந்நாதன், சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசிர்வாதம் ஆகியோர் பங்கேற்றனர்.