வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பாலாற்றில் மீண்டும் கை வைக்கும் வகையில், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இரண்டு அறிவிப்புகளை வெளியிட்டிருப்பது, தமிழக விவசாயிகளை அதிர்ச்சி அடையச் செய்துஉள்ளது.
![]()
|
ஆந்திர மாநிலம், குப்பம் சட்டசபை தொகுதியைச் சேர்ந்த அணிமிகனிபள்ளே என்ற இடத்தில், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பேசியதாவது:தமிழகம் மற்றும் ஆந்திர எல்லையில், கனகநாச்சியம்மன் கோவில் அருகே இருக்கும் பாலாறு நீர்த்தேக்கத்தின் உயரத்தை அதிகரிக்காமல், தண்ணீர் சேமிக்கும் அளவை அதிகரிக்க உள்ளோம்.
அதற்காக, 120 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். விரைவில் பணிகள் துவங்கப்படும்.குடிப்பள்ளியில், 77 டி.எம்.சி., சாந்திபுரத்தில், 3 டி.எம்.சி., சேமிக்க, இரண்டு நீர்த்தேக்கங்கள் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, 250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.ஜெகன்மோகன் ரெட்டியின் இந்த திடீர் அறிவிப்பால், தமிழக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
வட தமிழகத்தின் ஜீவாதாரமான பாலாறு, கர்நாடகாவின் நந்திதுர்கம் என்ற மலையில் உற்பத்தியாகிறது. அம்மாநிலத்தில், 93 கி.மீ., துாரம் பயணித்து, ஆந்திர மாநிலம், குப்பம் மாவட்டத்தில் நுழைந்து, 33 கி.மீ., துாரம் பயணிக்கிறது.பின்னர், தமிழக எல்லையான வாணியம்பாடி அருகே புல்லுாரில் தடம் பதிக்கிறது.
![]()
|
அங்கிருந்து வேலுார், காஞ்சிபுரம், செங்கல்பட்டு வழியாக, 222 கி.மீ., பயணித்து, கல்பாக்கம் அருகே வயலுாரில் வங்கக்கடலில் சங்கமிக்கிறது.ஆண்டுதோறும் பாலாற்றில் குறைந்தபட்சம், 80 டி.எம்.சி., தண்ணீர் உற்பத்தியாகிறது.இதில், கர்நாடகா மற்றும் ஆந்திரா தலா, 20 டி.எம்.சி., தண்ணீரும், தமிழகம், 40 டி.எம்.சி., தண்ணீரும் பங்கிட்டுக் கொள்ள வேண்டும்.ஆந்திரா கூடுதலாக நீரை சேமிக்க திட்டமிடுவதால், தமிழக விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
- நமது நிருபர் -